மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது ஈரான் இன்று தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.

ஈரானின் முக்கிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உலகின் முக்கிய இயற்கை எரிவாயு ஏற்றுமதி நாடான கத்தாரில் உள்ள திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) உற்பத்தி நிலையங்களை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது.

இதில் கத்தாரின் முக்கிய எல்.என்.ஜி முனையங்கள் தீப்பிடித்து எரிந்தன. ஏற்கனவே நடந்த தாக்குதல்களால் அங்கு உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த போதிலும், தற்போதைய ஏவுகணை வீச்சினால் அந்தத் தளம் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போர் முடிந்த பிறகும்கூட, சர்வதேச சந்தைக்கு எரிவாயு விநியோகத்தை மீண்டும் தொடங்குவதில் இந்தச் சேதங்கள் பெரும் தாமதத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

அபுதாபியில் உள்ள ஹப்ஷன் எரிவாயு நிலையம் மற்றும் பாப் எண்ணெய் வயல் ஆகியவற்றின் செயல்பாடுகளை முழுமையாக நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அமீரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் இந்த இரவு நேரத் தாக்குதலை ஆபத்தான போர் விரிவாக்கம் என்று அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

மறுபுறம், ஐக்கிய அரபு அமீரகக் கடற்கரைக்கு அருகாமையில் ஒரு கப்பல் தீப்பிடித்து எரிந்ததோடு, கத்தார் அருகே மற்றொரு கப்பலும் சேதமடைந்தது. உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் கொண்டு செல்லப்படும் ‘ஹோர்முஸ் நீரிணை’ ஈரானின் பிடியில் உள்ளதால், அந்தப் பாதையில் செல்லும் கப்பல்களுக்குத் தொடர் ஆபத்து நிலவி வருகிறது.

தற்போது அந்த வழித்தடம் கப்பல்கள் பயணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெப்ரவரி 28அம் திகதி ஆரம்பித்த இந்தப் போர், தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் குறிவைக்கப்படுவதால், உலகளாவிய எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகின்றன.

தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நாடுகள் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டுமென கோரிக்கைகள் எழுந்துள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version