போர் என்பது, தனியே படைகள் மோதிக் கொள்ளுகின்ற களங்களைக் கொண்டது மாத்திரமல்ல. உண்மையும், பொய்களும் மோதுகின்ற பிரசாரப் போர்களையும் கொண்டது தான்.
போரில் வெல்வதற்கு, பிரசார போரும் அவசியம். போருக்கான அவசியத்தை, அதன் நியாயப்பாட்டை வெளிப்படுத்தி, போருக்கு தேவையான ஆளணியை திரட்டுவதற்கும், ஆயுதங்களை பெறுவதற்கும், பிரசாரம் முக்கியம்.
பிரசாரப் போரில் தோல்வியடைந்த தரப்புகளால், போர் முனையில் வெற்றி பெறுவது கடினம்.

ஹிட்லர்
இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் எழுச்சிக்கும் வெற்றிக்கும் முக்கியமான காரணமாக இருந்தது அவரது பிரசாரம்.
தீவிர வலதுசாரி கொள்கையை ஹிட்லர் மிகத்தீவிரமாக பிரசாரப்படுத்தினார். அவரது பேச்சு வன்மையும் பிரசாரங்களும் ஜேர்மனியர்களை, யூத எதிர்ப்பாளர்களாக மாற்றின. அவர்கள் பிற நாடுகளின் மீது போர் தொடுக்கவும் அந்தப் போர்களில் வெற்றி பெறவும் வழி வகுத்தன.
அப்போது, ஹிட்லரின் பிரசாரப் பீரங்கியாக இருந்தவர் ஜோசப் கோயபெல்ஸ்.
அவர் போர் தொடர்பாக நிறைய பொய்களை அவிழ்த்து விட்டிருந்தார். அவரது பிரசாரம் போர்முனையில் நாசிப் படைகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியது.
இறுதி வெற்றி கிடைக்காவிட்டாலும் இரண்டாம் உலகப்போரில், ஹிட்லரின் படைகள் தீர்க்கமான வெற்றிகள் பலவற்றை பெறுவதற்கு அந்தப் பிரசார போர் உதவியது என்பது மறுக்க முடியாத உண்மை. எல்லா போர்களிலுமே, பிரசாரத்தை மையப்படுத்தி இன்னொரு போர்முனை திறக்கப்படுவது வழமை.
இலங்கையிலும் இந்தப் பிரசாரப் போர் பலமுறை, பல வழிகளில், பல தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.
ஆரம்பக் காலகட்டங்களில் இலங்கை அரசாங்கத்திடம் ஒரு பிரசார இயந்திரம் காணப்பட்டது.
அது எப்போதும் தமிழர்களை தீவிரவாதிகளாகவும், தமிழரின் போராட்டத்தை பயங்கரவாதப் போராட்டமாகவுமே அடையாளப்படுத்தியது.
பின்னர் இந்தியத் தலையீடு ஏற்பட்ட போதும், கூட இவ்வாறான பிரசார போர் தமிழர்கள் மீது முன்னெடுக்கப்பட்டது.
அதற்குப் பின்னர் இலங்கை இராணுவத்திற்குள் பிரசாரப் போரை மேற்கொள்வதற்காக தனியான பிரிவுகள், துணை இராணுவ பிரிவுகள் என்று உருவாக்கப்பட்டன.
ஒரு காலகட்டத்தில் வானொலி, தொலைக்காட்சி, பத்திரிகைகளுக்குள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த பிரசாரப் போர், பின்னர் ஒரு கட்டத்தில் இணைய ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், பரவியது.
இதனை எதிர்ப்பதற்கு தமிழர் தரப்பிலும், பிரசார போர்கள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக வானொலி, தொலைக்காட்சி , இணையங்கள் மாத்திரமன்றி, தெருவழி நாடகங்களும் கூட பயன்படுத்தப்பட்டன.
இன்றைய நவீன உலகில் பிரசாரப் போர் இன்னும் முக்கியமானது. பிரசார போர்களில், வலிமை பெறுகின்றவர், போர் முனையிலும் வலிமை வாய்ந்தவராக கருதப்படும் வாய்ப்பு உள்ளது.
ஈரான் மீதான போர் தொடங்கிய போது, அமெரிக்காவும் இஸ்ரேலும் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தன.
முதல் குண்டிலேயே ஈரானின் உயர்தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டார். அவருடன் உயர் தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டனர். அத்துடன் சில தாக்குதல்களை நடத்தினால் போதும், ஈரானில் ஆட்சி மாற்றம் வந்து விடும் என்ற நம்பிக்கை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவிடம் காணப்பட்டது.
அதில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மட்டும் அதில் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. தங்களை நடுநிலையாளர்களாக காட்டிக் கொண்ட நாடுகள், அமைப்புகள் கூட அந்த பிரசாரப் போரில் ஒரு தரப்பாக இணைந்திருந்தன.
ஈரானில் நடந்த மக்கள் கிளர்ச்சி தொடர்பான முற்றிலும் உண்மையான தகவல்கள் கிடையாது. ஆனால், எல்லோரும் அந்தப் பிரசாரப் போரில் பங்காளிகளாக மாறியிருந்தனர்.
இதேபோன்ற பிரசாரப் போர் அனுபவங்கள் இங்குள்ள தமிழர்களுக்கும் தாராளமாகவே உள்ளது.
அதனால், ஈரான் விடயத்தில் இது எந்தளவு மோசமாக கையாளப்பட்டிருக்கும் என்று புரிந்து கொள்வது கடினமானதல்ல.
ஈரானில் 15,000 பேருக்கு மேல் படுகொலை செய்யப்பட்டிருந்தால், கிளர்ச்சி மோசமாக அடக்கப்பட்டிருந்தால், இந்தளவு தாக்குதல்களுக்குப் பின்னரும் அங்குள்ள மக்கள் ஆட்சி மாற்றத்தை தூண்டாமல் இருந்திருக்கமாட்டார்கள்.
இஸ்ரேலும், அமெரிக்காவும் அப்படியான நம்பிக்கையில் இருந்தன. அதனால் தான் இன்றோ நாளையோ ஆட்சி மாற்றம் நடக்கப் போகிறது என்று ஆரம்பத்தில் கதை சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பிரசாரப் போர் இப்போது முடிவுக்கு வந்துவிட்டது.
இப்போது களைத்து போய் ஈரானிய மக்கள் தாங்களாக கிளர்ந்தெழுந்து ஆட்சியை மாற்றினால் சரி என்ற நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
இது ஆட்சி மாற்றம் என்பது இலகுவானது அல்ல என்பதை வெளிப்படுத்தியிருக்கிறது. இது அவர்களின் முதல் தோல்வி.
பிரசாரப் போரில் அடைந்திருக்கின்ற பெருந்தோல்வியானது அமெரிக்க- – இஸ்ரேல் பிரசாரப் போர், ஈரானியர்களை பலவீனப்படுத்தவில்லை என்பது உணர்த்துகிறது. இப்போது அமெரிக்காவும் இஸ்ரேலும், கூறுவதை நம்புகின்ற நிலையில் உலகம் இல்லை.
ஈரான் தொடர்பாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்ற செய்திகள் அனைத்தும் உண்மை அல்ல என்ற கருத்து அவர்களிடம் இருக்கிறது.
இது இந்தப் பிரசாரப் போரின் தோல்வியின் விளைவு.
இப்போது நிலைமை மாறியிருக்கிறது, ஈரான் பிரசாரப் போரில் முன்னேறத் தொடங்கியிருக்கிறது.
ஆரம்பத்தில் ஈரானிய தலைவர்கள் கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் சொல்வதை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தவர்கள், இப்போது ஈரான் சொல்வதையும் கேட்கத் தொடங்கியிருக்கிறார்கள்.
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகத்தை தாக்கினோம், அவர் கொல்லப்பட்டு விட்டார், அவர் இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை என்பது போல ஈரான் நடத்திய பிரசாரப் போர், அதிகளவில் கவனத்தை ஈர்த்தது.
இது ஈரானிய மக்களுக்கு ஊக்கத்தை கொடுக்கிறதோ இல்லையோ – இஸ்ரேலியர்களுக்கு உளைச்சலை- தொந்தரவை கொடுக்கிறது. அமெரிக்காவுக்கும் கூட அதேஉளைச்சலை ஏற்படுத்துகிறது.
அண்மையில் நடந்த சில விடயங்கள் இதனை உறுதி செய்வதாக உள்ளன.
אומרים שאני מה? צפו >> pic.twitter.com/ijHPkM3ZHZ
— Benjamin Netanyahu – בנימין נתניהו (@netanyahu) March 15, 2026
இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு கொல்லப்பட்டு விட்டார் என்று ஈரான் செய்த பிரசாரப் போரை முறியடிப்பதற்காக அவர் வெளியே வர நேரிட்டது.
ஒரு கோப்பி கடைக்குச் சென்று கோப்பி குடித்துக் கொண்டு வீடியோவை வெளியிட நேரிட்டது.
ஆனாலும் அதுவும் , செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் தயாரிக்கப்பட்டது என்ற சர்ச்சையும் ஏற்பட்டிருக்கிறது. இந்த பிரசாரப் போரில் ஈரான் வெற்றி பெற்றிருக்கிறது.
ஈரானின் இழுப்புக்கு ஏற்ப, நெதன்யாஹு நகரத் தொடங்கியிருக்கிறார்.
தங்களை நோக்கியே மற்றவர் வரவேண்டும் என உறுதியாக நின்றவர், இப்போது ஈரானின் இழுப்பிற்கு ஏற்ப இழுபட்டுச் செல்கிறார்.
ஈரானின் பிரசாரப் போரை முறியடிக்க அவர் வீடியோவில் நடிக்க வேண்டியிருக்கிறது, தனது இடத்தில் இருந்து வெளியே வர வேண்டியிருக்கிறது.
இது இஸ்ரேலின் இயல்பு அல்ல, யூதர்களின் பொதுவான பண்பு அல்ல.
யூதர்கள் வித்தியாசமானவர்கள் என்பது உலகத்துக்கு தெரியும், ஆனால் இப்போது அந்த நிலையில் இல்லை என்பதை நெதன்யாஹுவின் நிதான இழப்பு எடுத்துக் காட்டுகிறது.
இந்தப் போரில் பல விடயங்கள் மறைக்கப்படுகின்றன, மறுக்கப்படுகின்றன. இதற்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
தனது உயர்தலைவர்கள் கொல்லப்பட்டதை ஈரான் மறைக்கவில்லை.
அது தனக்கு மிகப்பெரிய பலவீனம் என்ற போதும் உண்மையை வெளிப்படுத்த ஈரான் தயங்கவில்லை.
ஆனால், இஸ்ரேலும் அமெரிக்காவும் இன்னும் பல இழப்புகளை- உண்மைகளை வெளிப்படுத்த தயங்குகின்றன. வெளிப்படுத்தாமல் மறைக்கின்றன. இதிலிருந்து பலவீனமானவர்கள் யார் என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல.
இப்போது அரபு நாடுகளின் மீது ஈரான் நடத்துகின்ற தாக்குதல்கள் தொடர்பான வீடியோக்கள் படங்களை பகிர்கின்றவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது இன்னொரு அச்சத்தின் வெளிப்பாடு.
ஈரானின் பலம் பற்றி, அரபுநாடுகளில் உள்ள மக்கள் மத்தியில் எழுகின்ற உணர்வுகளை அடக்குகின்ற முயற்சி.
ஈரான் தொடர்பாக அவர்கள் மிகையான கற்பனை செய்யக் கூடாது, ஈரானுக்கு ஆதரவானவர்களாக மாறிவிடக்கூடாது, தமது நாடுகளில் கிளர்ச்சி உருவாகி விடக்கூடாது என்ற அச்சத்தில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
இது அமெரிக்காவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்படும் ஒரு நடவடிக்கை.
ஈரானின் பிரசாரப் போர் வலைக்குள் அவர்கள் சிக்கியிருக்கிறார்கள். ஈரான் மீதான போர் நியாயமற்றது என இத்தாலி அண்மையில் விலகிக் கொண்டது.
அந்த அறிவிப்பை இத்தாலிய பிரதமர் வெளியிட்ட சில மணி நேரத்திற்குள் இத்தாலிய படையினர் நிலைகொண்டிருந்த தளம் தாக்கப்பட்டது. அங்கிருந்து இத்தாலியின் ஆளில்லா விமானம் சேதமானது.
இது இத்தாலியை போருக்குள் இழுப்பதற்காக அமெரிக்கா மேற்கொண்ட சதி என்றும், இதேபோல நட்புநாடுகளின் மீது அமெரிக்காவே ட்ரோன்களை ஏவுகிறது என்றும் ஈரான் குற்றம்சாட்டியது.
இதனை மறுத்து அமெரிக்கா தனியான அறிக்கைகளை வெளியிட நேரிட்டது.
அமெரிக்கா இந்த போரில் பல அழுக்கான தந்திரங்களைப் பின்பற்றுகிறதா என்ற சந்தேகம் நட்பு நாடுகளிடம் ஏற்பட்டுள்ளது. இதுவும், பிரசாரப் போரில் அமெரிக்க – இஸ்ரேல் தரப்பு அடைந்து வரும் பின்னடைவை காட்டுகிறது.
போரில் ஈரான் பேரழிவை சந்திக்கிறது, என்பது உண்மை. ஆயிரக்கணக்கான இலக்குகள் தாக்கப் படுகின்றன, அவற்றின் விளைவுகள் சாதாரணமானவையாக இருக்காது. பில்லியன் கணக்கான டொலர்களை அது இழக்கிறது.
பொருளாதார நெருக்கடியில் உள்ள அந்த நாடு சிதைக்கப்படுகிறது. ஆனாலும் பிரசாரப் போரில் அமெரிக்காவினால் ஈரானை தோற்கடிக்க முடியவில்லை. ஈழப் போரின் போதும் இது நடந்தது.
விடுதலைப் புலிகள் தொடர்பான பிரசாரப் போரின் போது, புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்து விட்டார் என பலமுறை கூறப்பட்டது.
அந்தப் பிரசார போரில் அரச தரப்பு அடைந்த தோல்விதான், கடைசியில் பிரபாகரன் உண்மையாகவே இறந்த போது, அதனை பலரால் நம்ப முடியாதிருந்தமையாகும்.
பிரசாரப் போர் சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே அதில் வெற்றி பெற முடியும்.
வெறும் பொய்களால் மாத்திரம் முன்னெடுக்கப்படும் பிரசாரப் போர்களால் வெற்றிபெற முடியாது என்பதை ஈரான் போரும் உணர்த்திக் கொண்டிருக்கிறது.
-ஹரிகரன்-