கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொந்த வாழ்க்கை சுவாரசியங்களால் நிறைந்தது. அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பு பேசுபொருளாகியுள்ளது.

கால்பந்து உலகில் கோடிகளில் பணத்தை குவிக்கும் ஜாம்பவான் வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் சொந்த வாழ்க்கை சுவாரசியங்களால் நிறைந்தது. 5 குழந்தைகளுக்கு தந்தையான பின் காதலியை, திருமணம் செய்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார்.

40 வயதானாலும் ஆட்டத்திறனில் எந்தக்குறையும் இல்லாமல் சர்வதேச கால்பந்து களங்களை அலங்கரித்துவரும் ரொனால்டோ, பிரபல ஊடகவியலாளரான பியர்ஸ் மோர்கனுக்கு அளித்துள்ள பேட்டிதான் உலகமெங்கும் இப்போது பேசுபொருள்.

சவுதி அரேபியாவின் அல் நஸர் அணிக்காக விளையாடிவரும் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது இணையர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸ் உடனான திருமணத் திட்டத்தை அறிவித்திருக்கிறார்.

உலகக் கோப்பைப் போட்டியில் போர்ச்சுகல் அணியை சாம்பியன் ஆக்குவதே தனது லட்சியம் எனத் தெரிவித்திருக்கிறார்.

கோப்பையுடன் சேர்ந்து தங்கள் திருமண விழாவை நடத்த முடிவு செய்துள்ளதாக அவர் கூறினார். இந்த ஜோடிக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.

இந்த ஐந்து குழந்தைகளின் கதைகளும், வெவ்வேறு கிளைக்கதைகளை கொண்டவை. ரொனால்டோவுக்கு ஐந்து குழந்தைகள் இருந்தாலும், ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் அவருக்குப் பிறந்தது இரண்டு குழந்தைகள்தான்.

தற்போது போர்ச்சுகல் இளையோர் அணியில் விளையாடும் ரொனல்டோவின் மூத்த மகன் கிறிஸ்டியானோ சாண்டோஸை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கச் செய்தார் ரொனால்டோ.

இதன் பிறகு ஈவா மரியா, மாடியோ என்ற இரட்டையர்களையும் வாடகைத் தாய் மூலமே பெற்றேடுக்கச் செய்திருக்கிறார்.

இவர்கள் மூன்று பேரின் தாயார் யார் என்பதை ரொனால்டோ ரகசியம் காத்து வருகிறார். இதன்பின்னர் ஜார்ஜினா ரோட்ரிக்ஸுடன் வாழ்ந்து வருகிறார் ரொனல்டோ. இவர்களுக்கு 2017இல் பிறந்தவர் அலானா மார்ட்டினா, 2022இல் பிறந்தவர் பெல்லா எஸ்மெரால்டா.

பெல்லா எஸ்மெரால்டா இரட்டை குழந்தைகளில் ஒன்றாக பிறந்தவர், அவருடன் பிறந்த ஆண் குழந்தை பிரசவத்தின்போது இறந்துவிட்டது.

ஐந்து குழந்தைகளையும் ஒரே குடும்பமாக அன்புடன் வளர்த்து வருகிறார் ரொனால்டோ. இந்த நிலையில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பு குறித்து சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையான விமர்சனங்கள் அதிகளவில் பகிரப்படுகின்றன.

போர்ச்சுகல் அணி உலகக் கோப்பையை வெல்வதும் திருமணமும் ரொனால்டோவுக்கு கனவாகவே போய்விடுமோ என நகைச்சுவையுடன் கேள்வி எழுப்புகின்றனர் கால்பந்து ரசிகர்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version