ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ‘திருடன்-போலீஸ்’ விளையாடுவதாகச் சொல்லி மருமகள் ஒருவர் தன் மாமியாரை உயிரோடு எரித்ததாக காவல்துறை கூறியிருக்கிறது.
இந்தக் கொலையை அந்தப் பெண் ஒரு விபத்தாக ஜோடிக்க முயற்சி செய்ததாகவும், பின்னர் விசாரணையில் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன் மாமியாரைக் கொல்ல யூ டியூபில், ‘வயதான பெண்ணைக் கொல்வது எப்படி’ என்று தேடி சில வீடியோக்கள் பார்த்ததாக மருமகள் ஜெயந்தி லலிதா கூறியிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. ஜெயந்தி லலிதாவை காவல்துறை கைது செய்திருக்கிறது.
தன் மாமியார் ஜெயந்தி கனகமகாலட்சுமியை லலிதா கொல்ல நினைத்தது ஏன்? போலீஸ் விசாரணையில் அவர் என்ன சொன்னார்?
விசாகப்பட்டினம் பெண்டுத்ரி காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து பெண்டுத்ரி காவல் நிலைய போலீஸார் மற்றும் மேற்கு மண்டல ஏசிபி பிரித்வி தேஜ் ஆகியோர் பிபிசியிடம் பேசினர்.
என்ன நடந்தது?
காவல்துறை கூற்றின்படி…
பெண்டுத்ரி காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலை அப்பன்னாபாலெத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.
‘வர்ஷினி ஹோம்ஸ்’ என்ற அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் தீப்பிடித்திருப்பதாகவும், ஒரு வயதான பெண் எரிந்துகொண்டிருப்பதாகவும் ஒரு ஆண் போலீஸுக்கு தெரிவித்திருக்கிறார்.
உடனடியாக பெண்டுத்ரி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் சதிஷ் குமார் காவல்துறையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார். அங்கு 63 வயதான ஜெயந்தி கனகமகாலக்ஷ்மி நாற்காலியில் அமர்ந்தபடி இறந்து கிடந்ததைப் பார்த்தார்கள். அவருடைய கைகள், கால்கள் மற்றும் கண்கள் கட்டப்பட்டிருந்ததற்கான அறிகுறிகள் தெரிந்திருக்கின்றன.
முதல் கட்ட விசாரணையின்போது, “என் மாமியார் டிவி ஷார்ட்-சர்க்கியூட் ஆனதால் இறந்துவிட்டார்” என்று அந்தப் பெண் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
“நாங்கள் சம்பவ இடத்தை அடைந்தபோது அந்த வீட்டில் மருமகள் லலிதாவுடன் இரண்டு குழந்தைகள் இருந்தன. டிவி வயர்கள் எரிந்து ஷார்ட்-சர்க்கியூட் ஆனதில் தீப்பிடித்ததாக லலிதா எங்களிடம் கூறினார். ஆனால், சம்பவ இடத்தில் அப்படி நடந்ததற்கான எந்த அறிகுறிகளும் எங்களுக்குத் தெரியவில்லை” என்றார் ஏசிபி பிரித்வி தேஜ்.
“அத்தை கனகமகாலட்சுமியும் என் குழந்தைகளும் திருடன் போலீஸ் விளையாடிக் கொண்டிருந்தனர். அதனால் நாற்காலியில் அமர்ந்து அவர் கால், கை மற்றும் கண்களைக் கட்டியிருந்தனர். சரியாக அந்நேரம் டிவி ஷார்ட்-சர்க்கியூட் ஆகி இந்த விபத்து நடந்துவிட்டது” என்று லலிதா போலீஸிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த விபத்தில் லலிதாவின் மகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டதாக ஏசிபி பிரித்வி தேஜ் கூறினார்.
“லலிதாவின் கணவர் ஒரு மதகுரு. இந்த விபத்து குறித்து தெரிந்ததும் அவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் பேசிய பிறகு எங்களுக்கு மருமகள் லலிதாவின் மேல் சந்தேகம் வந்தது. அதனால் அவருடைய செல்ஃபோனை எடுத்து, அவருடைய இணைய தேடலை சோதனை செய்தோம்” என்றார்.

யூ-டியூப் தேடல்: ‘ஒரு வயதான பெண்ணைக் கொல்வது எப்படி?’
“லலிதாவுடைய இணைய தேடலை சோதித்தபோது, ‘ஒரு வயதான பெண்ணைக் கொல்வது எப்படி’ என்று அவர் பலமுறை தேடியிருப்பது தெரிந்தது.
இது அவர் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியது. நாங்கள் மீண்டும் விசாரித்த போது, அவர் தன் மாமியாரைக் கொன்றதை ஒத்துக்கொண்டார்.
அவருக்குத் திருமணம் ஆனதில் இருந்தே தன் மாமியாரோடு நல்ல உறவு இருந்திருக்கவில்லை. சின்னச்சின்ன விஷயங்களுக்கும் தன்மீது அவர் குற்றம் சுமத்தியதாகவும், ஒவ்வொரு நாளும் தன்னை திட்டிக்கொண்டே இருந்ததாகவும், அதனால் அவரைக் கொல்ல முடிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார்” என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.
“தன் மாமியாரைக் கொல்ல முடிவு செய்தபின், கடந்த 6-ஆம் தேதி, சிம்மச்சலம் அருகே கோஷலாவிலுள்ள ஒரு பெட்ரோல் பங்குக்கு தன் இருசக்கர வாகனத்தில் சென்று 100 ரூபாய்க்கு பெட்ரோல் வாங்கியிருக்கிறார். அதை தன் வீட்டில் மறைத்து வைத்திருக்கிறார்” என்றார் ஏசிபி பிரித்வி தேஜ்.
போலீஸ் விசாரணையின் போது, “என் மாமியாரோடு திருடன்-போலீஸ் விளையாடுமாறு என் குழந்தைகளிடம் கூறினேன். அப்போது அவர் கை, கால்களை நாற்காலியோடு கட்டினேன். கண்களையும் கட்டினேன். அதுவும் விளையாட்டின் ஒரு பகுதி என்று அவரிடம் கூறினேன்” என்று சொன்னார் லலிதா.
அதன்பின் தன் திட்டப்படி தன் மாமியாருக்கு தீ மூட்டியிருக்கிறார் லலிதா. அதன்பின் அதை விபத்தாக ஜோடிக்க முயற்சி செய்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
“மாமியார் அலறுவது யாருக்கும் கேக்கக்கூடாது என்பதற்காக தொலைக்காட்சியில் சத்தத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். அதன்பின் ‘என் மாமியார் உயிரோடு எரிகிறார். காப்பாற்றுங்கள்’ என்று அக்கம் பக்கத்தினரை அழைப்பதுபோல் கூச்சலிட்டிருக்கிறார்”
ஆனால், இறுதியில் லலிதாவின் திருடன்-போலீஸ் விளையாட்டு பற்றி தெரியவந்த போது காவல் துறையினருமே அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். தான் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டதாகவும், அதனாலேயே தன் மாமியாரைக் கொன்றதாகவும் லலிதா விசாரணையில் கூறியிருக்கிறார்.
கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் ஜெயந்தி லலிதாவை காவல்துறை கைது செய்ததாக மேற்கு மண்டல ஏசிபி கூறினார்.
சம்பவம் நடந்த வீடு