அமெரிக்காவில் வசித்து வந்த ஈரான் புரட்சிகர இராணுவத்தின் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் காசிம் சுலைமானியின் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

காசிம் சுலைமானியின் சகோதரியின் மகள் ஹமிதே சுலைமானி அப்ஷார் மற்றும் அவரது மகள் சரீனசதாத் ஹொசைனி ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களது நிரந்தர வதிவிட உரிமையை அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோ இரத்து செய்துள்ளார். தற்போது இவர்கள் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கப் பிரிவின் காவலில் உள்ளனர்.

2015-இல் சுற்றுலா விசா மூலம் அமெரிக்கா சென்ற ஹமிதே, 2019-இல் அரசியல் தஞ்சம் பெற்றார். எனினும், தஞ்சம் பெற்ற பின்னர் அவர் நான்கு முறை ஈரானுக்குப் பயணம் செய்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இது அவரது தஞ்சம் கோரிய விண்ணப்பம் “மோசடியானது” என்பதை நிரூபிப்பதாக அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவர்கள் ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் கைது நடவடிக்கையை காசிம் சுலைமானியின் மகள் நர்ஜெஸ் சுலைமானி வன்மையாகக் கண்டித்துள்ளார்:

“கைது செய்யப்பட்டவர்களுக்கும் எனது தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை; அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் பொய்யான தகவல்களைப் பரப்புகிறது” என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா பலவீனமடைந்து வருவதால் இத்தகைய பொய்களைப் புனைவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

ஜெனரல் காசிம் சுலைமானி 2020-ஆம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்காவினால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

அண்மையில் உரையாற்றிய ஜனாதிபதி ட்ரம்ப், சுலைமானி ஒரு “கொடிய மேதை” எனவும், அவர் உயிருடன் இருந்திருந்தால் தற்போதைய போரில் ஈரான் இன்னும் பலமான நிலையில் இருந்திருக்கும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

Share.
Leave A Reply