முன்னாள் ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்­டதை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு அரசாங்கம் அதி­க­ளவில் முயற்­சிக்­கி­றது.

இலங்­கையின் வர­லாற்றில், நிறை­வேற்று அதி­காரம் உள்ள ஜனா­தி­பதி பத­வியில் இருந்த ஒருவர் கைது செய்­யப்­பட்­டது இதுதான் முதல் முறை.

அது மாத்­தி­ர­மல்ல, ஆறு தட­வைகள் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்­தவர், ஆறு முறை பிர­த­ம­ரா­கவும் பத­வி­யேற்­றவர் ரணில்.

அப்­ப­டிப்­பட்­ட­வரின் கைது நட­வ­டிக்­கையை அர­சாங்கம் தொடர்ந்து நியா­யப்­ப­டுத்த முற்­ப­டு­வது அதன் பல­மான நிலையை காண்­பிக்­க­வில்லை.

குற்றப் புல­னாய்வுப் பிரிவு முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களின் அடிப்­ப­டையில், அவர் கைது செய்­யப்­பட்­டி­ருந்தால், அதற்­கான கார­ணத்தை நீதி­மன்­றத்தில் விளக்­க­ம­ளித்தால் போதும்.

அந்த காரணம் நியா­ய­மா­னது என ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­கின்ற போது, அதற்கு எதி­ராக யாரும் குரல் எழுப்ப முடி­யாது.

ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்ட சம்­ப­வத்தை நியா­யப்­ப­டுத்­து­வ­தற்கு, அர­சாங்கம் கடு­மை­யான முயற்­சி­களை மேற்­கொண்­டமை இரண்டு வித­மான சந்­தே­கங்­களை தோற்­று­வித்­தது.

அர­சாங்கம் கூறு­வது போல, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணைகள் சுயா­தீ­ன­மா­ன­வையா என்­பது ஒன்று.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைக் கைது செய்­வ­தற்கு அர­சாங்­கத்தின் தூண்­டுதல் இருந்­ததா என்­பது இன்­னொன்று.

ஏனென்றால், ரணில் விக்­கி­ர­ம­சிங்க விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட போதே, அவர் கைது செய்­யப்­ப­டுவார், விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­ப­டுவார் என ஒரு ‘யூரி­யூபர்’ கூறி­யி­ருந்தார். அவர் பொலிஸ் பாது­காப்­புடன் இருந்­தவர், அர­சாங்­கத்­துக்கு மிகவும் நெருக்­க­மா­னவர்.

அதே­வேளை, ரணில் விக்­கி­ர­ம­சிங்க விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யாகி கைது செய்­யப்­ப­டு­வ­தற்­கி­டையில், பாரா­ளு­மன்­றத்தில் அவர் மீது அமைச்­சர்கள் குற்­றம்­சாட்டும் வகை­யிலும், கைது நட­வ­டிக்­கையை நியா­யப்­ப­டுத்தும் வகை­யிலும் கருத்­துக்­களை வெளி­யிடத் தொடங்­கி­யி­ருந்­தனர். இதனால் இந்த கைது நட­வ­டிக்கை ஒரு திட்­ட­மிட்ட செயற்­பா­டாக இருக்­கலாம் என்ற சந்­தே­கங்­களை மக்கள் மத்­தியில் ஏற்­ப­டுத்­தி­யது.

இந்தக் கைது வேறு­பட்ட கருத்­துக்­க­ளையும் உணர்­வு­க­ளையும் தோற்­று­வித்­தி­ருந்­தாலும், இது சரி­யா­னதா என்ற கேள்வி நீடிக்­கி­றது.

அந்த சந்­தேக நிலை மக்கள் மத்­தியில் உரு­வா­கி­யி­ருப்­பது, அர­சாங்­கத்தின் தோல்வி எனலாம்.

இதனால் தான், அர­சாங்கம் அதி­க­ளவில் தனது வளங்­களை பயன்­ப­டுத்தி, தமக்குச் சாத­க­மான நிலையை ஏற்­ப­டுத்திக் கொள்ள முற்­ப­டு­கி­றது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க கைது செய்­யப்­பட வேண்­டி­யவர் அல்லர் என்றோ, அவர் கைது செய்­யப்­பட்­டது தவறு என்றோ யாரும் கூற வர­வில்லை. மாறாக, அவர் கைது செய்­யப்­பட்ட இந்த வழக்கு பற்­றியே அதிக விமர்­ச­னங்கள் வரு­கின்­றன.

ஏனென்றால், அவர் மீது பல குற்­றச்­சாட்­டு­களை அடுக்­கி­யி­ருந்தார் அமைச்சர் பிமல் ரத்­நா­யக்க.

• 1977 ஆம் ஆண்டு பொதுத்­தேர்தல் வெற்­றிக்கு பிறகு இடம்­பெற்ற வன்­மு­றை­க­ளுக்கு ரணில் பொறுப்­புக்­கூற வேண்­டி­யவர்,

• 1981இல் யாழ்ப்­பாணம் பொது நூலக எரிப்பு மற்றும், 1983 ஜூலை கல­வ­ரத்­துக்கும் பொறுப்­புக்­கூற வேண்­டி­யவர்,

• 1988–89 ஜே.வி.பி. கிளர்ச்­சியின் போது 60,000 பேர் படு­கொலை செய்­யப்­பட்­ட­தற்கு பொறுப்­பேற்க வேண்­டி­யவர்,

• பட்­ட­லந்த வதை முகாம் விட­யத்தில் பொறுப்­புக்­கூற வேண்­டி­யவர்,

• மத்­திய வங்­கியில் இடம்­பெற்­ற­தாகக் கூறப்­படும் 15 ஆயிரம் கோடி ரூபா பிணை­முறி மோச­டியில் தொடர்­பு­பட்­டவர் என வரி­சை­யாக, குற்­றச்­சாட்­டு­களை அடுக்­கி­யி­ருந்தார் பிமல் ரத்­நா­யக்க.

இவை அனைத்தும் மிகப்­பெ­ரிய அள­வி­லான குற்­றச்­சாட்­டுகள். 40 ஆண்­டு­க­ளுக்கு முன்­னரே அவர் கைது செய்­யப்­பட்­டி­ருக்க வேண்­டிவர் என்றும், தங்­களின் ஆட்­சியில் தான் அது நடந்து இருக்­கி­றது என்றும், பிமல் ரத்­நா­யக்க கூறி­யி­ருப்­பது முக்­கி­ய­மான விடயம்.

40 ஆண்­டு­க­ளாக அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்றால், இவ்­வ­ளவு காலமும், நாட்டில் தண்­ட­னையில் இருந்து தப்­பிக்கும் நிலை இருந்­தி­ருக்­கி­றது. அப்­ப­டி­யானால், இப்­பொ­ழுது அந்த நிலை இல்­லையா? தண்­ட­னையில் இருந்து தப்­பிக்­கின்ற நிலை முடி­வுக்கு கொண்டு வரப்­பட்டு விட்­டதா?

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வ­ரையில் தண்­ட­னையில் இருந்து தப்­பிக்கும் நிலை, இல்­லாமல் போயி­ருக்­கி­றதே தவிர, அர­சி­ய­லிலும் படை­க­ளிலும் அந்த நிலை மாற­வில்லை.

குற்­ற­மி­ழைத்த பெரும் எண்­ணிக்­கை­யான அர­ச­ ப­டை­யி­னரும் அதி­கா­ரி­களும் இன்­னமும் எந்த விசா­ர­ணை­க­ளு­மின்றி சுதந்­தி­ர­மாக இருக்­கி­றார்கள்.

அவர்கள் யாரும், தண்­ட­னையில் இருந்து தப்­பிக்க முடி­யாத நிலை இன்­னமும் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் அர­சியல், அவரைக் கொண்டு வந்து சிறைச்­சாலை வள­வுக்குள் கொண்டு வந்து நிற்க வைத்­தி­ருக்­கி­றது. அவர் தனக்குத் தானே வெட்­டிய கு­ழியில் அகப்­பட்டுக் கொண்­டி­ருக்­கிறார் என்­பதே சரி­யா­னது.

அர­சி­யலில் நரி என அழைக்­கப்­படும் அவரால் இந்த கைதி­லி­ருந்து தப்­பிக்க முடி­ய­வில்லை.

சஜித் பிரே­ம­தா­சவை ஆட்­சிக்கு வர­வி­டாமல் தடுப்­ப­தற்கு, தன்னால் முடிந்த அனைத்­தையும் அவர் மேற்­கொண்டார்.

கடந்த இரண்டு ஜனா­தி­பதி தேர்­தல்­க­ளிலும், அவரை தோற்­க­டிப்­ப­தற்கு உள்ளே இருந்தும் வெளியே இருந்தும் பல முயற்­சி­களைச் செய்தார்.

கடை­சி­யாக நடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டு, சஜித் பிரே­ம­தா­ச­வுக்கு கிடைக்க வேண்டிய வாக்­கு­களைப் பிள­வு­ப­டுத்­தினார். அதன் விளை­வா­கத்தான் அநு­ர­கு­மார திசா­நா­யக்க இல­கு­வாக ஆட்­சிக்கு வந்தார்.

அந்த ஆட்சி தான் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை சிறைக்குள் தள்­ளி­யது.

இது ரணில் தனக்கு தானே ஏற்­ப­டுத்திக் கொண்ட பொறி.

அவர் பொறியில் சிக்கிக் கொண்­டாலும், இந்தப் பொறி மிக மிக சிறி­யது.

அவ­ருக்கு எதி­ராக சுமத்­தப்­பட்டு இருக்­கின்ற குற்­றச்­சாட்டு அற்­பத்­த­ன­மா­னது என்­பதை அமைச்சர் பிமல் ரத்­நா­யக்­கவே ஒப்புக் கொண்­டி­ருக்­கிறார். நாட்டின் மிகப்­பெ­ரிய தலை­வரை மிகச் சிறிய குற்­றச்­சாட்டை வைத்து சிறைக்குள் தள்­ளு­வது என்­பது சாதா­ரண விடயம் அல்ல.

இது அவ­ரது அர­சியல் பாத்­தி­ரத்தை படு­கொலை செய்­வ­தற்கு ஒப்­பா­னது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவைப் பொறுத்­த­வ­ரையில் பொரு­ளா­தார நெருக்­க­டியில் இருந்து நாட்டை மீட்­டவர் என்று பெரு­மைக்கு உரி­யவர். இதற்­காக ஜனா­தி­பதி அநு­ர­கு­மார திசா­நா­யக்­கவே பாராட்டுத் தெரி­வித்­தி­ருந்தார்.

கோட்­டா­பய ராஜபக் ஷ சீர­ழித்து விட் டுப் போன பொரு­ளா­தா­ரத்தை, மீண்டும் மேல் நோக்­கிய பாதைக்கு கொண்டு வரு­வதில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆற்­றிய பணி குறைத்து மதிப்­பி­டத்­தக்­கது அல்ல.

அதற்­காக அவ­ருக்கு கொடுக்­கப்­பட்ட பரிசு தான் இது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாட்டை பொறுப்­பேற்று பொரு­ளா­தா­ரத்தை சரி­யான திசைக்கு கொண்டு வர தவறி இருந்தால் நாடு சீர­ழிந்­தி­ருக்கும். சின்­னா­பின்­ன­மாகி இருக்கும்.

தேசிய மக்கள் சக்தி ஆட்­சிக்கு வந்­தி­ருந்தால் கூட அவர்­களால், பூச்­சிய நிலையில் இருந்து பொரு­ளா­தா­ரத்தை மீட்கக் கூடிய நிலை ஏற்­பட்­டி­ருக்­காது.

ஆனால், ரணில் கடி­ன­மாக முயற்­சித்து, பொரு­ள­ாதார ரீதி­யாக நாட்டை ஓர­ள­வுக்கு இயல்பு கொண்டு வந்த பின்னர், அவரைத் தட்டி விட்­டி­ருக்­கி­றது அர­சாங்கம்.

ரணில் மீது மிகப்­பெ­ரிய குற்­றச்­சாட்­டுக்கள் இருந்தும் அதற்­காக அவர் கைது செய்­யப்­ப­ட­வில்லை, ஏன் அந்த பாரிய குற்­றங்கள் மீத அர­சாங்கம் செயற்­ப­ட­வில்லை என்றும் தெரி­ய­வில்லை.

மிகச்­சி­றிய குற்­றச்­சாட்டை வைத்து அவரை கைது செய்­ததன் மூலம், அர­சாங்கம் அரசியல் பழிவாங்கலில் ஈடுபடுகிறது என்ற கருத்தையே உருவாக்கியிருக்கிறது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரத்தில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பாரேயானால் அவர் மீது இந்தளவுக்கு அனுதாபம் ஏற்பட்டிருக்காது.

அவசரப்பட்டு அவரை சிறியதொரு குற்றச்சாட்டில் கொண்டு போய் சிக்க வைத்தது, அரசாங்கத்துக்கே பாதகமாக மாறியிருக்கிறது.

அதேவேளை, ரணில் கைது செய்யப்பட்டமை, அவருக்கு நன்மையையே தந்துள்ளதாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக் ஷான் பெல்லன கூறியிருக்கிறார். ஏனென்றால் இந்தக் கைது தான், ரணில் ஆபத்தான மருத்துவ நிலையில் இருப்பதை அவருக்கு காட்டிக் கொடுத்திருக்கிறது.

அப்படியானால் அவரது கைதை நியாயப்படுத்தி வந்த அரசாங்கம், இனி, அவரைக் கைது செய்ததன் மூலம் அவரது உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம் என்று பிரசாரம் செய்தாலும் ஆச்சரியமில்லை.

-சத்­ரியன்-

Share.
Leave A Reply

Exit mobile version