யுத்தத்தின் இரைச்சலை விடவும், சில நேரங்களில் அதிகார வர்க்கத்தின் மௌனம்தான் அதிக சஅச்சத்தை உண்டாக்குகிறது.
மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஏவுகணைகள் ஈரான் மண்ணை பிளந்து கொண்டிருக்கும் வேளையில், உலகமே பதற்றத்தில் உறைந்து போயுள்ளது.
ஈரானின் 130 இடங்களில் மரண ஓலம் கேட்கிறது. 555-க்கும் மேற்பட்ட அப்பாவி உயிர்கள் பலியாகிவிட்டன.
இத்தனை கொடூரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் போது, உலக வல்லரசான சீனா மட்டும் ஏன் ஒரு மர்மமான மௌனத்தை கடைப்பிடித்துக் கொண்டிருக்கிறது? இந்த மௌனம் தற்செயலானதா?
பெய்ஜிங்கின் வீதிகளில் இயங்கும் ஒரு ரகசிய வங்கி (Mystery Bank), இந்தப் போரின் போக்கையே மாற்றக்கூடிய ஒரு பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறதா? மனிதாபிமானமா? லாபமா?
ஒருபுறம் போரின் கோர முகத்தால் லட்சக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள். மறுபுறம், இந்த மர்ம வங்கியின் நிதி பரிமாற்றங்கள் அமெரிக்கா – ஈரான் மோதலில் ஒரு கண்ணுக்குத் தெரியாத ட்விஸ்ட் ஆக மாறியுள்ளதா,
பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகப் பின்னணியும், கச்சா எண்ணெய் அரசியலும் இந்த மௌனத்திற்குப் பின்னால் ஒளிந்துள்ளனவா?
அமெரிக்காவின் ஏவுகணைகளை விடவும், பெய்ஜிங்கின் இந்த ரகசிய வங்கியின் நகர்வுகள் உலக பொருளாதாரத்தில் ஒரு மிகப்பெரிய சுனாமியை ஏற்படுத்தப் போகின்றனவா?
அந்த ரகசிய வங்கி எது? சீனாவின் இந்த மௌன ஆட்டத்திற்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன? வாருங்கள் விரிவாகப் பார்ப்போம்.
உலகமே அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான வான்வழித் தாக்குதல்களைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் இந்த வேளையில், சீனாவின் மௌனம் ஒரு மிகப்பெரிய மர்மமாகவே பார்க்கப்படுகிறது.
ஆனால் இந்த மௌனத்திற்குப் பின்னால் பேங்க் ஆஃப் குன்லுன் (Bank of Kunlun) என்ற ஒரு சிறிய வங்கியும், பல லட்சம் கோடி மதிப்பிலான ரகசிய வர்த்தக சுழற்சியும் ஒளிந்திருப்பது இப்போது அம்பலமாகியுள்ளது.
</p>.<p>சீனா ஈரானிடம் இருந்து வெறும் கச்சா எண்ணெய்யை மட்டும் வாங்கவில்லை. மாறாக அமெரிக்க டாலரைத் தவிர்த்துவிட்டு ஒரு ரகசிய பணப் பரிமாற்ற சங்கிலியை உருவாக்கியுள்ளது.
இது குறித்து மேக்னம் ஃபின்வெஸ்ட் சர்வீசஸ் நிறுவனர் சௌரப் ஜெயின் கூறுகையில்,
“அமெரிக்கா ஈரானைத் தாக்குவதற்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் நீங்கள் நினைப்பது அல்ல.
அது பேங்க் ஆஃப் குன்லுன் என்ற யாருக்கும் தெரியாத ஒரு சீன வங்கியைப் பற்றியது” என்கிறார்.
சீனாவின் தேசிய பெட்ரோலியக் கழகத்தின் (CNPC) கட்டுப்பாட்டில் உள்ள இந்த வங்கி, ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகளைத் தகர்க்கும் ஒரு நிதி அமைப்பாகச் செயல்படுகிறது.
சீனா ஒவ்வொரு மாதமும் ஈரானிடமிருந்து சுமார் 1.5 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெய்யை வாங்குகிறது.
ஆனால் சீன அரசின் அதிகாரபூர்வ தரவுகளில், இறக்குமதி பட்டியலில் ஈரான் பெயர் இருக்காது. ஈரானிய எண்ணெய் கப்பல்கள் கடலில் வைத்து மலேசிய எண்ணெய் போலச் சான்றிதழ் மாற்றப்பட்டு, மலேசியாவிலிருந்து வருவது போல சீனாவுக்கு அனுப்பப்படுகின்றன எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த எண்ணெய்க்கான பணத்தை சீனா டாலரில் கொடுப்பது கிடையாது. மாறாக சீனாவின் யுவான் மட்டுமே. தனது சொந்த நாணயமான யுவான் (Yuan) மூலம் குன்லுன் வங்கியில் உள்ள ஈரான் கணக்குகளில் செலுத்துகிறது என்றும் தெரிவிக்கிறார்கள்.
ஈரானால் அந்த யுவானை வெளியில் எங்கும் பயன்படுத்த முடியாது. எனவே, அந்த பணத்தைக் கொண்டு சீனாவிலேயே இயந்திரங்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் உள்கட்டமைப்பு பொருட்களை ஈரான் வாங்குகிறது.
இதன் மூலம் பணம் மீண்டும் சீனாவிற்கே திரும்புகிறது. டாலருக்கு இங்கே வேலையே இல்லை.
ஈரானைப் பொறுத்தவரையில் தன்னுடைய எண்ணெய் விற்பனையும் ஆகிறது. தனது மற்ற தேவைகளையும் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது.
அதுவும் அமெரிக்காவின் தடைக்கு மத்தியில் இப்படியான வாய்ப்பு சாதகமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
ஆனால் சீனாவுக்கோ காசு கொடுத்து வாங்கினாலும், அந்த பணம் தன் நாட்டிற்கே திரும்பவும் வருகிறது. அதன் மூலம் வர்த்தக வளர்ச்சியும் அதிகரிக்கிறது.
தனது எண்ணெய் தேவையையும் குறைந்த விலையில் பூர்த்தி செய்து கொள்ள முடிகிறது. மற்ற நாடுகள் பணவீக்கத்தின் சிக்கித் தவித்து வரும் நிலையில், சீனா அதையெல்லாம் தட்டி தூக்கி விட்டுச் சென்று கொண்டிருக்கிறது.
இது இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்குச் சவால்களை உண்டாக்குமா என்ற கேள்வியும் பலரின் மத்தியில் காணப்படுகிறது.
ஈரானில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 70 டாலர்களுக்கு மேல் செல்லும் போது, டாலரை நம்பியிருக்கும் இந்தியா போன்ற நாடுகளுக்கு இறக்குமதி செலவு தாறுமாறாக உயரும்.
ஆனால் சீனாவோ தள்ளுபடி விலையில் ரகசியமாக எண்ணெய் வாங்குவதால் அதன் பொருளாதாரம் பாதிக்கப்படாது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து, சாமானிய மக்களின் வயிற்றில் அடி விழும்.
ஆனால் சீனாவில் அப்படி ஏதும் நிகழாது இந்தியாவைப் பொறுத்தவரையில் மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி என்பது போல, ஒரு புறம் அதிகரித்து வரும் விலைவாசி, அதனால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு எனில், மறுபுறம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு பெரும் கவலை அளிக்கும் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
மேலும் டாலரின் தேவை அதிகரிக்கும் போது, இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிய வாய்ப்புள்ளது.
இது இந்தியப் பங்குச் சந்தையிலும் பெரும் அதிர்வுகளை உண்டாக்கலாம். முதலீடுகள் வெளியேறலாம்.
ஆக சீனா – ஈரான் இடையிலான இந்த ரகசிய கூட்டணி, ஆசியப் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும்.
இது இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக நலன்களுக்கு ஒரு வகையான மறைமுக மிரட்டலாகும்.
சீனாவின் இந்த செயல்பாடானது அமெரிக்காவுக்கும் பிரச்னைதான். ஏனெனில் உலக நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க டாலரில் பணம் செலுத்தி வரும் நிலையில், சீனா மட்டும் யுவான் மூலம் எண்ணெய் வாங்கி வருகிறது.
இது டாலரின் தேவையைக் குறைக்கலாம். இது அமெரிக்காவின் பலனை மெதுவாகக் குறைக்க வழிவகுக்கும்.
மேலும் அமெரிக்கா ஒரு நாட்டின் மீது தடை விதித்தால், அதை எப்படியேனும் உலக நாடுகளின் நிதிச் சந்தையிலிருந்து ஒதுக்கி வைத்துவிடும்.
ஆனால் சீனாவின் நடவடிக்கை அமெரிக்காவின் அந்த நிதி ஆயுதத்தை முறியடிக்கத் தொடங்கியுள்ளது.
சொல்லப்போனால் அமெரிக்காவின் எரிசக்தி அரசியலுக்கு, சீனா மறைமுகமாக ஒரு முட்டுக்கட்டையாக அமைகிறது.
மேலும் குறைந்த விலையில் எண்ணெய் வாங்குவதோடு, அதைத் தனது உற்பத்தி வளர்ச்சிக்குச் சாதகமாகவும் பயன்படுத்திக் கொள்கிறது.
அதேசமயம் ஈரானும் நிதி ரீதியாகப் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்கவும் இது காரணமாக இருக்கிறது.
இந்த சூழல்தான் அமெரிக்காவின் கோபத்திற்கு மறைமுக காரணியாகவும் பார்க்கப்படுவதாக நிபுணர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்காவைப் பொறுத்தவரை, குன்லுன் போன்ற வங்கிகள் ஒரு நிதி துரோகம் (Financial Defiance) என நம்புகிறது.
துப்பாக்கிகளால் நடத்தப்படும் போரை விட, இந்த ரகசிய பொருளாதாரப் போர் அமெரிக்காவுக்கு நீண்ட கால அடிப்படையில் மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தலாம் என நம்புகிறது

