;நடிகர் விஜய்யின் கரூர் த.வெ.க கூட்ட நெரிசலில் 41 பேர் கொல்லப்பட்ட விஷயத்தில் ஆளாளுக்கு ஒவ்வொரு கதை சொன்னபடி இருக்கிறார்கள்.

இந்நிலையில், ‘திருச்செங்கோட்டிலிருக்கும் கிரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸில் பணியாற்றும் வடமாநிலத் தொழிலாளர்கள் கூலிகளாக அழைத்து வரப்பட்டு, சதிச் செயல் அரங்கேற்றப் பட்டிருக்கிறது’ என்றொரு புதுத் தியரி காற்றுவாக்கில் கசிந்துவந்தது.

அதை மேற்கொண்டுத் தோண்டித் துருவப் போனால்…. அப்படியொரு டெக்ஸ்டைலே இல்லை என்பதுதான் செம ட்விஸ்ட். ’த.வெ.க கூட்டத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் உள்ளே நுழைந்து அசம்பாவிதத்தை ஏற்படுத்தினார்கள்’,

`ஆளும் கட்சி ஆட்கள் கூட்டத்துக்குள் அனுப்பப்பட்டார்கள்’, `தி.மு.க-வினர் கூட்டத்திற்குள் நுழைந்து விஜய் மீது செருப்பை எறிந்தார்கள்’… மொத்தத்தில் ‘இதில் சதி இருக்கிறது’ என்றேதான் ஆரம்பத்திலிருந்தே சொல்லி வருகின்றனர், த.வெ.க-வினர்.

 

ஆனால், ஆரம்பத்திலிருந்தே தமிழ்நாடு அரசு மற்றும் தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் தரப்பில் இதை மறுத்தே வருகின்றனர்.

ஊடகத்துறை செயலாளர் அமுதா ஐ.ஏ.எஸ் செய்தியாளர்களைச் சந்தித்து, `விஜய் காலதாமதமாக வந்ததால் கூட்டம் அதிகரித்தது.

காலை முதல் பொதுமக்கள் நீண்ட நேரமாக த.வெ.க தலைவர் விஜய்யை பார்ப்பதற்காக உணவு, தண்ணீர் இல்லாமல் காத்திருந்தனர்.

காவல்துறையினர் தரப்பில் போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டது. கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழப்புகள் நடந்தன’ என விளக்கம் அளித்தார்.

அதேசமயம், விஜய்யின் `கொள்கை எதிரி’யான பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி தோழர்களான அ.தி.மு.க உள்பட அனைவருமே `கரூரில் நடந்தது சதிதான்.

உண்மையை வெளிக்கொண்டுவர சிபிஐ விசாரணை வேண்டும்’ என்று முழங்கிக் கொண்டே இருந்தனர்.

அதன்படியே… `கரூர் சம்பவத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்குத் தொடுத்து,

சி.பி.ஐ விசாரணையைக் கேட்டுப் பெற்றிருக்கும் உற்சாகத்தோடு பத்திரிகை யாளர்களைச் சந்தித்த த.வெ.க-வின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, ‘கரூர் சம்பவத்தில் மறைந்திருக்கும் சதி கண்டிப்பாக வெளியில் வரும்‘ என்று டெல்லியில் வைத்தே பத்திரிகை யாளர்களிடம் முழங்கினார்.

<இந்த நிலையில்தான், ‘அது என்ன சதியாக இருக்கும்?’ என்று தேடிக் கொண்டே இருந்த நமக்கு, ‘திருச்செங்கோட்டில் கிரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ் என்கிற பெயரில் ஒரு நிறுவனம் இயங்கிவருகிறது.

அந்த நிறுவனத்தில் பணியாற்றும் வடமாநில ஊழியர்களில் சிலர் கூலிக்கு பேசி வரவழைக்கப்பட்டு, திட்டமிட்டு கரூர் கூட்டத்தில் பிரச்னையைக் கிளப்பினார்கள்.

இதனால் ஏற்பட்ட நெரிசலில்தான் 41 பேர் கொல்லப்பட்டனர்’ என்கிற அந்த பகீர் தகவல் காத்துவாக்கில் வந்து சேர்ந்தது.

மேற்கொண்டு இந்த விஷயத்தைப் பல தரப்பட்டவர்களிடமும் பேசியபோதும் உறுதியாக எந்தத் தகவல்களும் கிடைத்த பாடில்லை. ‘அங்கே சொன்னார்கள்… இங்கே சொன்னார்கள்’ என்றபடிதான் சொன்னார்களே தவிர, நேரடியாகத் தெரியும் என்று ஒருவரும் சொல்லவில்லை.

ஆனால், அவர்கள் சொன்னதன் சாராம்சம், கொஞ்சம் பகீர் ரகமாகவே இருந்தது.‘கரூர் எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான செந்தில்பாலாஜியும் தி.மு.க-வின் கூட்டணியில் இருக்கும் ‘கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி’யின் பொதுச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான ஈஸ்வரனும் நண்பர்கள்.

அந்த ஈஸ்வரனுக்கு ‘கிரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ்’ உரிமையாளர் பழக்கம். அதை வைத்து, அங்கே வேலைபார்க்கும் வடமாநில ஊழியர்கள் 10 பேரை, விஜய் பங்கேற்ற கரூர் பிரச்சாரக் கூட்டத்துக்கு, அழைத்துச் சென்றுள்ளனர்.

அவர்களை வைத்துதான் திட்டமிட்டு கூட்டத்தில் கலவரம் ஏற்படுத்தப்பட்டது. அந்த டெக்ஸ்டைல், முன்னாள் அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதியின் தம்பியுடையது’ என்று சொன்னார்கள்.

நம்பவும் முடியவில்லை…. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. இதையடுத்து, ‘கீரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ்’ பற்றி இணைய தளங்களில் தேடினோம்.

அந்தப் பெயரில் எந்த நிறுவனமும் சிக்கவில்லை. ‘சரி, இணையதளத்தில் அந்த நிறுவனத்தின் பெயர் இடம்பெறாமல்கூட இருக்கலாம்‘ என்று நமக்கு நாமே சமாதானம் சொல்லிக் கொண்டு, திருச்செங்கோட்டுக்கே வண்டியை விட்டோம்.<

/போய் இறங்கினால்… திரும்பிய பக்க மெல்லாம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனங்கள். குறைந்தது 200 நிறுவனங்களாவது இருக்கும்.

அவற்றில் 90% தறி தொழிற்சாலைகள்தான். பலவற்றுக்கும் பெயர் பலகைகள்கூட இல்லை.

திருச்செங்கோடு – சேலம் சாலை, திருச்செங்கோடு – பரமத்தி வேலூர் சாலை, திருச்செங்கோடு – ராசிபுரம் சாலை உள்ளிட்ட பல இடங்களில் செயல்பட்டு வரும் கைத்தறி, விசைத்தறி, ஆட்டோமேட்டிக் தறி போன்ற தொழிற்சாலைகளில் விசாரித் தோம்.

ஆனால், `கிரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ்’ பற்றி யாருக்கும் தெரியவில்லை.தகவலில் பரவியபடி, திருச்செங்கோடு பட்டறைமேடு பகுதிக்குச் சென்று விசாரித்தபோது,

அங்கு லாரி பட்டறைகளே அதிகம் இருந்தன. சில விசைத்தறி தொழிற்சாலைகளும் செயல்பட்டு வந்தன.

ஆனால், பெயர்கூட இல்லாத அளவுக்கான மிகச்சிறிய விசைத்தறிக் கூடங்கள் அவை.`கிரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ்’ என்ற பெயரில் அந்தப் பகுதியில் எந்த நிறுவனமும் இல்லை.

வட மாநிலத்தைச் சேர்ந்த நபர்களும் அங்கு தென்படவில்லை. பெரும்பாலும் பெண்கள் மற்றும் வயதான வர்களே விசைத்தறி கூடங்களில் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர்.

தொடர்ந்து, கைத்தறி, விசைத்தறி சங்கங்களின் பிரதிநிதிகளிடம் விசாரித்தபோது, அவர்களுக்கும் ‘கிரீஸ்வரா டெக்ஸ்டைல்ஸ்’ என்ற ஒன்றே இருப்பதாகத் தெரியவில்லை.

இதையடுத்து, அ.தி.மு.கழக முன்னாள் எம்.எல்.ஏ-வான பொன்.சரஸ்வதியைத் தொடர்புகொண்டு பேசினோம்.

‘‘எனக்கு சகோதரர் யாருமில்லை. என் அலுவலகத்தில் உதவியாளராக பாலு என்பவர் உள்ளார். அவர் என் தம்பி மாதிரி, அவருக்கு டெக்ஸ் டைல்ஸ் எதுவும் இல்லை. அலுவலகத்தைத் தான் பார்த்துக கொள்கிறார்’’ என்று சொன்னார்.

<இதற்குமேல் கொங்கு ஈஸ்வரன், செந்தில் பாலாஜி ஆகியோரிடமெல்லாம் விளக்கம் கேட்கத் தோன்றவில்லை.

ஆக மொத்தத்தில், காவல்துறை நடவடிக்கைக்குப் பின்னரும், கரூர், த.வெ.க கூட்டம் குறித்து, பல `தியரி’கள் நாள்தோறும் புதிது புதிதாக வெளிவந்துகொண்டே இருக்கின்றன.

இப்போது விசாரணை சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. `திருச்செங்கோடு தியரி’ உள்பட த.வெ.க-வினர் சொல்லிவரும் ‘சதி’க் கதைகளெல்லாம் உண்மையா, வதந்தியா என்கிற விவாதத்தை சி.பி.ஐ சீக்கிரமே முடித்து வைக்கும் என்று நம்புவோம்.</6pBlZghPCveSRkPJ3Phc” />

Share.
Leave A Reply

Exit mobile version