மதுரை: சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித் குமார் (Ajith kumar) கொலை வழக்கில் ஜாமீன் கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரணை நீதிமன்றம் அடுத்த 6 மாதங்களுக்குள் முழுமையாக விசாரித்து முடிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவில் காவலாளியாக பணிபுரிந்த அஜித்குமாரை கடந்த 2025 ஜூன் 27 ஆம் தேதி நிகிதா என்ற பெண்ணின் நகை காணாமல் போனது தொடர்பான புகாரில் தனிப்படைக் காவலர்கள் விசாரித்தனர்.

போலீசார் கொடூர தாக்குதலுக்கு உள்ளான காவலாளி அஜித் குமார் அடுத்த நாள் உயிரிழந்தார்.

இந்த கொலை வழக்கில் தனிப்படை காவலர்களான கண்ணன், ராஜா, ஆனந்த், பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே, அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவலர்கள் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் தங்களுக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆதாரங்கள் இல்லாமல் நாங்கள் கைது செய்யப்பட்டுள்ளோம். சிபிஐ விசாரணையை முடித்து விசாரணை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பல மாதங்களாக சிறையில் உள்ளோம். எனவே ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பாக விசாரணைக்கு வந்தது. சிபிஐ தரப்பில் வழக்கறிஞர் முகைதீன் பாஷா ஆஜராகி இந்த வழக்கில் 94 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அஜித்குமார் நகையை திருடியதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

காணாமல் போன நகையை கண்டுபிடிக்க முடியவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் டிஎஸ்பி-யை தவிர்த்து வேறு உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்படவில்லை என்று தெரிவித்தார்.

இந்த வழக்கில் 2 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்கில் காவல் துறையினர் தான் அஜித்குமாரை அடித்து கொலை செய்துள்ளனர் என்பதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளது.

எனவே காவலர்களுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என தனது எதிர்ப்பை பதிவு செய்தார். அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி “காவல்துறையினர் மனசாட்சியுடன் செயல்பட வேண்டும்.

உயர் அதிகாரி ஒருவர் அடிக்க சொல்லி உத்தரவிட்டால் அடித்து கொலை செய்வதா? அடிக்க முடியாது என ஏன் சொல்ல மறுக்கிறீர்கள்.

சட்ட விரோதமாக செயல்பட முடியாது என்று உயர் அதிகாரியிடம் சொல்லுங்கள். நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்திற்கு வாருங்கள். நீதிமன்றம் உங்களை பாதுகாக்கும்” எனத் தெரிவித்தார்

. மேலும் பேசிய நீதிபதி, “இந்த வழக்கில் போலீசார் செய்த குற்றம் மன்னிக்க முடியாத குற்றம். எனவே மீதமுள்ள குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய வேண்டும்.

டிஎஸ்பிக்கு உத்தரவிட்ட அதிகாரி யார்? என்று கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு உத்தரவிட்ட அதிகாரி பாதுகாக்கப்பட்டு வருகிறார்” என்றும் விமர்சித்தார்.

 

மேலும், “விசாரணை முடியும் வரை யாருக்கும் ஜாமீன் வழங்க முடியாது. அஜித்குமார் மரண வழக்கு விசாரணையை நீதிமன்றம் 6 மாதத்தில் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டு ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version