நீங்கள் உங்களுக்கு தேவையான மருத்துவ காப்பீடு குறித்த தகவலை கூகுளில் எப்பொழுதாவது தேடியிருக்கிறீர்களா?
இப்படிப்பட்ட ஒரு தேடலில்தான், நாம் எளிதானது என நினைக்கும் இணையத் தேடல் மிகவும் சிக்கலானது என்பதை புரிந்து கொண்டுள்ளார் ஒரு இளைஞர். இவர்தான் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஜாம்பவானான கூகுள் நிறுவனத்திற்கே சவால் விடும் துணிச்சலுடன் வளர்ந்துள்ள, சென்னையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநரான அரவிந்த் ஸ்ரீனிவாஸ்.
பொதுவாகவே கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பர வருவாயை பெரிதும் சார்ந்துள்ளன. ஆனால் தான் தொடங்கியிருக்கும் பெர்ப்ளெக்சிட்டி (Perplexity AI) சரியான இணையதளங்களிலிருந்து தரவுகளை தொகுத்து தருவதோடு, இவற்றுக்கான உண்மையான இணைப்புகளையும் தருவதாக நம்புகிறார் அரவிந்த் ஸ்ரீனிவாஸ். இவர் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவர்.
ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், மற்ற ஏஐ தொழில்நுட்பங்களிலிருந்து தனது பெர்ப்ளெக்சிட்டி எவ்வாறு தனித்துவமானது என்பதை விளக்கியுள்ளார்.
“லார்ஜ் லேங்வேஜ் மாடல் என்று அழைக்கப்படும் மற்ற ஏஐ தொழில்நுட்பங்கள், தாங்களாக சிந்தித்து வாடிக்கையாளருக்கு திருப்தி அளிக்கும் முடிவை வழங்க முயற்சிக்கின்றன.
இந்த முடிவுகளுக்கான ஆதாரத்தை வழங்குவதில்லை. மாறாக பெர்ப்ளெக்சிட்டி ஆதார இணையதளங்களையும் சேர்த்து வழங்கும்” என்று அரவிந்த் ஸ்ரீனிவாஸ் குறிப்பிடுகிறார்.
இந்தியாவின் இளம் பில்லியனர்
2000ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் கூகுள் நிறுவனம், இணையத்தை வசப்படுத்தத் தொடங்கிய நேரத்தில் சென்னையில் கணினி குறித்த கனவுகளோடு வளர்ந்த சிறுவன்தான் அரவிந்த். இன்று 31 வயதேயாகும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இந்தியாவின் புதிய இளம் பில்லியனராக வளர்ந்துள்ளார்.
M3M Hurun India Rich List 2025 தரவுகளின் படி, இவரது சொத்து மதிப்பு சுமார் 21 ஆயிரம் கோடி ரூபாய். இது மட்டுமல்ல, கூகுள் நிறுவனத்துக்குச் சொந்தமான குரோம் பிரவுசரை விலைக்கு கேட்கும் துணிச்சலும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ்-க்கு இருக்கிறது.
குரோம் பிரவுசரை விலைக்கு விற்கும் நிலையில் கூகுள் நிறுவனம் இல்லை என்றாலும் தமது ஏஐ அடிப்படையிலான கோமட் (Comet) பிரவுசர், குரோமுக்கு கடுமையான சவாலை அளிக்கும் என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் நம்புகிறார்.
இது பற்றி குறிப்பிடும் அரவிந்த், “நீங்கள் யார், எங்கிருந்து தேடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல, மாறாக உங்களின் கேள்வி என்ன என்பது தான் எங்களுக்கு முக்கியம்” என கூறுகிறார். கூகுள் டீப் மைண்ட் மற்றும் ஓபன் ஏஐ ஆகியவற்றில் பணிபுரிந்த பின்னர், இவற்றில் இருக்கும் சிக்கல்களைப் புரிந்து கொண்டு, இதற்கான தீர்வாக பெர்ப்ளெக்சிட்டி மற்றும் கோமட்-ஐ முன்வைக்கிறார் அரவிந்த்.
முனைவர் பட்டம் பெற்ற சாதனையாளர்
தொழில்நுட்ப நிறுவனங்களை தொடங்கிய பலரும் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்கள் என நகைச்சுவையாக குறிப்பிடும் ஸ்ரீனிவாஸ் பிரபலமான TED Talk நிகழ்வில் பங்கேற்ற போது, “நான் ஒரு கல்வியாளர் என்று நீங்கள் சொல்லலாம்” என்று கூறினார்.
தனது கல்விப் பின்னணி, செயற்கை நுண்ணறிவு (AI) பற்றியும், நிஜ உலகப் பிரச்னைகளைத் தீர்க்க அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது பற்றியுயும் ஆழமாகப் புரிந்துகொள்ள தமக்கு உதவுவதாக ஸ்ரீனிவாஸ் நம்புகிறார்.
பெர்ப்ளெக்சிட்டியை வேறுபடுத்துவது எது?
கூடுதலாக, இது அசல் இணையதளங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியது, எனவே உண்மைகளை நீங்களே சரிபார்க்கலாம்.
பொதுவாக ஏஐ பொறிகள் தகவலை யூகிக்கின்றனஅல்லது உருவாக்குகின்றன(Hallucination). இதற்கு பதிலாக, பெர்ப்ளெக்சிட்டி சரிபார்க்கப்பட்ட உள்ளடக்கத்தை கவனமாக சுருக்கமாகக் கூறுகிறது.
“பெர்ப்ளெக்சிட்டியில் உள்ள ஒவ்வொரு பதிலும் மேற்கோள்கள் வடிவில் இணையத்திலிருந்து ஆதாரங்களுடன் வருகின்றன.
சிறப்பான அடுத்தடுத்த கேள்விகளைக் கேட்க உங்களை பெர்ப்ளெக்சிட்டி அனுமதிக்கிறது.” என்று ஸ்ரீனிவாஸ் தனது TED Talk இல் கூறினார்.
இதன் பொருள் நீங்கள் ஒரு பதிலைப் பெறும்போது, தகவல் எங்கிருந்து வந்தது என்பதை நீங்கள் சரிபார்க்கலாம், இது நம்பிக்கையை அதிகரிக்கிறது, மேலும் தகவல்களை அறிய உங்களை ஊக்குவிக்கிறது.
இது ஒரு பெரிய மாற்றமாகும், ஏனெனில் பல ஏஐ கருவிகள் தகவல்களை எங்கிருந்து பெற்றன என்பதை விளக்காமல் பதில்களை மட்டுமே தருகின்றன.
பெர்ப்ளெக்சிட்டி, அரவிந்த் ஸ்ரீனிவாஸ், சென்னை தமிழர், கூகுளுக்கு சவால் விட்ட தமிழர்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கூகுளுக்கு சவால் விட காரணம் இதுதான்!
2022 இல் தொடங்கப்பட்டதிலிருந்து, பெர்ப்ளெக்சிட்டி (Perplexity) வேகமாக வளர்ந்துள்ளது. இந்த சேவை இப்போது ஒவ்வொரு மாதமும் 780 மில்லியனுக்கும் அதிகமான தேடல்களைக் கையாளுகிறது. (https://www.perplexity.ai/help-center/en/articles/10352155-what-is-perplexity) இந்தியாவைப் பொறுத்தவரையிலும், பாரதி ஏர்டெல் போன்ற நிறுவனங்களுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து மக்களை சென்றடைய முயற்சிக்கிறது.
கூகுளுடன் போட்டியிடுவதில் உள்ள சவால்கள் குறித்து ஸ்ரீனிவாஸ் வெளிப்படையாகப் பேசினார்,
குறிப்பாக விளம்பரங்களைக் காண்பிப்பதன் மூலம் கூகுள் பல பில்லியன்களை சம்பாதிக்கிறது. “அவர்கள் ஏன் Google.com ஐ பெர்ப்ளெக்சிட்டி போல மாற்றக்கூடாது? ஏனென்றால், அப்படி செய்தால் அவர்கள் விளம்பரங்களிலிருந்து வரும் அனைத்து பணத்தையும் இழப்பார்கள்,” என்று அவர் ப்ளூம்பெர்க் (Bloomberg) நேர்காணலில் கூறினார். இது தான் கூகுள் குரோமை விலைக்கு கேட்கும் துணிச்சலையும் ஸ்ரீனிவாஸ்க்கு கொடுக்கிறது.
பெர்ப்ளெக்சிட்டி போன்ற ஏஐ-க்கள் மனித ஆர்வத்தை ஊக்குவிக்கும், கற்றலை விரைவாகவும் சுவாரஸ்யமாகவும் மாற்றும் என்று அவர் நம்புகிறார்.
“ஒவ்வொரு பதிலும் புதிய கேள்விகளுக்கு வழிவகுக்கிறது, ஏஐ அவற்றை முன்பை விட சிறப்பாகவும் வேகமாகவும் கேட்க உதவுகிறது.”
(TED Talk மற்றும் ப்ளூம்பெர்க் டி.வி.யில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பகிர்ந்த தகவல்கள் அடிப்படையில் இந்த கட்டுரை எழுதப்பட்டுள்ளது)