-அரசியல் தஞ்சம் கோருவோருக்கான தேசிய நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த ஆண்டு (2025) பிரான்சின் அரசியல் தஞ்சம் கோருவோருக்கான தேசிய நீதிமன்றம் 2,197 இலங்கையர்களது அரசியல் தஞ்ச கோரிக்கைக்கான மேல் முறையீட்டு வழக்கை விசாரித்தது.
இதில் 466 பெண்களது வழக்குகளும் 1,731 ஆண்களது வழக்குகளும் இருந்தன. இதில் 93 பெண்களுக்கும் 296 ஆண்களுக்கும் முழுமையான அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. 67 பெண்களுக்கும் 30 ஆண்களுக்கும் தற்காலிக பாதுகாப்பு (protection subsidiaire) வழங்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 486 இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் கோருவோருக்கான தேசிய நீதிமன்றம் (CNDA) அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது.
உலகளாவிய மனிதாபிமான நெருக்கடிகளுக்கு இடையே, அடைக்கல உரிமை (தஞ்சம் கோருவது) என்பது சட்டத்தின் முக்கியத் தூணாக உள்ளது.
பிரான்சின் ‘தேசிய அடைக்கல உரிமை நீதிமன்றம்’ தனது இரண்டாயிரத்து இருபத்து ஐந்தாம் ஆண்டுக்கான அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. இதில் மேல்முறையீடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதும், பாதுகாப்பு வழங்கும் விகிதம் உயர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.
தங்கள் சொந்த நாட்டில் துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஒருவர், வேறொரு நாட்டில் சர்வதேசப் பாதுகாப்பு கோரும் உரிமையே இதுவாகும். பிரான்சில் இந்த நடைமுறை இரண்டு கட்டங்களாகச் செயல்படுகிறது.
முதலில் ‘அகதிகள் மற்றும் நாடற்றவர்களுக்கான பாதுகாப்பு அலுவலகம்’ OFPRA விண்ணப்பங்களை விசாரித்து முடிவெடுக்கும்.
அங்கு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால், தஞ்சம் கோருவோர் ‘தேசிய அடைக்கல உரிமை நீதிமன்றத்தில்’ மேல்முறையீடு செய்யலாம்.
2025ஆம் ஆண்டில், மொத்தம் அறுபதாயிரத்து அறுபத்து ஐந்து (60,065) மேல்முறையீடுகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆண்டை விட ஆறு வீதம் அதிகமாகும். உலகெங்கிலும் நடக்கும் போர்கள் மற்றும் நெருக்கடிகளே இந்த அதிகரிப்பிற்குக் காரணமாகும்.
அதிக அளவில் தஞ்சம் கோரியவர்கள் கின்யா, காங்கோ ஜனநாயகக் குடியரசு, கோட் டிவார், வங்கதேசம், துருக்கி, ஆப்கானிஸ்தான், இலங்கை, அங்கோலா, நைஜீரியா, ஜோர்ஜியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

