2025 ஜன­வ­ரியில் இரண்­டா­வது தட­வை­யாக வெள்ளை மாளி­கைக்குள் பிர­வே­சித்த பிறகு, பத்து மாத­காலப் பகு­திக்குள் உலகின் பல்­வேறு பிராந்­தி­யங்­களில் எட்டுப் போர்­களை தடுத்து நிறுத்­தி­ய­தாக பெரு­மை­யுடன் உரிமை கோரிய அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், ஒரு தொலை­பேசி அழைப்பின் மூல­மாக தன்னைத் தவிர, வேறு எவ­ரினால் அவ்­வாறு போர்­களை நிறுத்த முடியும் என்று கேள்­வி­யெ­ழுப்பி கர்வம் காட்­டினார்.

ஆனால், தற்­போது இஸ்­ரே­லியப் பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யா­ஹு­வுடன் சேர்ந்து ஈரா­னுக்கு எதி­ராக தான் தொடுத்த போரை நிறுத்த முடி­யாமல் அவர் தடு­மாறிக் கொண்­டி­ருக்­கிறார்.

போரைத் தொடங்­கு­வ­தற்கு முன்­ன­தாக அமெ­ரிக்­கா­வுக்கும் இஸ்­ரே­லுக்கும் மூன்று குறிக்­கோள்கள் இருந்­தன. அணுத் திட்­டத்தை மூடு­வ­தற்கு ஈரானை நிர்ப்­பந்­திப்­பது, உயர்ந்­த­ள­வுக்கு செறி­வூட்­டப்­பட்ட யூரே­னி­யத்தை ஈரானில் இருந்து வெளியே கொண்டு போக வைப்­பது, மேற்­கா­சி­யாவில் அரசு அல்­லாத திரட்டல் படை­க­ளுக்கு ஈரான் வழங்­கி­வரும் ஆத­ரவைத் துண்­டிப்­ப­துடன் அதன் ஏவு­கணை ஆற்­றல்­களை நிர்­மூலம் செய்­வது.

ஆனால், சரி­யாக ஒரு மாதம் கடந்த நிலையில், ஹோர்முஸ் நீரி­ணையைத் திறக்க வேண்­டி­யி­ருப்­பதே ட்ரம்பின் முக்­கி­ய­மான முன்­னு­ரி­மைக்­கு­ரிய விட­யங்­களில் ஒன்­றாக இருக்­கி­றது. போர் வெடித்த பின்னர் ஈரான் மூடிய அந்த நீரி­ணையை திறப்­ப­தற்கு அவ­ருக்கு எளி­தான தெரி­வுகள் இல்லை. ஒன்றில் தெஹ்­ரா­னுடன் பேச்­சு­வார்த்­தையை நடத்தி உடன்­பா­டொன்­றுக்கு வேண்­டி­யி­ருக்­கி­றது அல்­லது தரையில் இரா­ணுவ நட­வ­டிக்­கைக்கு அதி­கா­ர­ம­ளிக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

ஆயி­ரக்­க­ணக்­கான துருப்­பு­களை ஏற்­கெ­னவே அமெ­ரிக்கா வளை­கு­டா­வுக்கு அனுப்பி வைத்­தி­ருப்­ப­தாக செய்­திகள் கூறு­கின்­றன.

ஈரானின் எரி­சக்­தி­வள உட்­கட்­ட­மைப்­புக்கள் மீதான தாக்­கு­தல்­களை சில நாட்­க­ளுக்கு நிறுத்­து­வ­தாக ட்ரம்ப் அறி­வித்­தி­ருப்­பது பேச்­சு­வார்த்­தை­களை நடத்­து­வதில் நாட்டம் இருப்­ப­தாக உல­கிற்கு காண்­பித்­துக்­கொண்டு மறு­பு­றத்தில் ஈரான் மீதான தாக்­கு­தல்­களை கடு­மை­யாக தீவி­ரப்­ப­டுத்­து­வ­தற்கு ஏற்­பா­டு­களைச் செய்­வ­தற்கு கால­அ­வ­கா­சத்தைப் பெறும் ஒரு தந்­தி­ரோ­பா­ய­மா­கவும் சந்­தே­கிக்­கப்­ப­டு­கி­றது.

போரை முடி­வுக்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு அமெ­ரிக்கா பாகிஸ்தான் ஊடாக 15 அம்ச சமா­தான யோச­னையை கடந்த வாரம் ஈரா­னுக்கு அனுப்­பி­யது. அதை நிரா­க­ரித்த தெஹ்ரான் அதன் சொந்த நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றது.

ஈரான் அதன் அணுத் திட்­டத்தைக் கைவிட்டு ஹோர்முஸ் நீரி­ணையை மீண்டும் திறந்தால் அதற்கு பிர­தி­யு­ப­கா­ர­மாக 30 நாட்­க­ளுக்கு போர்­நி­றுத்தம் செய்து தடை­களில் தளர்­வு­களைச் செய்யத் தயா­ராக இருப்­ப­தாக அமெ­ரிக்கா அறி­வித்­தது.

ஆனால், பெப்­ர­வரி 28 அதி­யுயர் ஆன்­மீகத் தலைவர் ஆயத்­துல்லா அலி கமேனி­யையும் வேறு­பல தலை­வர்­க­ளையும் விமா­னக்­குண்டு வீச்­சுக்­களின் மூலம் படு­கொலை செய்து அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் தொடங்­கிய போரை முடி­வுக்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு ஈரான் ஐந்து நிபந்­த­னை­களை முன்­வைத்­தி­ருக்­கி­றது.

ஆக்­கி­ர­மிப்­பையும் படு­கொ­லை­க­ளையும் முற்­று­முழு­தாக நிறுத்த வேண்டும்; எதிர்­காலத் தாக்­கு­தல்­களை தடுப்­ப­தற்கு உறு­தி­யான செயற்­பாட்டு முறைகள் வகுக்­கப்­ப­ட­வேண்டும்; போரின் விளை­வான அழி­வு­க­ளுக்கு இழப்­பீ­டுகள் வழங்­கப்­பட வேண்டும்; சகல முனை­க­ளிலும் மோதல்­களை முடி­வுக்குக் கொண்­டு­வர வேண்டும்; ஹேரர்முஸ் நீரிணை மீதான ஈரானின் இறைமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்டும் என்­ப­வையே அந்த நிபந்­த­னைகள்.

அதி­யுயர் தலைவர் உட்­பட தலை­வர்­களும் படைத்­தள­ப­தி­களும் கொல்­லப்­பட்ட பின்­னரும் கூட தலை­மைத்­துவக் கட்­ட­மைப்பு முற்­றாக நிலை­கு­லை­யாமல் இஸ்­ரே­லுக்கும், அமெ­ரிக்கப் படைத் தளங்­களைக் கொண்­டி­ருக்கும் வளை­குடா அரபு நாடு­க­ளுக்கும் எதி­ரான ஏவு­கணைத் தாக்­கு­தல்­க­ளுக்கு வழி­காட்டிக் கொண்­டி­ருப்­பது மாத்­தி­ர­மல்ல,

மிலேச்­சத்­த­ன­மான ஒரு மாத­காலக் குண்டு வீச்­சு­களின் விளை­வான முன்­னென்­று­மில்­லாத அழி­வு­க­ளுக்கு மத்­தி­யிலும் கூட அமெ­ரிக்­காவின் நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில் போரை முடி­வுக்குக் கொண்­டு­வர முடி­யாது என்ற உறு­திப்­பாட்­டுடன் ஈரான் அடி­ப­ணி­யாமல் நிற்­பது உலகை வியக்க வைக்­கி­றது.

எந்த நேரத்தில் எந்த வித­மாக நடந்து கொள்வார் என்றோ அல்­லது பேசுவார் என்றோ கூற­மு­டி­யாத தான்­தோன்­றித்­த­ன­மான பேர்­வ­ழி­யான ட்ரம்ப், போர் நிலை­வரம் குறித்து தெரி­வித்து வரும் கருத்­துக்­களை உல­கினால் நம்ப முடி­யாமல் இருக்­கி­றது.

போரில் அமெ­ரிக்கா ஏற்­கெ­னவே வெற்றி பெற்­று­விட்­டது என்று ஒரு தடவை கூறிய அவர், சில நாட்கள் கழித்து ஹோர்முஸ் நீரி­ணையைத் மீண்டும் திறப்­ப­தற்கு போர்க் கப்­பல்­களை அனுப்பி வைக்­கு­மாறு மற்­றைய நாடு­களை குறிப்­பாக, வட அத்­தி­லாந்திக் ஒப்­பந்த இரா­ணுவக் கூட்­ட­ணியின் (நேட்டோ) உறுப்பு நாடு­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்தார். ஆனால், அந்த நாடுகள் அமெ­ரிக்­கா­வுடன் போரில் இணைந்து கொள்­வ­தற்கு திட்­ட­வட்­ட­மாக மறுத்து விட்­டன.

போர் தொடங்­கி­ய­தற்கு பிறகு முதற்­த­ட­வை­யாக கடந்த வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற அமெ­ரிக்க அமைச்­ச­ரவைக் கூட்­டத்தில் ட்ரம்ப் தனது வேண்­டு­கோளை நிரா­க­ரித்­த­மைக்­காக நேட்டோ நாடு­களை கடு­மை­யாகக் கண்­டனம் செய்தார்.

திட்­ட­மி­டப்­பட்ட கால அட்­ட­வ­ணைக்கு முன்­ன­தா­கவே போரில் அமெ­ரிக்கா வெற்­றியை நோக்கிச் செல்­வ­தாக அமைச்­ச­ர­வையில் கூறிய அவர் உடன்­பா­டொன்­றுக்கு வரு­வ­தற்கு ஈரான் தன்னைக் கெஞ்சிக் கொண்­டி­ருப்­ப­தா­கவும் குறிப்­பிட்டார் .

இத­னி­டையே, ஈரா­னுக்கு எதி­ரான போர் மாதங்­களில் அல்ல, வாரங்­களில் முடி­வுக்கு வந்­து­விடும் என்று அமெ­ரிக்கா எதிர்­பார்ப்­ப­தாக அதன் இரா­ஜாங்க அமைச்சர் மக்றோ ரூபியோ கடந்த வெள்­ளக்­கி­ழமை பிரான்ஸில் ஜி- 7 நாடு­களின் வெளி­யு­றவு அமைச்­சர்­க­ளு­ட­னான சந்­திப்­பின்­போது கூறி­யி­ருக்­கிறார்.

ஹோர்முஸ் நீரி­ணையை பயன்­ப­டுத்­து­வ­தற்கு கப்­பல்­க­ளுக்கு கட்­டணம் அற­விடும் முறையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து ஈரான் தீர்­மா­னிக்­கக்­கூடும் என்று அவர் அங்கு செய்த எச்­ச­ரிக்கை அந்த நீரி­ணையை திறப்­ப­தற்கு மற்­றைய நாடு­களின் உதவி அமெ­ரிக்­கா­வுக்கு அவ­சி­ய­மாகத் தேவைப்­ப­டு­கி­றது என்­பதை உணர்த்­து­கி­றது.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வரை, இது இன்­னொரு பின்­ன­டைவுப் போராக அமையப் போகி­றது என்­ப­தையே இது­வ­ரை­யான நிகழ்­வுப்­போக்­குகள் கட்­டியம் கூறு­கின்­றன. அதனால், ஈரானை மீண்டும் தலை­யெ­டுக்­காமல் செய்­வ­தற்­காக அதன் இரா­ணுவ மற்றும் பொரு­ளா­தாரக் கட­மைப்­புக்­களை இயன்­ற­வரை நிர்­மூலம் செய்­வதில் அமெ­ரிக்­காவும் இஸ்­ரேலும் முனைப்புக் காட்­டக்­கூ­டிய பேரா­பத்து இருக்­கி­றது.

அதற்கு பதி­ல­டி­யாக வளை­குடா அரபு நாடு­களின் எண்ணெய் வளங்கள் மீது ஈரான் ஏவு­கணைத் தாக்­கு­தல்­களை தீவி­ரப்­ப­டுத்தும் சாத்­தியம் இருக்­கி­றது. இதனால் ஒட்டு மொத்தத்தில் மத்­திய கிழக்கின் எண்ணெய் வளமே அழியப் போகி­றது.

போருக்­காக இது­வ­ரையில் அமெ­ரிக்­கா­வுக்கு 30-40 பில்­லியன் டொலர்­களும் இஸ்­ரே­லுக்கு 300 மில்­லியன் டொலர்­களும் நாளொன்­றுக்கு செல­வா­கு­வ­தாக ‘ த கார்­டியன் ‘ செய்தி வெளி­யிட்­டி­ருக்­கி­றது.

அமெ­ரிக்­கா­வுக்கு ஈரான் எந்­த­வி­த­மான உட­னடி ஆபத்­தையும் தோற்­று­வித்­தி­ருக்­க­வில்லை என்றும் இன்­றைய போர் இஸ்­ரேலின் தயா­ரிப்பு என்றும் கூறி, போர் தொடங்­கிய மூன்று வாரங்­களில் அமெ­ரிக்­காவின் பயங்­க­ர­வாத தடுப்பு நிலை­யத்தின் பணிப்­பா­ள­ரான ஜோ கென்ற் தனது பத­வியை இரா­ஜி­னாமா செய்­தமை போரை தொடங்­கி­ய­மைக்­காக ட்ரம்ப் தனது நிரு­வா­கத்­திற்குள் எந்­த­ள­வுக்கு அதி­ருப்­தியை எதிர்­நோக்­கு­கிறார் என்­பதைக் காட்­டு­கி­றது.

2025 ஜூலையில் பணிப்­பா­ள­ராக நிய­மிக்­கப்­பட்ட குடி­ய­ரசு கட்­சிக்­கா­ர­ரான கென்ற், “இஸ்­ரே­லி­ட­மி­ருந்தும் அதற்கு ஆத­ர­வான செல்­வாக்­கு­மிக்க யூத ஆதரவுக் குழுக்களிடமிருந்தும் வந்த நெருக்குதலின் விளைவாகவே இந்தப் போரை நாம் தொடங்கியிருக்கிறோம் என்பது தெளிவானது. இதை நல்ல மனச்சாட்சியுடன் ஆதரிக்க முடியாது” என்று குறிப்பிட்டிருந்தார்.

உலகின் பல்வேறு பிராந்தியங்களில் படைகளை தரைப் போரில் இறக்கியதன் விளைவாக அதன் வரலாற்றில் பெற்ற படுமோசமான அனுபவங்களில் இருந்து அமெரிக்கா இன்னமும் படிப்பினை எதையும் பெற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே ட்ரம்பின் தற்போதைய செயற்பாடுகள் உணர்த்துகின்றன.

இந்த கட்டத்திலாவது போரை நிறுத்துவதற்கு ட்ரம்புக்கு உண்மையில் அக்கறை இருக்குமானால், எந்தவொரு இராஜதந்திர முயற்சியிலும் முன்னேற்றம் ஏற்படுவதற்கு முன்னதாக வெறிபிடித்த அடாவடிக்காரன் போன்று ஈரான் மற்றும் லெபனான் மீது குண்டுமாரி பொழிந்து கொண்டிருக்கும் தனது போர்க் கூட்டாளியான இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாஹுவை அவர் அடக்கிவைக்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்.

 

வீரகத்தி தனபாலசிங்கம்

Share.
Leave A Reply