அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட் , புரூக்ளின் மத்திய நீதிமன்றினால் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிப் ராசா மெர்ச்சண்ட், அமெரிக்காவின் உயர்மட்ட அரசியல் தலைவர்களான ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் ஐநாவிற்கான முன்னாள் தூதுவர் நிக்கி ஹேலி ஆகியோரைக் கொலை செய்வதற்கான திட்டங்களை முன்னெடுத்ததாகப் வழக்குத் தொடரப்பட்டது.
இதற்காக வாடகைக்குக் கொலைகாரர்களை அமர்த்த அவர் முயன்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
புதன்கிழமை (04) இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சாட்சியமளித்த மெர்ச்சண்ட், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது குடும்பத்தினரைப் பாதுகாப்பதற்காகவே தான் இந்தச் சதியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
ஈரானியப் புரட்சிகர இராணுவத்தின் அழுத்தமே இதற்குக் காரணம் எனவும், எவரும் கொல்லப்படுவதற்கு முன்னரே தான் பிடிபடுவேன் என்று தான் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு ஈரானிய இராணுவத் தளபதி காசிம் சுலைமானி அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே இந்தச் சதித் திட்டம் தீட்டப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கருதுகின்றனர்.
ஈரான் ஆட்சியாளர்களின் திட்டங்களை ஒத்ததாகவே இது அமைந்திருப்பதாக வொஷிங்டன் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 12 ஆம் திகதி அமெரிக்காவை விட்டு வெளியேற முயன்றபோது கைது செய்யப்பட்ட மெர்ச்சண்ட் மீது, சர்வதேச பயங்கரவாதம் மற்றும் கொலைக்கான ஒப்பந்தம் ஆகிய இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ள நிலையில், அவருக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமெரிக்க – இஸ்ரேலியத் தாக்குதல்கள் காரணமாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ள சூழலில், இரு நாடுகளுக்கும் இடையிலான போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

