நாடு என்ற ரீதியில் நாம் 2028ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டொலர் கடனை மீள செலுத்த வேண்டும். அதற்கு பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக பேணிச் செல்ல வேண்டும். எனினும் இதுவரை நாம் அந்த இலக்கை எட்டவில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு குறுகிய காலத்துக்குள் பதில்களை தேட வேண்டியது அவசியமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், விலச்சிய பிரதேச செயலாளர் பிரிவில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இன்று நாட்டில் விவசாயம் செய்வது கடினமானதொன்றாக மாறிவிட்டது. உயர்தர உரமோ அல்லது உர மானியங்களோ கிடைத்தபாடில்லை. மலிவு விலையில் வேளாண்மைக்கான இரசாயன பொருட்கள் கிடைத்தபாடில்லை. உபகரணங்களின் விலை அதிகரிப்பிற்கு மத்தியில், உற்பத்திச் செலவுகளும் அதிகரித்துள்ளன. இவற்றோடு யானை-மனித மோதல் போன்ற காரணங்களால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டு சிரமங்களுக்கு மத்தியில் விவசாயம் இடம்பெற்று வருகிறது. ஆனாலும் இன்று நெல் அறுவடைக்கு உத்தரவாத  விலை கூட கிடைக்காத நிலையே காணப்படுகின்றது.

நெல்லின் உத்தரவாத விலை கிலோ ஒன்றுக்கு 120 ரூபாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், தேர்தல் காலத்தில், உத்தரவாத விலையை கிலோ ஒன்றுக்கு 150 ரூபாவாக , சட்டங்கள் மூலம் உறுதிப்படுத்தித் தருவோம் என்று இன்றைய ஆளும் தரப்பினர் கூறினர். ஆனால் இன்று நெல்லை 90 – 95 ரூபாவுக்கே கொள்வனவு செய்கின்றனர். இன்று, உத்தரவாத விலை களத்தில் யதார்த்தமான ஒன்றாக மாறவில்லை. வெறும் தேர்தல் வாக்குறுதியாகவே காணப்படுகின்றன.  அவ்வாறே உர மானியமும் காணப்படுகின்றது. இவற்றுக்கு மத்தியில் விவசாயிகள் பல சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இன்று நாடு விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல்லைக் கூட சுரண்டும் நிலையை அடைந்துள்ளது. நாட்டில் வறுமை உருவாகி, பல கடுமையான பிரச்சினைகளுக்கு வழிவகுத்துள்ளன. பணம் இல்லாமல், நுகர்வு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் குறைந்துள்ளன. 2028 முதல் ஆண்டுதோறும் டொலர் 5.6 பில்லியன் டொலர் கடனை அடைக்க பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 5 சதவீதமாக பேணிச் செல்ல வேண்டும். என்றாலும், இது நடந்தபாடில்லை. இந்தப் பிரச்சினைகளுக்கு பதில்களை தேட வேண்டியுள்ளது.

இன்று, நாட்டில் மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுகின்றது. அரச மருத்துவமனைகளில் கூட போதிய மருந்துகள் இல்லை. எனவே, தனியார் மருந்தகங்களில் மருந்து வாங்குவதற்கு நிறைய பணம் செலுத்த வேண்டிய நிலைக்கு நோயாளிகள் தள்ளப்பட்டுள்ளனர். கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதுமான இலவச மருந்துகளை வழங்க முடியாவிட்டால், இலவச சுகாதாரக் கொள்கை பயனற்றதாகிவிடும்.

விவசாயத்தைப் போலவே சுகாதாரமும் ஓர் அடிப்படை மனித உரிமையாகும். எனவே சுகாதாரத் துறைக்கு கூடிய பக்கபலத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும். இன்று விவசாயிகள் மறந்து கைவிடப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக விவசாயிகளை ஏமாற்ற முயற்சிக்கின்றனர். அவர்கள் அவ்வாறு செய்தாலும், அதிகாரம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஐக்கிய மக்கள் சக்தி விவசாயிகளைப் பாதுகாக்க முன்நிற்கும். அத்தோடு இதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாடுபடும் என்றார்.

Share.
Leave A Reply

Exit mobile version