கண்டியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கண்டி புனித சில்வெஸ்டர் கல்லூரி மாணவர்கள் இருவரினதும் இறுதிக்கிரியைகள் நேற்று (04)கண்டி மஹியாவை பொது மயானத்தில் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் நடைபெற்றன.

சம்பவத்தின் பின்னணி:

கடந்த வியாழக்கிழமை (02) அதிகாலை, கண்டி புனித சில்வெஸ்டர் மற்றும் வித்தியார்த்த கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்வதற்காக மாணவர்கள் இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.

இதன்போது பல்லேகலை பகுதியில் தனியார் பேருந்துடன் மோதி இந்தத் துயர விபத்து நிகழ்ந்தது.

விபத்து நடந்த இடத்திலேயே மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மாணவன் உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து பயணித்த மாணவன் கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், அன்றைய தினமே (02) மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஒரே கல்லூரியில் கணிதப் பிரிவில் கல்வி கற்று வந்த இவ்விரு நண்பர்களும், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கச் சென்ற போது விபத்தில் சிக்கியமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இதயம் வலிக்கிறதே…” எனத் தாயார் எழுப்பிய கதறல் சத்தம், அஞ்சலி செலுத்த வந்திருந்த அனைவரது கண்களையும் குளமாக்கியது.

ஒரே கல்லூரியில் பயின்று, மரணத்திலும் பிரியாத இந்த இரு ஆருயிர் நண்பர்களின் பூதவுடல்களும் நேற்று மஹியாவை பொது மயானத்தில் ஒன்றாவே நல்லடக்கம் செய்யப்பட்டன. இவர்களின் மறைவுக்குக் கண்டி மாவட்டத்தின் பல தரப்பினரும் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply