ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடுத்துள்ள தாக்குதல்கள் சர்வதேச பரப்பில் அரசியல் நெருக்கடிகளையும் இலங்கை போன்ற மூன்றாம் உலக நாடுகளில் பொருளாதார மற்றும் பிராந்திய நெருக்கடிகளையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தன் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காகவே திடீரென ஈரான் மீது போர் தொடுத்துள்ளார் என்ற கதைகளும் பரவி வருகின்றன.
அதை மறுப்பதற்கில்லை என்பது போன்றே அமெரிக்காவில் ட்ரம்புக்கு எதிராக சில சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இம்மாதம் 12 ஆம் திகதி வொஷிங்டன் வணிக வளாகத்துக்கு முன்பாக திடீரென முளைத்த ட்ரம்ப்– எப்ஸ்டீன் சிலை இந்த விவகாரத்தை சூடு பிடிக்க வைத்துள்ளது.
ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழ காரணமான எப்ஸ்டீன் பற்றி அறிந்து கொள்ளல் மிக முக்கியமாகும். ட்ரம்ப் யார் என்பதை உலகமே அறியும். எப்ஸ்டீன் யார் என்பதை அண்மையில் தான் உலகம் அறிந்து கொண்டது.
அவரது இரகசிய கோப்புகளால் இப்போது ட்ரம்ப் என்பவரின் மற்றொரு பக்கத்தை உலகம் அறியத் தொடங்கியுள்ளது.
டரம்ப்பை போன்று ஜெப்ரி எப்ஸ்டீனும் ஒரு தொழில் அதிபராக விளங்கியவர். ஆனால் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பெரும் செல்வந்தர்களுக்கு போகப் பொருளாக விநியோகிக்கும் அபாயகரமான ஒரு வர்த்தகத்தை அவர் இரகசியமாக செய்து வந்ததை எவரும் அறிந்திருக்கவில்லை. அதற்காக அவர் தனியே ஒரு தீவையே விலைக்கு வாங்கியிருந்தார் என்பது முக்கிய விடயம்.
சிறுமிகள், இளம்பெண்கள் கடத்தல் , அவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை மற்றும் பல குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட ஜெப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019 ஆம் ஆண்டு ஜுலை மாதம் நியூயோர்க் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
வழக்கு தொடரப்பட்டு பாலியல் சம்பவங்களோடு தொடர்புடைய குற்றவாளியாக சிறையிலடைக்கப்பட்டார்.
ஆனால் அதே ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவர் சிறைக்குள்ளே மர்மமான முறையில் உயிரிழந்தார்.

மர்மம் நிலவுகின்றது. எப்ஸ்டீன் தன்னோடு தொடர்புடைய வாடிக்கையாளர்களை வீடியோக்கள் குரல் பதிவுகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் ஆவணங்களாக சேகரித்து வைத்திருந்தார்.
இவை எப்ஸ்டீன் கோப்புகள் (Epstein Files) என அழைக்கப்படுகின்றன. இலட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட இந்த ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் தற்போது பக்கங்களாக வெளியிடப்பட்டு வருகின்றன.
எப்ஸ்டீனிடம் வாடிக்கையாளர்களாக இருந்தவர்களின் தகவல்களை அறிந்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். பிரபல தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், முன்னாள் அரசியல்வாதிகள் அரச குடும்ப உறுப்பினர்கள் என பட்டியல் நீண்டது.
இதில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இருப்பது தெரிய வந்தது. 13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுடன், எப்ஸ்டீன் மற்றும் இளம் பெண்களுடன் இணைந்து ட்ரம்ப் எடுத்துக்கொண்ட படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
முன்னதாக பிரித்தானியாவின் பக்கிம்ஹாம் அரண்மனையே கலங்கி போகும் அளவுக்கு எப்ஸ்டீன் கோப்புகள் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்தின.
பிரிட்டிஸ் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ்ஸின் இளைய சகோதரரும் முன்னாள் இளவரசருமான அண்ட்ரூ மவுண்ட்பேட்டன், எப்ஸ்டீனுடன் கொண்டிருந்த தொடர்பு அம்பலமானது.
2001 இலிருந்து பத்து வருடங்கள் அண்ட்ரூ பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக தூதுவராக பணியாற்றினார். அக்காலகட்டத்தில் இவர் எப்ஸ்டீனுடன் நட்பை பேணிய அதே வேளை எப்ஸ்டீனுக்கு அவர் அனுப்பிய மின்னஞ்சல்கள் அம்பலமாகின.
இதனால் அரச பதவியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெப்ரவரி மாதம் அண்ட்ரூ கைது செய்யப்பட்டார். அதற்கு முன்னதாக இந்த விவகாரம் வெளிவந்த உடனேயே அவரது அரச பட்டங்கள் பறிக்கப்பட்ட அதே வேளை அவர் அரண்மனையிலிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
இப்படி ஒரு நிலைமை ட்ரம்புக்கு வரலாம் என்ற எதிர்வுகூரல்களுக்கு மத்தியிலேயே அவர் , உலகை திசை திருப்ப ஈரான் மீது தாக்குதலை மேற்கொண்டார் என சில மேற்கத்தேய ஊடகங்கள் அறிக்கையிடாமலில்லை.
ட்ரம்புக்கு இது ஒரு உன்னதமான திசை திருப்பல் போராக விளங்குகின்றது என த கார்டியன் வர்ணித்துள்ளது. ஏவுகணைகளின் இடி சத்தங்களுடன் உள்நாட்டு ஊழலை மூடி மறைக்கும் முயற்சி எனவும் அது கூறியுள்ளது.
இந்நிலையிலேயே எப்ஸ்டீனுக்கும் ட்ரம்புக்கும் இடையிலான தொடர்பை கிண்டல் தொனியில் கூறுவதற்கும் ட்ரம்ப் மீது குற்றச்சாட்டுகள் இருப்பதை அமெரிக்க மக்களுக்கு ஞாபகப்படுத்தவும் இரகசிய கைகுலுக்கல் (“The Secret Handshake”) என்ற கலைஞர் குழுவினர் ட்ரம்ப் –எப்ஸ்டீன் இருவரையும் இணைத்து சிலையொன்றை வடித்து அதை பொது இடத்தில் வைத்துள்ளனர்.
டைட்டானிக் படத்தின் நாயகன் நாயகி இருவரும் கப்பலின் முனையில் நின்றவாறு இருக்கும் மிகவும் புகழ் பெற்ற பாணியில் இருவரும் இருப்பதை போன்று உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலையானது தற்போதைய சூழ்நிலையில் அமெரிக்காவுக்கு உள்ளே ட்ரம்புக்கு எதிரான அலைகளை பிரதிபலித்துள்ளது.
அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் ஏகாதிபத்திய கொள்கைகளுடன் இணங்கிப் போகின்றவர்களுக்கு மத்தியில் ட்ரம்ப்பின் மறுபக்கத்தை அம்பலப்படுத்தும் குழுவினர் அமெரிக்காவில் இருக்கின்றனர் என்பதற்கு வொஷிங்டன் நினைவுச்சின்னத்துக்கு முன்பாக வைக்கப்பட்ட சிலை உதாரணமாகும்.
இந்த சிலையின் உயரம் 12 அடியாகும். சிலைக்கு அருகில் உள்ள பதாதைகளில் ‘அமெரிக்காவை மீண்டும் பாதுகாப்பாக வைத்திருப்போம்’ என்ற வாசகங்கள் காணப்படுகின்றன.. வொஷிங்டன் நினைவுச் சின்னமானது, ஏராளமான உல்லாசப்பயணிகள் மற்றும் உள்ளூர் வாசிகள் வருகை தரும் இடமாகும். ஆயிரக்கணக்கானோரின் கவனத்தை இந்த சிலை ஈர்த்துள்ளது என்று கூறப்படுகின்றது.
எப்ஸ்டீனுடனான நட்பை ட்ரம்ப் மறுத்தாலும் 2000 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ட்ரம்ப் மற்றும் எப்ஸ்டீன் இருவரும் நெருக்கமாக இருக்கும் படங்கள் எப்ஸ்டீன் கோப்புகளில் அம்பலமாகியுள்ளன. ட்ரம்ப் ஹோட்டல் வர்த்தக துறையில் முன்னோடி என்பதால் பாலியல் வர்த்தகத்துக்காக எப்ஸ்டீனுடன் அவர் நெருக்கத்தை பேணியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இது இவ்வாறிருக்க ஈரானும் எப்ஸ்டீன் விவகாரத்தை தனது ஏவுகணை மூலம் ஒரு பேசுபொருளாக்கியுள்ளது.
11 ஆம் திகதி ஈரானியப் புரட்சிகர காவல்படை (IRGC) நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களின் போது, ஒரு ஏவுகணையின் முன்பகுதியில் “எப்ஸ்டீன் தீவின் பாதிக்கப்பட்டவர்களின் நினைவாக” (In Memory Of Epstein Island Victims) என்ற வாசகம் எழுதப்பட்ட புகைப்படம் ஈரானிய ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
இதை எழுத்து உளவியல் அல்லது தகவல் போரின் ஒரு வடிவமாகத் தோன்றுவதாக போர் குறித்த விமர்சனங்கள் அல்லது கட்டுரைகளை எழுதுவோர் குறிப்பிடுகின்றனர்.
எப்ஸ்டீன் விவகாரம் மற்றும் அவரோடு தொடர்புடைய அமெரிக்காவின் முக்கிய நபர்களை நோக்கி ஈரான் நாட்டின் கல்வியியலாளர்கள் கடும் விமர்சனங்களை முன் வைத்திருந்தனர்.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப்பின்னர் அது அதிகரித்துள்ளது. தனிமனித ஒழுக்கம் மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமந்து நிற்கும் இவர்கள் அனைவருமே ஒரே இனத்தவர்கள் என்ற பொருள்படும்படியான விமர்சனங்களை ஈரான் முன்வைத்து வருகின்றது.
ஈரானின் பேராசிரியர் புவாட் இசாதி என்பவர் அண்மையில் நேர்காணல் ஒன்றின் போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கத் தலைமைகளை ‘எப்ஸ்டீன் வர்க்கம்’ (Epstein Class) என வர்ணித்திருந்தார்.
நாடுகளுக்கிடையிலான போர்களின் போது குறிப்பாக வெடிமருந்துகளில் அரசியல் அல்லது குறியீட்டு செய்திகளை அனுப்புவது உலகளவில் பல்வேறு இராணுவ மற்றும் துணை இராணுவக் குழுக்களால் தங்கள் எதிரிகளுக்கு ஒரு செய்தியை அனுப்பப் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான நடைமுறை எனக்கூறப்படுகின்றது.
ஈரான் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலானது ட்ரம்ப் தன் மீதுள்ள குற்றங்களை மறைப்பதற்கு முன்னெடுத்திருக்கும் ஒரு முயற்சி என ஈரான்வாசிகள் மாத்திரமின்றி ட்ரம்பின் செயற்பாடுகளால் அதிருப்தி கொண்டிருக்கும் அமெரிக்கர்களே கூறி வருகின்றனர். எப்ஸ்டீன் விவகாரத்தில் ட்ரம்ப் எப்படியும் பொறுப்பு கூற வேண்டியவராக இருக்கின்றார்.
இதே வேளை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையில் நிலவிய நட்பு குறித்தும் எப்ஸ்டீன் கோப்புகளில் அம்பலமானதைத் தொடர்ந்து அவரும் அவரது மனைவியான ஹிலாரி கிளிண்டனும் அமெரிக்க நாடாளுமன்ற மேற்பார்வை குழுவினரால் கடந்த மாத இறுதியில் விசாரணைகளுக்குட்படுத்தப்பட்டிருந்தனர்.
பாலியல் சர்ச்சைகளுக்கு பேர் போனவர் பில் கிளிண்டன். அமெரிக்க ஜனாதிபதிகளின் வரிசையில் பாலியல் குற்றச்சாட்டுகளுக்குள்ளாகி பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட்ட ஒரே ஜனாதிபதியாக பில் கிளிண்டன் விளங்குகின்றார்.
எனவே அதே போன்றதொரு விசாரணை டொனால்ட் ட்ரம்பின் மீதும் முன்னெடுக்கப்படுவது அவசியம் என கூறப்படுகின்றது. ஆனால் ட்ரம்பின் மீது நேரடியான குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லையென்றும் தொழில் ரீதியாக எப்ஸ்டினும் ட்ரம்பும் நட்பு கொண்டிருந்தார்களே ஒழிய எப்ஸ்டீனின் மறுபக்கம் எவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கவில்லையென ட்ரம்ப் அனுதாபிகள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
எப்ஸ்டீனின் எப்.பி.ஐ இரகசிய கோப்புகள் மக்களின் கோரிக்கைகளுக்கு இணங்கவே அமெரிக்க நீதித்துறையால் வெளியிடப்பட்டன. சுமார் 35 இலட்சம் பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகளில் புகைப்படங்கள், காணொலிகளும் உள்ளன.
அமெரிக்காவுக்கு எதிரான ஈரான் போன்ற நாடுகளில் இந்த விவகாரம் குறித்து பேசப்படுவது குறித்து ட்ரம்ப் அலட்டிக்கொள்ளாவிட்டாலும் தனது நாட்டில் இது குறித்து முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு அவர் பதில் கூற வேண்டியவராக இருக்கின்றார். அதே வேளை ஈரான் மீதான போரில் அடுத்தடுத்து இடம்பெற்ற சம்பவங்கள் டொனால்ட் டரம்ப் மற்றும் எப்ஸ்டீன் விவகாரத்தை மூடி மறைத்துள்ளதாகவே தெரிகின்றது.
சி.சி.என்
