;ஈரான் மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர எண்ணிக்கொண்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மார்ச் 20, வெள்ளிக்கிழமை கூறியபோது, பலருக்கு நிம்மதிப் பெருமூச்சு பிறந்தது.

அடுத்த நாளே, ஹோர்முஸ் நீரிணையை 48 மணி நேரத்தில் திறக்காவிடில், ஈரானின் மின் நிலையங்களை அமெரிக்கா முற்றாக அழித்துவிடும் என்று அவரே அச்சுறுத்தினார்.

ஈரானின் எண்ணெய், எரிவாயு உள்கட்டமைப்பை இயக்குவதற்கு மின் நிலையங்கள் முக்கியமானவை.

அந்த மின் நிலையங்களை அழித்துவிட்டால், எரிபொருளைப் பிரித்தெடுப்பதற்கும், சுத்திகரிப்பதற்கும், ஏற்றுமதி செய்வதற்குமான ஈரானின் திறனை நீக்கி, ஒரு பெரிய பொருளாதார மூச்சுத்திணறலை  ஈரானுக்கு ஏற்படுத்திவிடும்.

வெகு வீராப்பாக இப்படிப் பேசினாலும், இதைச் செய்வதற்கு ட்ரம்ப் தயங்குவார் என்றே தோன்றுகிறது.

மார்ச் 20, திங்கள், இரு நாள்களாக ஈரானும் அமெரிக்காவும் பயன் தரும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருப்பதாகச் சொன்ன ட்ரம்ப், ஐந்து நாள்களுக்கு மின் நிலையங்கள் மீதான தனது தாக்குதல் அச்சுறுத்தலைத் தள்ளிவைத்திருக்கிறார்.

ஈரானுக்கு அமைதிக்கான இன்னொரு வாய்ப்பு என்றும் அவர் கூறியிருக்கிறார். ஈரானோ, எண்ணெய் விலையை மட்டுப்படுவதற்கும், பங்குச் சந்தையைத் தூக்கிநிறுத்துவதற்கும் ட்ரம்ப் இந்தப் பொய்யைச் சொன்னதாகச் சொல்லி, அப்படிப் பேச்சுவார்த்தைகள் ஏதும் நடக்கவில்லை என்று மறுத்துவிட்டது.

ட்ரம்ப் தாக்குதலை ஐந்து நாள்கள் ஒத்திவைத்த செய்தி வந்தவுடன், எண்ணெய் விலை 96 டாலர் வரை தொட்டு, இப்போது மீண்டும் 100 டாலருக்கு மேல் உள்ளது.

பள்ளத்தில் வீழ இருந்த பங்குச்சந்தையும் எழுந்து நின்றது.  இரு தரப்பும் நிறையப் பொய்களையும், கொஞ்சம் மெய்யையும் சேர்த்துப் பேசுவதாகவே தோன்றுகிறது.

துருக்கி, எகிப்து, பாகிஸ்தான், ஒமான் இரு தரப்பையும் பேச்சுவார்த்தைகளுக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

முன்னதாக ட்ரம்ப்புக்குச் சற்றும் சளைக்காத ஈரான், தனது மின் நிலையங்கள் குறிவைக்கப்பட்டால், அமெரிக்காவுடன் தொடர்புள்ள மத்திய கிழக்கு எரிசக்தி நிலையங்களை மீளமுடியாதபடி அழிப்போம் என்ற எச்சரித்ததுடன், ஹோர்முஸ் நீரிணையை முற்றிலுமாக மூடிவிடுவோம் என்றும் அச்சுறுத்தியது.

ஹோர்முஸ் நீரிணையில் போருக்கு முன்பு ஒரு நாளைக்கு 100 கப்பல்கள் வரை பயணித்தன. இப்போது அவை ஐந்து, ஆறு என்ற அளவில் சுருங்கிவிட்டன.

இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், மலேசியா போன்ற ஆசிய நாடுகளும், ஐரோப்பிய நாடுகளும் இந்த நீரிணை வழியாக தங்கள் எண்ணெய்யைக் கணிசமான அளவில் பெற்றுவந்தன.

இந்த நீரிணையை, போர் தொடங்கிய பிறகு எதிரி நாட்டுக் கப்பல்களுக்கு ஈரான் மூடிவிட்டது. எண்ணெய், வாயு போன்றவற்றை இந்த நீரிணை வழியாக ஏற்றுமதி செய்ய முடியாமல் வளைகுடா நாடுகள் திண்டாடுகின்றன.

இது வழியாக இதுவரை பெற்றுவந்த எண்ணெய் வரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், இந்தியா உள்ளிட்ட பயனாளி நாடுகள் தவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதன் காரணமாக, எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துவிட்டது.

60-80 டாலர் இருந்த ஒரு பீப்பாய் (159 லிட்டர்) எண்ணெய் விலை, போருக்குப் பிறகு 114 டாலர் வரை உயர்ந்திருக்கிறது. இன்னும் உயரலாம்.

அமெரிக்காவில் சுமார் 30 கோடி வாகனங்கள் உள்ளன. இவற்றில் கார்கள் 10 கோடி, மற்றவை பெரும்பாலும் வர்த்தக ட்ரக்குகள்.

எண்ணெய் ஏற்றுமதி நாடாக அமெரிக்கா இருந்தாலும், உலக எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்தும் இடத்தில் அது இல்லை.

அமெரிக்காவில் 2.92 டாலருக்கு விற்ற ஒரு கேலன் (3.785 லிட்டர்) எண்ணெய், இப்போது 4 டாலரைத் தொட்டுவிட்டது.

எண்ணெய் விலையேற்றம், போக்குவரத்துக்குச் செலவுகளைக் கூட்டி, மற்ற பொருட்களின் விலையையும் உயர்த்தும். விலைவாசி உயர்ந்தால் பணவீக்கம் ஏற்படும்.

நீரிணை மூடப்பட்டதால், மிக விசித்திரமான முடிவுகளை எடுப்பதற்கு ட்ரம்ப் நிர்வாகம் தள்ளப்பட்டிருக்கிறது.

முதல் நடவடிக்கை, ரஷ்ய எண்ணெய்யை வாங்குவதற்கு எதிராக இருந்த தடை நீக்கம். அதுவும், ஒரு மாதத்திற்கு மட்டும். அதைவிட வேடிக்கை, நடுக்கடலில் சிக்கிக்கொண்டிருக்கும் கப்பல்களில் இருக்கும் ஈரான் எண்ணெய் மீதான தடையும் விலக்கப்பட்டிருப்பதுதான்.

இந்த விலக்கம் ஏப்ரல் 19 வரை மட்டுமே. ’இப்படி விலக்கு அளிக்கப்பட்டு, சுமார் 14 கோடி பீப்பாய் எண்ணெய்யை உலகச் சந்தைகளுக்கு விரைவாகக் கொண்டுவருவது, ஈரானால் எண்ணெய் விநியோகத்தில் ஏற்படுத்தப்பட்ட தற்காலிக அழுத்தங்களைக் குறைக்க உதவும்’ என்று அமெரிக்க நிதியமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் தெரிவித்தார்.

(உலகின் ஒரு நாளைய தேவை 10 கோடி பீப்பாய்கள். ஏற்கெனவே அமெரிக்கா தன்னுடைய இருப்புகளிலிருந்து 40 கோடி பீப்பாய்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது.)

முதலில், இது ஈரானால் ஏற்பட்ட நெருக்கடி அல்ல.  ட்ரம்ப், ஈரான் மீது போர் தொடுத்ததால் ஏற்பட்ட நிலை.

எனினும், கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்பது போல், இந்தச் சூழலுக்கு தாங்கள் எப்போதும் திட்டமிட்டிருந்ததாகச் சொன்ன   ட்ரம்ப், ‘ஈரானியர்களின் எண்ணெய்யையே அவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தி, அவர்களுடன் ஜூஜிட்சு (ஜூடோ போன்ற ஒரு தற்காப்புக் கலை) செய்வது போன்றது இந்த நடவடிக்கை’ என்று குறிப்பிட்டார்.

சுத்த அபத்தம்!

வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என்பது தனக்கு ஆச்சர்யமாக உள்ளது என்று ட்ரம்ப் சொன்னார். அமெரிக்கர்கள் சிலவற்றை திட்டமிடவில்லை, அல்லது எதிர்பார்க்கவில்லை என்பதற்கு இது ஓர் உதாரணம்.

அதைப் போலவே ஹோர்முஸ் பற்றி ஈரானின் இப்படியொரு எதிர்வினையை ட்ரம்ப் எதிர்பார்க்கவில்லை.

”போருக்கு முன்பு, தான் சற்றும் கலந்து பேசாத நேட்டோ நாடுகளை வேண்டி விரும்பி ஹோர்முஸை திறக்க ட்ரம்ப் அழைத்தார். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர்.

பின்பு அவர்களை “கோழைகள்” என்று ட்ரம்ப் சொன்னதாகட்டும், அதற்குப்பின் மார்ச் 20 அன்று ஹோர்முஸை பயன்படுத்துவோர் அதைத் திறந்திருக்கச் செய்ய வேண்டும் என்று அவர் கையைக் கழுவியதாகட்டும்…,

அதற்கு அடுத்த நாள் ஈரானுக்கு இரு நாள் கெடு விதித்து அவர்கள் நீரிணையைத் திறக்காவிடில் ஈரானின் மின் கட்டமைப்பைக் குண்டு வீசி அழித்துவிடுவதாக மிரட்டல் விடுத்தது ஆகட்டும், பின்பு மார்ச் 22 இங்கிலாந்து பிரதமர் ஸ்டார்மரோடு நீரிணையைத் திறக்க பேசியதாகட்டும் – ஒரு 80 வயதுக்காரர் இவ்வளவு முதிர்ச்சியற்றும், நிலைகுலைந்தும் இருக்கிறாரே என்று நம்மால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.”

எதற்கு இந்த போர்?

இவ்வளவு பிரச்னைகளை எண்ணியே அவருக்கு முன்பிருந்த அதிபர்கள், இதுபோன்ற அதிரடியான முடிவுகளை எடுக்கத் தயங்கினர்.

இருபது மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கூட்டு விரிவான செயல் திட்டம் (The Joint Comprehensive Plan of Action, JCPOA) என்ற ஈரானின் அணு சக்தி வேட்கையை ஒரு கட்டுக்குள் வைக்கும் ஒப்பந்தத்தை பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, ஜெர்மனியைச் சேர்த்துக்கொண்டு ஈரானோடு செய்து கொண்டார் அதிபர் ஒபாமா.

அந்த ஒப்பந்தம் ஈரானை 15 ஆண்டுகள் கட்டுப்படுத்தும். எனினும், அந்த 15 ஆண்டுகளும் ஈரானின் அணுக் கூடங்கள் சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பில் இருக்கும்.

அதை மிக மோசமான ஒப்பந்தம் என்று கூறி 2018-ல் வெளியில் வந்தார் ட்ரம்ப். ஈரான் அந்த வெளிநடப்பை தனக்குச் சாதகமாக ஆக்கிக்கொண்டது.

பொதுவாக, அணு பரவாமையை அணு சக்தி நாடுகள் விரும்புகின்றன. தங்களோடு அணு சக்தி நாடுகள் முடிய வேண்டும் என்றும் விரும்புகின்றன.

இதையொட்டியே, ஈரானின் அணு வேட்கை உலகளாவிய நெருக்கடியாகக் கருதப்படுகிறது. ஈரான் கட்டுப்படுத்தப்பட வேண்டிய “வாசல்” (threshold) நாடாகச் சித்திடரிக்கப்படுகிறது.

உலகில் எட்டு நாடுகள் அணு சக்தி நாடுகள் என்று தங்களை அறிவித்துக்கொண்டுள்ளன. அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், வட கொரியா.

1948, 56, 67 என்று மூன்று முறை தன்னை சுற்றியுள்ள அரபு நாடுகளுடன் பகை கொண்டு, போர் புரிந்து வென்ற இஸ்ரேல், ஓர் “அணு ஒளிவுமறைவு” (ஹீப்ரூ மொழியில் அமிமுத்) கொள்கையைப் பின்பற்றுகிறது.

அது தனது புதிய திறனை அறிவிக்கவும் இல்லை, வெளிப்படையாக எந்தவொரு சோதனையையும் நடத்தவும் இல்லை.

எனினும், 1979-ம் ஆண்டில் வேலா சம்பவம் என அழைக்கப்படும் கூட்டு அணு சோதனையை, தென்னாப்பிரிக்காவுடன் இணைந்து இஸ்ரேல் ரகசியமாக நடத்தியுள்ளது என்று பரவலாக நம்பப்படுகிறது.

(தென்னாப்பிரிக்காவின் வெள்ளை அரசு, கறுப்பின மக்களிடம் ஆட்சி மாறப்போகிறது என்று தெரிந்தவுடன் 1990-களின் முற்பகுதியில் தானாக முன்வந்து தனது ஆறு அணு ஆயுதங்களை அகற்றியது.)

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (Stockholm International Peace Research Institute, SIPRI) மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பு போன்ற சுயேச்சை ஆய்வு மையங்கள், தனது டிமோனா ஆராய்ச்சி உலையில் தயாரிக்கப்பட்ட 90 முதல் 200 அணு ஆயுதங்களை இஸ்ரேல் கொண்டுள்ளது என மதிப்பிடுகின்றனர்.

இருப்பினும், பொதுவில், “மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களை அறிமுகப்படுத்தும் முதல் நாடாக அது இருக்காது” என்ற நிலைப்பாட்டை இஸ்ரேல் கொண்டுள்ளது.

ஆனால், 1960-களிலேயே அது ஓர் அணுசக்தியாக மாறியிருக்கலாம் என்பதே வல்லுநர்களின் கருத்து.

1969-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனுக்கும் பிரதமர் கோல்டா மெயருக்கும் இடையிலான ரகசிய புரிதல், இஸ்ரேலின் அணு நிலையை சாத்தியமாக்கியது என்றும் நம்பப்படுகிறது.

இந்த “விலக்கு” அடிப்படையில், இஸ்ரேல் தனது ஆயுதங்களைச் சோதனை செய்யப்படாத, அறிவிக்கப்படாத, “கண்ணுக்குத் தெரியாததாக” வைத்திருக்கத் தேவையில்லை.

அதற்குப் பதிலாக அமெரிக்கா அதற்கு ராஜதந்திர பாதுகாப்பை வழங்குகிறது. இதையொட்டியே மத்திய கிழக்கு, அணு ஆயுதமல்லாத மண்டலமாக மாறுவதை ஆதரிக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களுக்கு எதிராக அமெரிக்கா இஸ்ரேலுடன் இணைந்து தொடர்ந்து வாக்களிக்கிறது.

இஸ்ரேலின் இந்த ஒளிவுமறைவு, ராஜதந்திர செலவுகள் எதுவுமில்லாமல் ஒருவித தடுப்பு சக்தியை (deterrence) அதற்கு வழங்குகிறது.

தொடரும்

Share.
Leave A Reply