-தென் ஆபிரிக்காவுக்கு நான்காவது தொடர்ச்சியான வெற்றி; நமிபியா வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது
ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு எதிராக டெல்ஹி, அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (18) நடைபெற்ற டி குவுக்கான கடைசிப் போட்டியில் தனது நான்காவது தொடர்ச்சியான வெற்றியை ஈட்டிய தென் ஆபிரிக்கா தோல்வி அடையாத அணியாக ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8கள் சுற்றை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது.
நமிபியா தனது நான்கு போட்டிகளிலும் தோல்விகளைத் தழுவி வெறுங்கையுடன் நாடு திரும்புகிறது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் முன்வரிசை வீரர்களான அலிஷான் ஷராபு, அணித் தலைவர் முஹம்மத் வசீம் (22), ஆரியன்ஷ் ஷர்மா (13), மத்திய வரிசை வீரர் முஹம்மத் அர்பான் (11) ஆகிய நால்வர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
இந்த நால்வரில் அலிஷான் ஷரபு மிகத் திறமையாக தென் அபிரிக்கா பந்துவீச்சாளர்களை எதிர்கொண்டு 5 புவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 45 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் கோபின் பொஷ் 4 ஓவர்களில் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அன்றிச் நோக்கியா 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஐக்கிய அரபு இராச்சியத்தினால் நிர்ணியக்கப்பட்ட 123 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 13.2 ஒவர்களில் 4 விக்கெட்களை மாத்திரம் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராம் 28 ஓட்டங்களையும் குவின்டன் டி கொக் 14 ஓட்டங்களையும் ரெயான் ரிக்ல்டன் 30 ஓட்டங்களையும் டிவோல்ட் ப்றெவிஸ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆட்டநாயகன்: கோபின் பொஷ்