சாய்ந்தமருதில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர்வடைகள் பறிமுதல்
சாய்ந்தமருது பிரதேசத்தில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர்வடைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்முனை, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கொட்டும் மழைக்கு மத்தியில் நேற்று (06) சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்தச் சோதனைகள் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நுளம்பு களத்தடுப்பு உதவியாளர்கள் ஆகியோரின் பங்கேற்புடன் மேற்கொள்ளப்பட்டன.
வீதியோர சந்தை மற்றும் பெண்கள் சந்தை பரிசோதனை
இந்த சோதனைகளின் போது, வீதியோர சந்தை மற்றும் பெண்கள் சந்தை (Ladies Market) ஆகியவை தீவிரமாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அங்கு காணப்பட்ட பல சுகாதார குறைபாடுகள் தொடர்பில் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், எதிர்காலத்தில் அடிக்கடி சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.
உணவகங்களுக்கு அவகாசம்
மேலும், குறித்த பகுதியில் இயங்கும் உணவகங்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. சில உணவகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஒழுங்கின்மையுடன் காணப்பட்டதனால், அவற்றை சரிசெய்ய ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நுகர்வுக்கு பொருத்தமற்ற தயிர்வடைகள் பறிமுதல்
சோதனையின் போது, கயிறு கலந்து மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தயிர்வடைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து குறித்த தயிர்வடைகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டதுடன், சம்பந்தப்பட்ட வியாபாரி மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

