வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (19) தவிசாளரும் ச.ஜயந்தன் தலைமையில் நடைபெற்றது. இதன்போது அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கால்நடைகளை அதன் உரிமையாளர்கள் நீண்ட கயிறுகளில் வீதியோரங்களில் கட்டுகின்றனர். இதனால் அந்த கால்நடைகள் ஒருபுறத்திலிருந்து மறுபுறம் செல்லும்போது அந்தக் கயிறு வாகனங்களில் சிக்குவதாலும், கால்நடைகள் குறித்து வருவதாலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
நேற்றையதினம் வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோது செட்டியார் மடம் சந்தியிலும் இவ்வாறு ஒரு வாகனம் மாடு ஒன்றின் கயிற்றில் சிக்கியது. அது பெரிய வாகனமாக இருந்ததால் ஆபத்துகள் ஏற்படவில்லை. இதுவே மோட்டார் சைக்கிள் அல்லது துவிச்சக்கர வண்டியாக இருந்திருந்தால் அங்கே பாரிய விபத்து ஏற்பட்டிருக்கும்.
இதுபோல கட்டாக்காலி நாய்கள் வீதியில் செல்வதாலும் இவ்வாறான விபத்துக்கள் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. எனவே இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.