கிழக்கு ஜெரூசலேம் மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிராந்தியம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு அதன் அறிக்கையை 2025 செப்டெம்பர் 16 ஆம் திகதி வெளியிடடது.
முன்னாள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும் புகழ்பெற்ற தென்னாபிரிக்க சட்ட நிபுணருமான நவநீதம் ‘ நவி ‘ பிள்ளை காசா பள்ளத்தாக்கில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையை (Genocide ) செய்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
” காசா பள்ளத்தாக்கில் பாலஸ்தீனர்களை முழுமையாக அல்லது பகுதியாக அழித்தொழிப்பதற்கான இனப்படுகொலை நோக்கத்துடன் இஸ்ரேலிய அரசாங்கமும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளும் செயற்பட்டிருக்கின்றன என்ற முடிவுக்கு ஆணைக்குழு வந்திருக்கிறது” என்று அறிக்கை கூறியிருக்கிறது.
இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் அதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கும் சர்வதேசட்டத்தின் கீழான சட்டரீதியான கடப்பாடுகளை நிறைவேற்றுமாறு இஸ்ரேலையும் சகல அரசுகளையும் ஆணைக்குழு அதன் அறிக்கையில் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
எல்லோருக்கும் தெரிந்ததைப் போன்றே, பிரதமர் பெஞ்சமின் ‘ பீபி ‘ நெதான்யாகுவின் இஸ்ரேலிய அரசாங்கம் கடந்த இரு வருடங்களாக பொதுவில் பாலஸ்தீனர்களுக்கும் குறிப்பாக காசா வாசிகளுக்கும் எதிராக காட்டு மிராண்டித்தனமான இராணுவத் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டு வருகிறது.
அந்த இராணுவ நடவடிக்கையை ஒரு இனப்படுகொலைப் போர் என்று உலகம் பூராவுமுள்ள இடதுசாரிகள் தொடக்கம் தாராளவாதிகள் வரை மனச்சாட்சியுடைய சகல மக்களும் கடுமையாக கண்டனம் செய்திருக்கிறார்கள். இஸ்ரேல் மீது தெரிவிக்கப்படும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு பெருமளவுக்கு நம்பகத்தன்மையையும் கனதியையும் கொடுப்பதாக நவி பிள்ளையின் அறிக்கை அமைந்திருக்கிறது.
எதிர்பார்க்கப்பட்டதைப் போன்றே, ஆணைக்குழுவின் விசாரணை முடிவுகளை ‘ போலியானவை ‘ என்று கண்டனம் செய்திருக்கும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சு ‘எக்ஸ் ‘ (ருவிற்றர்) சமூக ஊடகத்தில் செய்த பதிவு ஒன்றில் அறிக்கையை தயாரித்தவர்கள் ‘ ஹமாஸ் இயக்கத்தின் பினாமிகளாக ‘ செயற்பட்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறது. ‘
ஆணைக்குழுவின் அறிக்கை மற்றவர்களினால் சலவை செய்யப்பட்டு திரும்பத்திரும்ப கூறப்பட்ட ஹமாஸின் பொய்யுரைகளிரேயே முழுமையாகத் தங்கியிருக்கிறது’ என்று அமைச்சு கூறியிருக்கிறது.
‘ திரிபுபடுத்தப்பட்டதும் போலித்தனமானதுமான அறிக்கையை திட்டவட்டமாக நிராகரிக்கும் இஸ்ரேல் இந்த விசாரணை ஆணைக்குழுவை உடனடியாக ஒழித்துவிடுமாறு கோருகிறது’ என்று அது மேலும் கூறியிருக்கிறது.
விசாரணையின் கண்டுபிடிப்புக்களை கண்டனம் செய்திருக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலின் நிரந்தரப் பிரதிநிதி டானியல் மெறோன் அவற்றை ‘ ஊழல்தனமானவை’ , ‘ போலியானவை’ , அவதூறுக்கூச்சல் ‘ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஆணைக்குழுவின் அறிக்கை வெளியாகி இரு வாரங்கள் கடந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போரை முடிவுக்கு கொண்டுவருவதையும் காசாவில் அமைதியை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது என்று கூறிக்கொண்டு தனது 20 அம்சத் திட்டத்தை அறிவித்தார்.
அறிவார்ந்த அவதானிகள் அந்த திட்டத்தை காசாவை இணைத்துக் கொள்வதற்கான கெடுதியான நோக்கத்துடனான சதியை நிறைவு செய்வதற்கு காலத்தை இழுத்தடிப்பதற்கு ட்ரம்ப் – நெதான்யாகு இரட்டையர் செய்யும் தந்திரம் என்று சந்தேகத்துடன் நோக்குகிறார்கள்.
தனது திட்டத்தை ட்ரம்ப் அறிவித்த தருணம் இன்னொரு எதிர்மறையான விளைவுக்கு வழிவகுத்திருக்கிறது. காசாவில் இனப்படுகொலை செய்வதாக குற்றம் சுமத்தும் ஐக்கிய நாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையின் மீதான உலகின் கவனம் திசை திருப்பப்படுகின்றது. இத்தகைய பின்னணியில் இந்த கட்டுரை நவி பிள்ளையின் தலைமையிலான ஆணைக்குழுவின் அறிக்கை மீது கவனம் செலுத்துகிறது.
பாலஸ்தீனம் தொடர்பாக மூன்று உறுப்பினர்களைக் கொண்ட சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் அமைக்கப்பட்டது. அதன்கான உறுப்பினர்கள் பேரவையின் 47 உறுப்பு நாடுகளினாலும் நியமாக்கப்பட்டனர்.
நவி பிள்ளைக்கு புறம்பாக காணி, வீட்டு உரிமைகள் தொடர்பான இந்திய நிபுணர் மிலூன் கோத்தாரியும் ( வீடமைப்பு தொடர்பிலான ஐக்கிய நாடுகளின் முதல் விசேட அறிக்கையாளராகப் பணியாற்றியவர்), அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தரணி கிறிஸ் சிடோற்றியும் ( மியன்மாருக்கான விசேட ஆலோசனை சபையின் தாபகர் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் உட்பட பல்வேறு பாத்திரங்களை வகித்தவர்) ஏனைய இரு உறுப்பினர்களுமாவர்.
ஆணைக்குழு புதிதாக வெளியிட்டிருக்கும் அறிக்கை, 1948 இனப்படுகொலை உடன்படிக்கையின் (Genocide convention ) கீழ் வரையறுக்கப்பட்டதன் பிரகாரம் ஒரு தேசிய, இன அல்லது மதக்குழுவுக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற இனப்படுகொலையாக அமைகின்ற ஐந்து செயற்பாடுகளில் நான்கு செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வருவதற்கான நியாயமான ஆதாரங்களை கண்டறிந்த இதுகாலவரையான “மிகவும் வலிமையானதுமான அதிகாரபூர்வமானதுமான ” அறிக்கை என்று வர்ணிக்கப்படுகிறது.
சுருக்கமாகச் சொல்வதானால், 2023 அக்டோபரில் போர் தொடங்கிய நாளில் இருந்து இஸ்ரேலிய அரசு காசா பள்ளத்தாக்கில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இனப்படுகொலைக் குற்றத்தை செய்து கொண்டிருக்கிறது.
இனப்படுகொலை
இனப்படுகொலையின் வரைவிலக்கணம் பற்றி முக்கியமான ஒரு கேள்வி இந்த சந்தர்ப்பத்தில் எழுகிறது. எத்தகைய செயற்பாடுகள் ஒரு இனப்படுகொலையாக அமைகின்றன?
இனப்படுகொலைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பதற்கான பொறுப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் ( UN Office on Genocide Prevention and Responsibility to Protect ) இனப்படுகொலை தொடர்பான பின்புலம் மற்றும் வரலாறு பற்றிய பொருத்தமான விபரங்களை தருகிறது.
அதில் சில பகுதிகள் வருமாறு ;
இனப்படுகொலை (Genocide ) என்ற சொல்லை போலந்து சட்டத்தரணியான ராபீல் லெக்மன் 1944 ஆம் ஆண்டில் தனது ” Axis Rule in Occupied Europe ” என்ற நூலில் முதற்தடவையாக பயன்படுத்தினார். அது கிரேக்க மொழியில் ‘ genos ‘ ( இனம் அல்லது குலம் என்பது அர்த்தம்) என்ற முன்னொட்டையும் (Prefix) இலத்தீன் மொழியில் ‘cide ‘ ( கொலை என்பது அர்த்தம் ) என்ற விகுதியையும் கொண்டது.
லெம்கின் அந்த சொல்லை பெரும் இன அழிப்பின்போது (Holocaust ) யூத மக்களை திடடமிட்ட முறையில் கொலை செய்த நாசி கொள்கைகளை வர்ணிப்பதற்கு ஓரளவு விருத்திசெய்த அதேவேளை வரலாற்றில் குறிப்பிட்ட மக்கள் குழுக்களை அழிப்பதை நோக்கமாகக்.கொண்டு முன்னெடுக்கப்பட்ட முன்னைய நடவடிக்கைகளை வர்ணிப்பதற்கும் பயன்படுத்தினார்.
பிறகு லெம்கின் இனப்படுகொலை ஒரு சர்வதேச குற்றச்செயலாக அங்கீகரிக்கப்பட்டு முறைப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி முன்னெடுக்கப்பட்ட இயக்கத்துக்கு தலைமை தாங்கினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 1946 ஆம் ஆண்டில் சர்வதேச சட்டத்தின் கீழான ஒரு குற்றச்செயலாக முதற்தடவையாக இனப்படுகொலை அங்கீகரிக்கப்பட்டது.
இனப்படுகொலக் குற்றச்செயலை தடுத்தல் மற்றும் தண்டித்தல் தொடர்பான 1948 உடன்படிக்கையில் ( இனப்படுகொலை உடன்படிக்கை ) அந்த சொல் முறைப்படுத்தப்பட்டது. அந்த உடன்படிக்கை ( 2022 ஏப்ரில் அளவில் ) 153 நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
பொதுவில் வழக்கமான சர்வதேச சட்டத்தின் பகுதியாக அமையும் கோட்பாடுகளை உருவகப்படுத்துவதாக இனப்படுகொலை உடன்படிக்கை அமைகிறது என்று சர்வதேச நீதிமன்றம் ( International Court of Justice ) திரும்பத்திரும்ப கூறியது.
அதன் அர்த்தம் அரசுகள் இனப்படுகொலை உடன்படிக்கையை ஏற்று அங்கீகரிக்கின்றனவோ இல்லையோ சர்வதேச சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட ஒரு குற்றச்செயலாக இனப்படுகொலை அமைகிறது என்ற கோட்பாட்டின அடிப்படையில் அந்த உடனபடிக்ககைக்கு அவை கட்டுப்பட்டவையே என்பதாகும்.
இனப்படுகொலை தடுப்பு என்பது சர்வதேச சட்டத்தின் கீழ் ஒரு கட்டாய விதிமுறை என்றும் அதன் விளைவாக அதை மீறுவது அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூட சர்வதேச நீதிமன்றம் கூறியது.
இனப்படுகொலை உடன்படிக்கையில் உள்ளடங்கியிருக்கும் இனப்படுகொலைக் குற்றச்செயலின் வரைவிலக்கணம் நீண்ட பேச்சுவார்த்தைச் செயன்முறைகளின் விளைவானது என்பதுடன் 1948 ஆம் ஆண்டில் உடன்படிக்கை வரையப்பட்ட வேளையில் ஐக்கிய நாடுகளின் சபையின் உறுப்பு நாடுகள் மத்தியில் எட்டப்பட்ட விட்டுக்கொடுப்பையும் பிரதிபலித்தது.
இதே விதிமுறைகளின் பிரகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் ( International Criminal Court) றோம் சட்டத்திலும் (பிரிவு 6 ) வேறு சர்வதேச மற்றும் கலப்பு நியாயாதிக்கங்களின் ( Other international and hybrid jurisdictions ) சட்டங்களிலும் இனப்படுகொலை வரையறை செய்யப்பட்டிருக்கிறது. பல அரசுகள் அவற்றின் உள்நாட்டுச் சட்டங்களிலும் இனப்படுகொலையை குற்றச்செயலாகக் குறிப்பிட்டிருக்கின்றன ; ஏனைய அரசுகள் இனிமேல்தான் அவ்வாறு செய்யவேண்டியிருக்கிறது.
வரைவிலக்கணம்
இனப்படுகொலைக் குற்றச்செயலை தடுத்தல் மற்றும் தண்டித்தல் தொடர்பான உடன்படிக்கை.
பிரிவு 2
தேசிய, இன, குல அல்லது மத குழுவை முழுமையாக அல்லது பகுதியாக அழித்தொழிப்பதை நோக்கத்துடன் செய்யப்படுகின்ற பின்வரும் செயற்பாடுகளில் எந்தவொன்றும் தற்போதைய உடன்படிக்கையில் இனப்படுகொலையாக அர்த்தப்படுகிறது ;
1) ஒரு குழுவின் உறுப்பினர்களை கொலை செய்தல் ;
2) ஒரு குழுவின் உறுப்பினர்களுக்கு உடல் ரீதியாக அல்லது உளரீதியாக பாரதூரமான தீங்கை விழைவிப்பது ;
3) ஒரு குழுவுக்கு முழுமையாக அல்லது பகுதியாக பௌதீக அழிவைக் கொண்டு வருவதற்கென்று திட்டமிட்டு வாழ்க்கை நிலைமைகளை திட்டமிட்டு ஏற்படுத்துதல் ;
4) ஒரு குழுவுக்குள் பிறப்புக்களை தடுப்பதை நோக்கமாகக் கொண்டு திணிக்கப்படும் நடவடிக்கைகள் ;
5) ஒரு குழுவின் சிறுவர்களை பலவந்தமாக இன்னொரு குழுவுக்கு மாற்றுதல்.
இனப்படுகொலைக் குற்றச்செயல்
இனப்படுகொலைக் குற்றச்செயல் சர்வதேச அல்லது சர்வதேசம் சாராத ஆயுதமோதல் ஒன்றின் பின்புலத்தில் இடம்பெறலாம், ஆனால் அதேவேளை சமாதானச் சூழ்நிலை ஒன்றின் பினபுலத்திலும் அவ்வாறு இடம்பெறலாம் என்று இனப்படுகொலை உடன்படிக்கையின் முதலாவது பிரிவு நிறுவுகிறது. சமாதான சூழ்நிலையில் பொதுவில் இனப்படுகொலைக் குற்றச்செயலுக்கான வாய்ப்பு பொதுவில் குறைவு என்றாலும் இடம்பெறக்கூடியது சாத்தியமே.
இனப்படுகொலைக் குற்றச்செயலை தடுப்பதற்கும் தண்டிப்பதற்கும் உடன்படுகின்ற தரப்புகளுக்கு இருக்கின்ற கடப்பாடுகளையும் அதே பிரிவு கூறுகிறது.
எத்தகைய செயற்பாடுகள் இனப்படுகொலையாக அமைகின்றன என்பதைப் பற்றிய பரவலான விளக்கப்பாடு சர்வதேச சட்டத்தின் கீழான நியமத்தின் உள்ளடக்கத்தை விடவும் பரந்ததாக இருக்க வாய்ப்பிருக்கிறது. இனப்படுகொலை உடன்படிக்கையின் இரண்டாவது பிரிவு இனப்படுகொலைக் குற்றச்செயலின் ஒரு குறுகிய வரைவிலக்கணத்தைக் கொண்டிருக்கிறது.
அது பின்வரும் இரு கூறுகளைக் கொண்டிருக்கிறது ;
1) மனரீதியான கூறு ( Mental element ; ஒரு தேசிய, இன, குல அல்லது மதக் குழுவை முழுமையாக அல்லது பகுதியாக அழித்தொழிக்கும் நோக்கம்,
2) உடல்ரீதியான கூறு ( Physical element ) பின்வரும் செயற்பாடுகளை உள்ளடக்கியது ;
குழுவின் உறுப்பினர்களைக் கொலை செய்தல்.
குழுவின் உறுப்பினர்களுக்கு உடல்ரீதியான அலலது மனரீதியான பாரதூரமான தீங்கைச் செய்தல்.
ஒரு குழுவுக்கு முழுமையாக அல்லது பகுதியாக பௌதீக அழிவைக் கொண்டு வருவதற்கென்று திட்டமிட்டு வாழ்க்கை நிலைமைகளை ஏற்படுத்துதல்.
ஒரு குழுவிற்குள் பிறப்புக்களை தடுப்பதை நோகாகமாகக் கொண்டு நடவடிக்கைகளை திணித்தல்.
ஒரு குழுவின் சிறுவர்களை இன்னொரு குழுவுக்கு பலவந்தமாக மாற்றுதல்.
நோக்கம் ( Intent)
நோக்கமே தீர்மானிப்பதற்கு மிகவும் சிக்கலான கூறு ஆகும். கொடுமைகளைச் செய்பவர்கள் ஒரு தேசிய, இன, குல அல்லது மதக் குழுவொன்றை உடல்ரீதியாக அழித்தொழிப்பதற்கான நோக்கத்தை கொண்டிருப்பதை நிரூபிப்பது இனப்படுகொலைக் குற்றச்செயலைப் பொறுத்தவரை முக்கியமானது.
கலாசார நிரமூலமோ அல்லது ஒரு குழுவை வெறுமனே சிதறிப்போகச் செய்வதற்கான நோக்கமோ இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு போதுமானதல்ல. விசேடமான நோக்கமே இனப்படுகொலைக் குற்றச்செயலை தனித்துவமானதாக்குகிறது.
இனப்படுகொலையால் பாதிக்கப்படுபவர்கள் உடன்படிக்கையின் கீழ் பாதுகாக்கப்படுகின்ற நான்கு குழுக்களில் ( அரசியல் குழுக்களில் நீங்கலாக ) ஏதாவது ஒரு குழுவின் மெய்யான உறுப்பினர் அல்லது அக்குழுவின் உறுப்பினராக உணரப்படுபவர் என்ற காரணத்துக்காக தற்செயலாக அல்ல, வேண்டுமென்றே இலக்கு வைக்கப்படுகிறார்கள்.
அழிப்பின் இலக்கு ஒரு குழுவே தவிர, அதன் உறுப்பினரோ அல்லது தனிநபரோ அல்ல என்பதே இதன் அர்த்தமாகும். குழுவின் ஒரு பகுதி ( புவியியல் ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட பிரதேசம் உட்பட) அடையாளம் காணப்படக்கூடியதாக இருக்கும்போது அதற்கு எதிராக மாத்திரமும் இனைப்படுகொலை செய்யப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது.
ஊடக மகாநாடு
ஐக்கிய நாடுகள் விசாரணை ஆணைக்குழுவின் தலைவரான நவி பிள்ளை என்று அறியப்படும் கலாநி நவநீதம் பிள்ளை அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு ஊடக மகாநாடு ஒன்றை நடத்தினார்.
அந்த நிகழ்வு பற்றி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் விளக்கமான தகவல்களை தருகின்ற அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது அறிக்கையின் கண்டுபிடிப்புகள் மற்றும் கடைப்பிடிக்கப்பட்ட செயல் முறைகள் குறித்து பெருமளவு தெளிவைத் தந்தது.
அதன் பொருத்தமான பகுதிகள் வருமாறு ;
கிழக்கு ஜெரூசலேம் மற்றும் இஸ்ரேல் உட்பட ஆக்கிரமிக்கப்படட பாலஸ்தீனப் பிராந்தியம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணைக்குழு 2023 அக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வுகளையும் அதற்கு பிறகு இரு வருடங்களாக இடம்பெற்ற நிகழ்வுகளையும் விசாரணை செய்துவந்திருக்கிறது.
இனப்படுகொலையை தடுத்தல் மற்றும் தண்டித்தல் தொடர்பான 1948 உடன்படிக்கையினால் வரையறை செய்யப்பட்ட ஐந்து இனப்படுகொலைச் செயல்களில் நான்கு செயல்களை இஸ்ரேலிய அரசாங்கமும் இஸ்ரேலிய பாதுகாப்பு கடைகளும் செய்திருக்கின்றன என்ற முடிவுக்கு ஆணைக்குழு வந்திருக்கிறது.
கொலை செய்தல், உடல்ரீதியான அல்லது மனரீதியான தீங்கிழைத்தல், பாலஸ்தீனர்களை முழுமையாக அல்லது பகுதியாக அழிப்பதற்கென்று திட்டமிட்ட முறையில் வாழ்க்கை நிலைமைகளை ஏற்படுத்துதல் மற்றும் பிறப்புக்களை தடுப்பதை நோக்கமாகக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகியவையே அவையாகும்.
இஸ்ரேலிய சிவிலியன் மற்றும் இராணுவ அதிகாரிகள் வெளிப்படையாக கூறியவையும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் நடத்தைப் பாங்கும் காசா பள்ளத்தாக்கில் பாலஸ்தீனர்களை ஒரு குழு என்ற வகையில் முழுமையாக அல்லது பகுதியாக அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இனப்படுகொலை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கி்ன்றன என்பதை வெளிக்காட்டுகின்றன.
” காசாவில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு இஸ்ரேல் பொறுப்பாகும்” என்று ஆணைக்குழுவின் தலைவர் நவி பிள்ளை கூறினார். ” இனப்படுகொலை உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிரமாணங்களுக்கு பொருந்தக்கூடிய நடவடிக்கைகளின் ஊடாக காசாவில் பாலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது என்பது தெளிவானது.
” காசாவில் பாலஸ்தீனக் குழுவை அழித்தொழிக்கும் பிரத்தியேகமான நோக்கத்துடன் இரு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட இனப்படுகொலை செயற்பாடுகளை திட்டமிட்ட இஸ்ரேலிய அரசாங்கத்தின் உயர்மட்டத்தில் உள்ளவர்களே இந்த அட்டூழியக்களுக்கு பொறுப்பானவர்கள்” என்று நவி பிள்ளை கூறினார்.
” இனப்படுகொலை நடவடிக்கைகளை விசாரணை செய்து அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் என்று கூறப்படுபவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கத் தவறியதன் மூலமாக இனப்படுகொலை மேற்கொள்ளப்படுவதை தடுக்கவும் தண்டிக்கவும் இஸ்ரேல் தவறியிருக்கிறது என்பதையும் ஆணைக்குழு கண்டறிந்திருக்கிறது”
ஆணைக்குழுவின் அறிக்கை ஆணைக்குழுவின் முன்னைய விசாரணைகள் சகலதையும் 2023 அக்டோபர் 7 தொடக்கம் 2025 ஜூலை 25 வரை காசாவில் இஸ்ரேலிய படைகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள் மற்றும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் நடத்தை மற்றும் அறிக்கைகள் தொடர்பிலான உண்மைசார்ந்ததும் சட்டரீதியானதுமான கண்டுபிடிப்புக்களையும் அடிப்படையாகக் கொண்டதாகும். அறிக்கை இனப்படுகொலை நடவடிக்கைகளையும் இனப்படுகொலை நோக்கத்தையும் குறித்து விரிவாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்வை அடிப்படையாகக் கொண்டது.
இராணுவ நடவடிக்கைகள்
இனப்படுகொலை செயற்பாடுகளை நிறுவுவதில் ஆணைக்குழு காசாவில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளைை ஆராய்ந்தது. கொலைகள் மற்றும் முன்னென்றும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையிலான பாலஸ்தீனர்களுக்கு தீங்கு விழைவிப்பது
பட்டினிக்கு வழிவகுக்கும் வகையில் மனிதாபிமான உதவிகளை தடுப்பது உட்பட முற்றுமுழுதான ஒரு முற்றுகையை திணிப்பது
காசாவில் சுகாதாரப் பராமரிப்பு மற்றும் கல்வி முறைமைகளை திட்டமிட்ட முறையில் நிர்மூலம் செய்வது ; திட்டமிட்ட முறையில் பாலியல் மற்றும் பால் அடிப்படையிலான வன்முறைகளைச் செய்வது
நேரடியாக சிறுவர்களை இலக்கு வைப்பது
மத மற்றும் கலாசார தலங்கள், நிறுவனங்கள் மீது திடடமிட்ட முறையிலும் பரந்தளவிலும் தாக்குதல்களை மேற்கொள்வது ; சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிப்பது ஆகியவை அந்த செயற்பாடுகளில் அடங்கும்.
காசாவில் பட்டினியையும் பாலஸ்தீனர்களின் வாழ்வில் மனிதாபிமானமற்ற நிலைமைகளையும் திணிப்பது உட்பட காசாவில் இஸ்ரேலிய அரசாங்கத்தினதும் இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளினதும் நடத்தைகளின் பாங்கை ஆராய்ந்த ஆணைக்குழு இனப்படுகொலை நோக்கமே நியாயமான அனுமானமாக இருக்க முடியும் என்ற தீர்மானத்துக்கு வந்தது.
” சர்வதேச நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட இடைக்கால நடவடிக்கைகளையும் உறுப்பு நாடுகள், ஐக்கிய நாடுகள் அலுவலகங்கள், மனித உரிமைகள் அமைப்புகள் மற்றும் சிவில் சமூக குழுக்களின் எச்சரிக்கைகளையும் அப்பட்டமாக அலட்சியம் செய்த இஸ்ரேல் காசாவில் பாலஸ்தீனர்களை அழித்தொழிக்கும் தந்திரோபாயத்தை தொடர்ந்து முன்னெடுத்தது ” என்று நவி பிள்ளை கூறினார்.
” நடவடிக்கைகளின் போக்கை மாற்றிக் கொள்ளும் நோக்கம் இஸ்ரேலிய அரசாங்கத்துக்கு இல்லை என்பதை ஆணைக்குழு கண்டறிந்தது. மாறாக, இஸ்ரேலிய அரசாங்கம் இப்போது இரு வருடங்களாக காசாவில் அதன் இனப்படுகொலை நடவடிக்கைகளை உறுதியாக தொடர்ந்து முன்னெடுத்திருக்கிறது. காசாவில் உடனடியாக இனப்படுகொலையை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தி சச்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட இடைக்கால நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முழுமையாக இணங்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேலிய அரசியல் தலைவர்களினதும் இராணுவ தலைவர்களினதும் செயற்பாடுகளை இஸ்ரேலிய அரசின் செயற்பாடுகளாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். அதனால், காசாவில் பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனப்படுகொலையைத் தடுக்கத் தவறியதற்கும் இனப்படுகொலையைச் செய்ததற்கும் அதற்கு பொறுப்பானவர்களைத் தண்டிக்கத் தவறியதற்குமான பொறுப்பை இஸ்ரேலிய அரசே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு ஆணைக்குழு வந்தது.
இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசாக் ஹெர்சொக், பிரதமர் பெஞ்சமின் நெதான்யாகு, அன்றைய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ற் ஆகியோர் இனப்படுகொலையைத் தூண்டியிருப்பதாகவும் அவ்வாறு தூண்டியதற்கு எதிராக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து தண்டிக்க இஸ்ரேலிய அரசு தவறியிருப்பதாகவும் ஆணைக்குழு முடிவுக்கு வந்தது.
மற்றைய இஸ்ரேலிய தலைவர்களும் இராணுவத் தலைவர்களும் வெளியிட்ட அறிக்கைகளையும் அவர்கள் கூறியவற்றையும் ஆணைக்குழு முழுமையாக மதிப்பீடு செய்யவில்லை. அவர்களும் இனப்படுகொலைச் ஙெயற்பாடுகளைத் தூண்டினார்களா என்பதை மதீப்பீடு செய்வது குறித்து ஆணைக்குழு பரிசீலிக்கிறது.
இஸ்ரேலிய அரசாங்கம் காசா பள்ளத்தாக்கில் இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டுவந்து சர்வதேச நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கை உத்தரவுகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது உட்பட அதன் சர்வதேச கடப்பாடுகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று ஆணைக்குழு வரியுறுத்துகிறது.
பாலஸ்தீனர்களை பட்டினி போடும் கொள்கையை இஸ்ரேல் நிறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகளின் அமைப்புகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சகல சர்வதேச மனிதாபிமான அமைப்புகளினதும் ஊழியர்கள் மனிதாபிமான உதவிகளை தங்குதடையின்றி காசாவில் பாலஸ்தீனர்களுக்கு வழங்குவதை உறுதி செய்வதற்கு வசதியாக முற்றுகையை அகற்ற வேண்டும்.
இனப்படுகொலைச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஆயுதங்களையும் மற்றைய உபகரணங்களையும் இஸ்ரேலுக்கு அனுப்புவதை உறுப்பு நாடுகள் நிறுத்த வேண்டும் என்று ஆணைக்குழு வலியுறுத்துகிறது. உறுப்பு நாடுகள் அவற்றின் பிராந்தியத்திற்குள்ளும் நியாயாதிக்கத்திற்குள்ளும் வருகின்ற தனிநபர்களும் அமைப்புக்களும் இனப்படுகொலை செயற்பாடுகளுக்கும் இனப்படுகொலையைத் தூண்டுவதற்கும் உதவாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
இனப்படுகொலையில் நேரடியாக அல்லது மறைமகமாக ஈடுபட்டிருக்கக்கூடிய தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் எதிராக விசாரணைகளை நடத்தி சட்ட நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமாக பொறுப்புக்கூறலுக்கான நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் எடுக்க வேண்டும் ஆணைக்குழு கேட்டிருக்கிறது.
காசாவில் பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் முன்னெடுக்கும் இனப்படுகொலை நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் மௌனமாக பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இனப்படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கான தெளிவான அறிகுறிகளும் சான்றுகளும் வெளிக்கிளம்பும்போது அந்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதற்கு செயலில் இறங்காமல் இருப்பது இனப்படுகொலைக்கு துணைபோவதற்கு சமமானதாகும்” என்று நவி பிள்ளை கூறினார்.
இனப்படுகொலையை நிறுத்து
இனப்படுகொலையை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் ஒவ்வொரு நாளும் உயிர்கள் பலியாவதுடன் சர்வதேச சமூகத்தின் நம்பகத்தன்மையும் அருகிப்போகிறது. காசாவில் இனப்படுகொலையை நிறுத்துவதற்கு சகல அரசுகளும் அவற்றுக்கு இருக்கக்கூடிய மார்க்கங்களையும் வளங்களையும் பயன்படுத்தவேண்டிய சட்டக் கடப்பாடு சகல அரசுகளுக்கும் இருக்கிறது என்று நவி பிள்ளை கூறினார்.
டி.பி.எஸ். ஜெயராஜ்