சர்வதேச நாணய நிதியத்தின் நிர்பந்தத்துக்கு ஏற்ப மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்காக ஜனாதிபதி பதவியையும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும், உள்ளுராட்சி மன்றங்களில் பெரும்பான்மை அதிகாரத்தையும் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கவில்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை மாவட்டம், மெதிரிகிரியவில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நடமாடும் சேவை மற்றும் அங்கத்தவர் சேர்க்கை வேலைத்திட்டத்தில் உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்தார்.
மின்சாரக் கட்டணங்களை 33 சதவீதத்தால் குறைப்பதாக வாக்குறுதி அளித்த தற்போதைய அரசாங்கம், தற்போது 6.8 சதவீதத்தால் அதிகரிப்பதற்குத் தயாராகி வந்தது. இது, சர்வதேச நாணய நிதியத்தின் தாளத்திற்கு ஏற்ப தலையாட்டி பொம்மை போல் நடப்பதன் காரணமாகும். அரசாங்கம் நாணய நிதியத்தின் பிரதிநிதியாக அல்லாமல், தேர்தல்கள் மூலம் மக்களின் பிரதிநிதியாகவே ஆட்சிக்கு வந்தது என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை அதிகரித்தால், ஐக்கிய மக்கள் சக்தி வீதியில் இறங்கிப் போராடும் என்று எச்சரிக்கை விடுத்தமையால், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்சாரக் கட்டணத்தில் திருத்தங்களை மேற்கொள்ளாதிருக்க தீர்மானித்தது. எனவே, வாக்குறுதியளித்தபடி அடுத்த மூன்று மாதங்களுக்குள் மின்சாரக் கட்டணங்களை 33 சதவீதத்தால் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
9000 ரூபா மின்சாரக் கட்டணத்தை 6000 ரூபாவாகக் குறைப்போம் என்ற வாக்குறுதியை நம்பியே மக்கள் அரசாங்கத்தை நியமித்தனர். எனவே, மக்கள் வீதியில் இறங்கிப் போராடி மின்சாரக் கட்டணத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும், இதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமைத்துவம் வழங்கத் தயார் என்றும் அவர் தெரிவித்தார்.

