தமிழ் முஸ்லிம் நல்லிணக்கம் மனம் திறந்த உரையாடலே ஐக்கியத்தை வளர்க்கும் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குநருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவர் ஊடகங்களுக்கு அனும்பிய ஊடக அறிக்கையிலெயே இவ்வாறு தெரவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது
முஸ்லிம் – தமிழ் நல்லிணக்கம் பற்றிய உரையாடல் மீண்டும் களத்திற்கு வந்துள்ளது. கட்சிகளுக்கப்பால் சிவில் தரப்பிலிருந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டது.
கடந்த 1ம் திகதி இது தொடர்பான முயற்சி ஒன்று வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவால் மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் இதற்கான கூட்டம் இடம்பெற்றது.
முஸ்லிம்கள் பட்ட துயரங்கள்
வடக்கு – கிழக்கின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் தமிழ் – முஸ்லிம் மக்கள் ஐந்நூறு பேர் வரை கலந்து கொண்டனர். முஸ்லிம் தரப்பிலிருந்து முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாரூக் உட்பட சிவில் அமைப்புகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் பட்ட துயரங்கள் பற்றி இப் பெண் பிரதிநிதிகள் உரையாற்றினர். தமிழ்த் தரப்பிலிருந்து இக்கட்டுரையாளரும் சமூக செயற்பாட்டாளர் செல்வின் இரேனியசும் உரையாற்றினர். இருதரப்பும் தங்கள் தங்கள் மனக் காயங்களை நாகரிகமாக வெளிப்படுத்தினர்.
கூட்டம் மிகச் சுமூகமாகவும் அன்னியோன்னியமாகவும் இடம்பெற்றது. கூட்டம் முடிவடைந்த பின்னரும் கூட அன்னியோன்னியமான வகையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்றன.
அண்மைக்காலத்தில் தமிழ் மக்களும், முஸ்லிம்; மக்களும் மனம் விட்டுக் கலந்துரையாடக் கூடிய களமாக இது இருந்தது எனலாம். இருதரப்புமே தங்கள் மனக் காயங்களை தெளிவாக முன் வைப்பதற்கு தயங்கியிருக்கவில்லை கடந்த கால அரசியல், வன்முறை காரணமாக தமிழ் – முஸ்லிம் உறவுகளில் பாரிய இடைவெளி ஏற்பட்டிருந்தது.
இரண்டு தரப்பிலும் ஆழமான மனக் காயங்கள் உண்டு. மனக் காயங்களை ஆற்றுவதற்கு ஒரே வழி இருதரப்பும் மனம் விட்டு உரையாடுதலே! அதற்கான களங்கள் பல இடங்களில் பல வழிகளில் திறக்கப்படுதல் அவசியம். இந்த உரையாடல்களினூடாக தவறுகளை பரஸ்பரம் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்கும்.
சிவில் அமைப்புகள் இதற்கான ஆரம்ப முயற்சிகளை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே! முரண்பாடு தீர்த்தல் என்பது இன்று முக்கிய கற்கை துறையாக வளர்ச்சி கண்டுள்ளது. இலங்கையிலும் பல பல்கலைக்கழகங்களில் இது தொடர்பான கற்கை நெறிகள் கற்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

