காசாவில் கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி முதல் யுத்தநிறுத்தம் நடைமுறையில் இருக்கிறது.

இரண்டு வருடங்களாக காசா மீது இஸ்ரேல் முன்னெடுத்த கொடூர யுத்தம் நிறுத்தப்பட்டுள்ளது. ஆன போதிலும், அவ்வப்போது தாக்குதல்களை முன்னெடுக்கவே செய்கிறது இஸ்ரேல்.

இப்போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த காலப்பகுதியில் காசாவில் குளிர் மற்றும் மழைக் காலநிலையும் ஆரம்பித்து விட்டது. இது காசா மக்களுக்கு மற்றொரு சவாலாக அமைந்திருக்கிறது. இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட யுத்தம் காரணமாக 23 இலட்சம் மக்கள் தொகை கொண்ட காசாவில் பெரும்பாலானோர் இருப்பிடங்களை இழந்தனர்.

சுமார் 20 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். அவர்களது இருப்பிடங்களில் 82 சதவீதமானவை அழிவுற்றுள்ளன.

உட்கட்டமைப்பு வசதிகளும் பொதுசேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

தற்போது காசா மக்கள் தங்கியுள்ள தற்காலிக கூடாரங்கள் கடும் மழை, காற்று, குளிருக்கு ஈடுகொடுக்கக் கூடியவை அல்ல. அண்மையில் கடுங்காற்றுடன் கூடிய கனத்த மழையினால் 93 சதவீத கூடாரங்கள் சேதமடைந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் தங்குமிடம் இல்லாமல் தவிப்பதாகவும் காசா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளதால் மழை மற்றும் குளிருக்கு ஈடுகொடுக்கக்கூடிய கூடாரங்களும், குளிரில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்வதற்கான வெப்ப பிறப்பாக்கி கட்டமைப்புகளும் கிடைக்குமென காசா மக்கள் நம்பினர்.

இஸ்ரேல்_- ஹமாஸ் யுத்தநிறுத்த உடன்பாட்டில் அதற்கான இணக்கப்பாடுகள் சர்வதேச மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்டுள்ளன.

ஆனாலும் அந்த இணக்கப்பாட்டுக்கு அமைய கூடாரங்களோ, குளிரில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்வதற்கான உபகரணங்களோ யுத்தநிறுத்தம் நடைமுறைக்கு வந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் காசாவுக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சிறுவர்கள் உட்பட அனைவரும் வெப்பமாக்கல், சுகாதாரம், மொபைல் வீடுகள் மற்றும் குளிர்கால புயல்களைத் தாங்கத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின்றி கடும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
மேலும் கண்டறிக
Newspapers
நாளிதழ்

அண்மையில் கடும் காற்றினால் காசா பகுதியில் சுமார் 2 இலட்சத்து 88 ஆயிரம் குடும்பங்களின் கூடாரங்கள் சேதமடைந்துள்ளன.

இக்கடுங்காற்றினால் 3.5.மில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

கழிவுநீர் கட்டமைப்புகளும் நீர் வழங்கல் வலையமைப்புகளும் சேதமடைந்தும் பாதிப்படைந்தும் காணப்படுகின்றன.

இந்நிலையில் மனிதாபிமான உதவி வழங்கும் அமைப்புகள், ‘இடம்பெயர்ந்த மக்களை தங்கவைப்பதற்கு குறைந்தது 3 இலட்சம் மொபைல் வீடுகளும் கூடாரங்களும் தேவை’ என்று கூறியுள்ளன.

காசா என்பது வழமையாக வருடத்தின் இறுதிப்பகுதியில் குளிர் மற்றும் மழைக்காலநிலைக்கு அதிகம் முகம்கொடுக்கும் பிரதேசமாகும்.

தற்போது கடும் குளிரினால் வசிப்பதற்குத் தகுதியற்ற கூடாரங்களில் அவர்கள் துன்பமுறுகின்றனர். கடுமையான குளிர்கால வானிலை காசாவின் மனிதாபிமான நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது,

இந்நிலையில் கான் யூனிஸ் நகரசபையின் பேச்சாளர் சைப் லுகான், ‘இஸ்ரேலியப் போரில் பெரும்பாலான வீதிகள், நீர் மற்றும் கழிவுநீர் வலையமைப்புகள் அழிக்கப்பட்டதால், நகரம் மிகுந்த பேரழிவை சந்தித்துள்ளது.

இந்நிலையில் சுமார் 9 இலட்சம் மக்கள் மோசமான வானிலையினால் துயரமானதும் மோசமானதுமான நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர்.

இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு தங்குமிடம் அளித்த நூற்றுக்கணக்கான கூடாரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதனால் குடும்பங்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது’ என்கிறார்.

மேலும் அங்குள்ள கூடாரங்கள் சேறு சகதி மிக்க நீரேரிகளாக மாறியுள்ளன.

அகதிகளின் போர்வைகள், தலையணை, விரிப்புகள் போன்ற உடைமைகளும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. ஒரு தொகுதி கூடாரங்கள் பலத்த காற்றினால் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

நீரில் முழுமையாக மூழ்கிய பகுதிகளையும் கழிவுநீரில் மூழ்கிய பகுதிகளையும் இங்கு காணக்கூடியதாக உள்ளது.

இப்பகுதியிலுள்ள கூடாரமொன்றில் தங்கியிருக்கும் ஐந்து குழந்தைகளின் தந்தையான அமீர் அபு ஷமாலா,

‘இது ஒரு கடுமையானதும் எதிர்பாராததுமான குளிர்கால அலை. நாங்கள் மழை வெள்ளத்தில் மூழ்கினோம்.

எங்கள் மெத்தைகளும் உடைமைகளும் நனைந்து விட்டன. என் குழந்தைகளுக்கு சளி பிடித்தது, கடுமையான குளிரில் வயிற்று வலியும் ஏற்பட்டது.

முதல் புயலிலேயே இந்த நிலை என்றால், எதிர்வரும் நாட்களில் என்ன நடக்கும் என்று தெரியாது.

நாங்கள் ஈரமான, உறைபனி காற்றில் வாழ்கிறோம், எங்களிடம் போதுமான போர்வைகள் இல்லை. என் குழந்தைகளை எப்படிப் பாதுகாப்பேன் என்று எனக்குத் தெரியவில்லை’ என்றுள்ளார்.

காசாவின் ஏனைய பிரதேசங்களில் அமைந்துள்ள கூடாரங்களுக்கு உள்ளேயும் வெள்ளநீர் உட்புகுந்துள்ளது.

இரண்டு வருடமாக இடம்பெற்ற யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள திண்மக்கழிவுகளை கழுவிய நீராகவும், தூசு, துகள்களை சுமந்த நீராகவும் அது காணப்படுகிறது. ஒருபுறம் துர்நாற்றம், மறுபுறம் நோய்நொடிகளை சுமந்த நீர் இது.

இதன் காரணமாக குழந்தைகள் மத்தியில் தோல் நோய்கள், சுவாச தொற்றுகள் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

காசாவில் வெப்பமாக்குவதற்கான எரிபொருள் வசதி இல்லை, குடும்பங்கள் விறகுகளை எரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

அதனால் புகை கூடாரங்களை நிரப்பி சுவாசத் தொகுதி நோய்கள் ஏற்படுகின்றன.

இந்நிலையில் காசா ஊடக அலுவலகத்தின் அதிகாரி இஸ்மாயில் அல்-தவாப்தா, ‘கூடாரங்கள், காப்புப் பொருட்கள், வெப்பமூட்டும் பொருட்கள், மின்சாரம் மற்றும் சுகாதாரப் பொருட்கள் காசாவுக்குள் கொண்டு செல்லப்படுவதைத் இஸ்ரேல் தடுத்ததே சீரற்ற காலநிலை பேரழிவு மோசமடைய முக்கிய காரணம்.

போர்நிறுத்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனிதாபிமானக் கடமைகளை இஸ்ரேல் பேணினால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.

அவற்றை அனுப்புவதை தடுப்பது யுத்தநிறுத்த மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறுவதாகும்.

போர்நிறுத்த நிபந்தனைகளை இஸ்ரேல் கடைப்பிடிக்க வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் போர்நிறுத்த மத்தியஸ்தர்களும் இஸ்ரேல் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரம் ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் டுஜாரிக், ‘காசாவில் கடுமையான குளிர்காலம் ஏற்பட்டுள்ளதால் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கான பலஸ்தீனியர்கள் போதுமான தங்குமிடத்தைக் கண்டுபிடிக்க போராடி வருகின்றனர்.

போரால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள பலஸ்தீனியர்கள் கடுமையான வானிலை காரணமாக பாரிய அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.

அதனால் கட்டுப்பாடுகளை தளர்த்தி பலஸ்தீனியர்களுக்கு வெப்பமாக்கல், சுகாதாரம், மொபைல் வீடுகள் மற்றும் குளிர்கால புயல்களைத் தாங்கத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்ல இடமளிக்க வேண்டும்’ என்றுள்ளார்.

இன்றைய குளிரும் மழையும் காசா மக்களுக்கு மற்றொரு சவாலே அன்றி வேறில்லை.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version