நெல்லையில் முதலிரவில் காதலனுடன் சென்ற புதுப்பெண்ணை, மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்க வந்தபோது ஏற்பட்ட தகராறில் கல் வீசி கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. இதுதொடர்பாக அப்பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு களக்காட்டில் உள்ள ஒரு தனியார் கல்வியியல் கல்லூரியில் பி.எட் படித்து வந்தார்.

அதே கல்லூரியில் களக்காடு அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண் வேலை பார்த்து வந்தார். அந்த பெண்ணுக்கும் இளைஞருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

இந்த நிலையில், அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த மாதம் 31-ம் தேதி அந்த பெண்ணுக்கும், வேறு ஒருவருக்கும் திருமணம் நடத்தப்பட்டது.

களக்காடு காவல் நிலையம்

ஆனால், திருமணம் நடந்த அன்று முதலிரவில் அந்தப்பெண், கணவருக்கு தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி, காதலனுடன் காரில் நெல்லைக்கு சென்று விட்டார்.

புதுப்பெண் மாயமானதால் அவரது கணவர் பெண் வீட்டாருக்கு தகவல் கூறியுள்ளனர். இது குறித்து பெண்ணின் சகோதரர் களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து மாயமான புதுப்பெண்ணை தேடி வந்தனர். இதனிடையே அந்த இளைஞரின் அண்ணன், திருமணமான புதுப்பெண்ணை அழைத்து வந்ததை அறிந்து இது தவறு என தனது தம்பிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

அதே நேரத்தில் திருமணமான நிலையில், வீட்டை விட்டு வெளியே வந்தது தவறு என, அந்த பெண்ணிற்கும் அறிவுரை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த புதுப்பெண், தன்னை தனது தாயார் வீட்டில் விட்டுவிடும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணை அந்த இளைஞர் மற்றும் அவரது அண்ணன், களக்காட்டில் உள்ள அவரது வீட்டில் கொண்டு விட்டுள்ளனர்.

அப்போது தாயார் வீட்டில் இருந்த அந்த பெண்ணின் சகோதரர் உட்பட உறவினர்கள் 4 பேர் இளைஞர் வந்த காரின் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளனர்.

அவர்கள் மீது கற்களையும் வீசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் சகோதரர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version