புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ள இரான், இஸ்ரேல் – என்ன நடக்கிறது? சமீபத்திய தகவல்கள்

மத்திய கிழக்கில் போர் ஆறாவது நாளை எட்டியுள்ள நிலையில், இஸ்ரேலும் இரானும் புதிய தாக்குதல்களைத் தொடங்கியுள்ளன

லெபனான் மற்றும் இரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்துகிறது. இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் வெடிப்புகள் காணப்படுகின்றன.

இஸ்ரேலில் இரான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

டெல் அவிவ் மற்றும் ஜெருசலேமில் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சைரன்கள் மற்றும் தாக்குதல்கள் இடைமறிக்கப்பட்டபோது வானத்தில் வெடிப்புகள் காணப்பட்டன.

பிராந்தியத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார் மற்றும் பஹ்ரைனில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன.

பஹ்ரைனில் சேதமடைந்த கட்டடம்

இதற்கிடையே இரான் பதிலடி தாக்குதல் நடத்தத் தொடங்கியதிலிருந்து ”இதுவரை 75 இரானிய ஏவுகணைகள் மற்றும் 123 டிரோன்களை அழித்துள்ளோம்” என பஹ்ரைன் கூறுகிறது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பாதுகாப்பு அமைச்சகம் இன்று ஆறு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் 131 டிரோன்களையும் இடைமறித்து அழித்ததாகக் கூறுகிறது – ஆனால் ஒரு ஏவுகணை மற்றும் ஆறு டிரோன்கள் நாட்டிற்குள் விழுந்தன.

சனிக்கிழமை “இரானிய தாக்குதல் தொடங்கியதிலிருந்து” 196 பாலிஸ்டிக் ஏவுகணைகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், எட்டு குரூஸ் ஏவுகணைகளும் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும் அது கூறுகிறது.

இதுவரை மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்கதேசத்தைச் சேர்ந்த வெளிநாட்டினர் என்றும், தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 94 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

இரண்டு இரானிய டிரோன்களால் தாக்கப்பட்டதாக அஜர்பைஜான் கூறுகிறது.

வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பலைத் தாக்கியதாக இரான் கூறுகிறது

லெபனானின் சேதத்தை காட்டும் புகைப்படம்

‘அமெரிக்காவும் இஸ்ரேலும் மக்களை குறிவைக்கிறார்கள்’- இரான்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தங்கள் தாக்குதல்கள் மூலம் வேண்டுமென்றே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைப்பதாக இரானின் வெளியுறவு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் பாகேய், இந்தத் தாக்குதல்கள் “உலகளாவிய சந்தைகளில் எதிரொலிக்கின்றன, எரிசக்தி விலைகளை உயர்த்துகின்றன,

நாணயங்களை நிலைகுலையச் செய்கின்றன மற்றும் உலகம் முழுவதும் உள்ள சாதாரண மக்களின் பொருள்சார் வாங்கும் சக்தியைப் பாதிக்கின்றன” என்று கூறியுள்ளார்.

“ஆயினும் எங்களைப் போன்ற இரானியர்களுக்கு, இதற்கான விலை அளவிட முடியாத அளவு அதிகமாக உள்ளது.

ஆக்கிரமிப்பாளர்கள் வேண்டுமென்றே பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையும், அதிகபட்ச துன்பங்களையும் உயிர் இழப்புகளையும் ஏற்படுத்தும் என்று அவர்கள் நம்பும் எந்தவொரு இடத்தையும் குறி வைப்பதால் எங்கள் மக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், “அமெரிக்க ஆயுதப் படைகள் பொதுமக்களை குறி வைக்கவில்லை,” என நேற்று (மார்ச் 4) கூறினார்.

பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக “துல்லியமாக” (precision) ராணுவப் பகுதிகளை தாங்கள் குறி வைப்பதாக இஸ்ரேல் கூறியுள்ளதுடன், இரான் பொதுமக்களை குறி வைப்பதாகக் குற்றம் சாட்டுகிறது.

இஸ்ரேலில் தாக்குதல்

வியாழக்கிழமை அதிகாலையில் இஸ்ரேலை நோக்கி இரான் பல ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு மணி நேரத்தில் மூன்று தனித்தனி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஜெருசலேமில் வெடி சத்தங்கள் கேட்டதாக ஏ.எஃப்.பி செய்தியாளர்கள் தெரிவித்தனர். இருப்பினும், மக்கள் பாதுகாப்பு புகலிடங்களிலிருந்து வெளியேற ராணுவம் தற்போது அனுமதி அளித்துள்ளது.

முன்னதாக, இரான் தலைநகர் தெஹ்ரான் முழுவதும் மற்றுமொரு தொடர் தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது

“இரான் ஆட்சிக்கு சொந்தமான ராணுவ உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து, தெஹ்ரான் முழுவதும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை(ஐ.டி.எஃப்) கூடுதல் தாக்குதலை தொடங்கியுள்ளது,” என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தாக்குதல் நடத்தப்படும் குறிப்பிட்ட இடங்களைப் பற்றிய மேலதிக தகவல்கள் எதையும் அது வழங்கவில்லை, ஆனால் கூடுதல் விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளது.

புதன்கிழமை இரவு தலைநகரில் ஒரு சக்திவாய்ந்த வெடி சத்தத்தை தங்கள் செய்தியாளர்கள் உணர்ந்ததாக ஏ.எஃப்பி செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.


டெஹ்ரானில் புகை எழும் காட்சி

இஸ்ரேல் தொடர்ந்து இரானின் பதிலடி தாக்குதல்களால் குறி வைக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பு தெடர்பான முன்னேற்றங்களுக்கு உட்பட்டு வான்வெளியை ஓரளவு மீண்டும் திறக்க இஸ்ரேலிய அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததையடுத்து, ஐந்து நாட்களுக்குப் பிறகு பென் குரியன் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டிற்குத் திரும்பும் குடிமக்களை ஏற்றி வந்த விமானம் ஒன்றும் டெல் அவிவ் வந்தடைந்துள்ளது.

முன்னதாக, தலைமை மையங்கள் மற்றும் உள் பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட கிழக்கு தெஹ்ரான் வளாகத்தின் மீது தனது விமானப்படை “பெரிய அளவிலான தாக்குதலை” நடத்தி முடித்துள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் அறிவித்திருந்தது.

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version