வடக்கு மற்றும் தெற்கு மக்களின் பொதுவான பிரச்சினைகள் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் சுமந்திரனுடன் கலந்துரையாடியதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் சுமந்திரனை சந்தித்து விட்டு பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,
“மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகள், இளைஞர்களின் வேலையின்மை தொடர்பான பிரச்சினைகள் வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் பொதுவான பிரச்சினைகளாக உள்ளன.
கூட்டணி அரசியல்
நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அவர்களுக்கு அழுத்தம் கொடுப்பதே எங்களின் குறிக்கோளாகும்.
எங்களுடன் இணைந்து செயற்படுவது கட்சி என்ற அடிப்படையில் தமிழரசுக் கட்சி தீர்மானிக்கும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் வாக்களித்தமை தொடர்பிலான ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
“கூட்டணி அரசியல் செயற்பாடுகள் இவ்வாறே இருக்கும். அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களுக்கு சார்பாக வரவு செலவுத் திட்டம் அமைந்திருப்பதால் அவர்கள் ஆதரவாக வாக்களித்திருப்பார்கள்.
நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்
2011ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வரவு செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்திருந்தார்கள்” எனத் தெரவித்துள்ளார்.
இதேவேளை, நுகேகொடை போராட்டம் தொடர்பில் பதிலளிக்கையில்,
“அரசாங்கத்தின் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்த பலரும் 21ஆம் திகதி நுகேகொடை போராட்டத்திற்கு வருகை தருவார்கள். போராட்டத்திற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை அரசாங்கமே கணக்கிட்டு கூறுவார்கள்.
அத்துடன், கடந்த வரவு செலவுத் திட்டத்தின் 20 சதவீத வாக்குறுதிகள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டிருந்தன. 159 உறுப்பினர்களையும் பிரதேச சபைகளையும் வைத்துக்கொண்டு 20 சதவீத வாக்குறுதிகள் மாத்திரமே நிறைவேற்றப்பட்டுள்ளன என்றால் பேசுவதற்கு ஒன்றுமில்லை” எனக் கூறியுள்ளார்.
மேலும், போராட்டத்தில் மகிந்த ராஜபக்ச கலந்துகொள்வாரா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் கலந்துகொள்ளவில்லை என்றே அவர் பதிலளித்துள்ளார்.

