குளிர்காலங்களில் இருமல், காய்ச்சல் ஏற்படுவதைப் போல குழந்தைகளிடம் உதடுகள் வெடிப்பதும் பெரியவர்களிடம் கால் பாத வெடிப்பும் ஏற்படுகிறது.

கால் பாத வெடிப்பு பொதுவான பிரச்னைதான் என்றாலும் தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்கவில்லையென்றால் அவை பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதாக மாறலாம். பாதங்களில் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் குளிர்ந்த காற்றுபடுகிறபோது அவை மேலும் வலியை ஏற்படுத்தக்கூடும்.

குளிர் காலங்களில் பாத வெடிப்பு ஏன் அதிகம் ஏற்படுகிறது? அதற்கான காரணங்கள் என்ன? என்ன தற்காப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

கால் பாத வெடிப்பு

மருத்துவர் ஷாஹினா ஷபீக்

“பாதத்தில் உள்ள தோலில் குறைவான எண்ணெய் சுரப்பிகள் மட்டுமே உள்ளன. இது இயற்கையாகவே உலர வைக்கிறது. குளிர்காலங்களில் இவை மேலும் குறைவதால் பாத வெடிப்பு ஏற்படுகிறது,” என்றார் தோல் மருத்துவரான ஷாஹினா ஷபீக்.

மேலும் அவர், “வயது கூடக்கூட பாதங்களில் நெகிழ்ச்சித்தன்மை குறைந்து, எண்ணெய் சுரப்பிகள் மூலம் இயற்கையான எண்ணெய் உற்பத்தியாவதும் குறைகிறது. இது தோலை உலர வைத்து வெடிப்புக்கு உள்ளாக்குகிறது.” என்றும் தெரிவித்தார்.

தடிப்புத் தோல் அழற்சி, பூஞ்சை தொற்றுகள், அரிக்கும் தோலழற்சி, நீரிழிவு நோய் மற்றும் தைராய்டு நோய்கள் போன்றவையும் பாதங்களில் வெடிப்பை உருவாக்கலாம் என்கிறார் தோல் மருத்துவரான அயனம் சத்தியநாராயணா.

குளிர்ந்த வானிலையால் மக்கள் குறைவாக தண்ணீர் எடுத்துக் கொள்வதைக் குறிப்பிடும் அவர், அதனால் உடலில் ஈரப்பதம் குறைந்து பாத வெடிப்பு ஏற்படுகிறது என்றார்.

“குளிக்கின்றபோது பாதங்களை சுத்தம் செய்து முறையாக உலர வைக்கவில்லை என்றாலும் பாத வெடிப்பு ஏற்படும்,” என்றும் தெரிவித்தார்.


வெடிப்பால் ஏற்படும் பிரச்னைகள்

பாத வெடிப்பால் தோலில் கொப்புளங்கள் ஏற்பட்டு வலி ஏற்படலாம் என்றும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

“இந்த பிரச்னை சேற்றில் அதிகம் நடக்கும் மக்களுக்கு வரும். ஏற்கெனவே பாத வெடிப்பு உள்ளவர்கள் குளிர் காலங்களில் அதிகம் அவதிப்படுவார்கள். பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இவை பெரிய பிரச்னையாக தெரியாவிட்டாலும் பாதங்களில் கடுமையான வலியை ஏற்படுத்தும்,” என்கிறார் சத்யநாராயணா.

குளிர்ந்த வானிலையில் வெந்நீரில் குளிப்பதும் தோலில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை எடுத்துவிடும். இதனாலும் தோலில் வெடிப்பு ஏற்படுகிறது என்றும் தெரிவித்தார்.

“வளிமண்டலத்தில் நிலவும் குளிர்ந்த காற்று உடலில் உள்ள ஈரப்பதத்தை உலர வைத்து தோலை வலுவிழக்கச் செய்திடும். உடலில் வைட்டமின் ஏ, சி மற்றும் டி குறைபாடு ஏற்படுவதும் தோல் வெடிப்பு ஏற்பட காரணமாக இருக்கிறது. காய்ந்த தோல் அரிப்பு மற்றும் தடிப்புகளை ஏற்படுத்துகிறது. அவற்றை தேய்க்கிறபோது எரிச்சல் உண்டாக்கி வீக்கம் ஏற்படுகிறது. இதில் குளிர்ந்த காற்று படுகிறபோது மேலும் மோசமாகலாம்” என்கிறார் சத்யநாராயணா.

கால் பாத வெடிப்பு

,தோல் மருத்துவர் அயனம் சத்தியநாராயணா.

பாத வெடிப்பு வராமல் தடுப்பது எப்படி?

இந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்கவும், குளிர் காலங்களில் பாதங்களை பாதுகாப்பாக வைக்கவும் ஷாஹினா ஷபீக் சில வழிகளை முன்வைக்கிறார்.

குளித்த பிறகு பாதங்களில் லோஷன், கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய் தடவ வேண்டும். இவை பாதங்கள் காய்ந்து போகாமல் தடுக்கும்.

அதே போல குளிர்காலங்களிலும் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பாதத்தில் தினமும் இரு முறையாவது மாய்ஸ்ஷுரைசர் (moisturiser) தடவ வேண்டும்.

வயதானவர்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்கள் குளிர்ந்த காற்றிலிருந்து பாதங்களை பாதுகாக்க இரவு நேரத்தில் காலுறை அணிய வேண்டும்.

உணவில் ஓமேகா கொழுப்பு அமிலங்கள் நிறைந்த நட்ஸ் மற்றும் விதைகளையும் வைட்டமின் சி நிறைந்த பழங்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறார் சத்யநாராயணா.

எனினும் பாதங்களில் வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் ரத்தம் அல்லது சீழ் வடிந்தால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

(குறிப்பு: இந்தக் கட்டுரை விழிப்புணர்வுக்காக மட்டுமே, உங்களுக்கு இது சார்ந்த பிரச்னைகள் ஏதேனும் இருந்தால் மருத்துவரை ஆலோசிப்பது சிறந்தது)

 

Share.
Leave A Reply

Exit mobile version