ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த போதும், அங்கிருந்த திரும்பிய பின்னரும், ஊடகங்களுக்கு வழங்கிய செவ்விகளில், மாகாண சபை தேர்தல்கள் தொடர்பாக, இந்தியத் தரப்பில் அழுத்தங்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை எனக் கூறியிருந்தார்.
இதுபோன்ற அரசியல் விடயங்கள் தொடர்பாக இந்தியத் தரப்பில் யாருமே தங்களுடன் பேசவே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அவர் நாடு திரும்பிய ஓரிரு வாரங்களுக்குப் பின்னர், மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து ஜே.வி.பி. தலைமையகத்தில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
மாகாண சபை தேர்தல்களுக்கு தயாராகுமாறு கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு ரில்வின் சில்வா அறிவித்திருந்தார். ஆனால், அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான புறச் சூழல் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.
தேர்தலை நடத்துவதானால் முதலில், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கேற்ற வகையில், சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும்.
அதற்கான வாய்ப்புகள் இருந்தும் அதனைப் பயன்படுத்த அரசாங்கம் இன்னமும் தயாராகவில்லை.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக, அமைக்கப்பட்ட தெரிவு குழு பல மாதங்களுக்குப் பின்னர் அண்மையில் முதல்முறையாக கூடியிருந்தது.
அதன் இரண்டாவது அமர்வு வரும் 7ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த குழு மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், அது மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சூழலை உருவாக்குமா என்பது சந்தேகம்.
எவ்வாறாயினும், இந்த ஆண்டின் பிற்பகுதியில் மாகாண சபைகளுக்கு தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும், ஆளும்கட்சி அதற்கு தயாராகி வருவதாகவும் நம்பப்பட்டது.
ஆனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான போரை ஆரம்பித்த பின்னர், எல்லாமே குழம்பிப் போயிருக்கிறது.
எரிபொருள் நெருக்கடி தொடக்கம் விலைவாசி அதிகரிப்பு என மீண்டும் பழையபடி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியிருக்கிறது. மக்கள் நெருக்கடிகளுக்கு மேல் நெருக்கடியை சந்திக்க தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தச் சூழலில் அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கான சாத்தியங்கள் உள்ளதா என்பது சந்தேகம்.
ஏற்கெனவே, இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருந்தது.
ஆனால், கடந்த ஆண்டு இறுதியில் தித்வா புயலை அடுத்து ஏற்பட்ட பேரிடர் நாட்டை புரட்டிப் போட்டது.
அந்த பேரிடரின் பாதிப்பில் இருந்து மீளுவதற்கான வழி வகைகள் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
பேரிடர் ஒன்றில் இருந்து மீண்டெழுவது என்பது மிகமிக கடினமானது.
ஒன்றில், உள்நாட்டுப் பொருளாதார பலம் இருக்க வேண்டும். அல்லது வெளிநாட்டு உதவி இருக்க வேண்டும்.
இந்த இரண்டும் இல்லாமல் பேரிடர் ஒன்றில் இருந்து மீண்டெழுவதற்கு ஒரு நாடு கடினமான விலை கொடுக்க வேண்டி இருக்கும்.
நீண்டகாலத்துக்கு போராட வேண்டி இருக்கும். இலங்கை கிட்டத்தட்ட அந்த நிலையிலேயே இருக்கிறது.
உள்நாட்டு பொருளாதாரம் வலுவாக இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தில் இருந்து, மெல்ல மெல்ல விடுபடத் தொடங்கியிருந்த சூழலில், அடுத்த இடியாகத் தாக்கியிருக்கிறது ஈரான் போர்.
இந்தப் போர் எல்லா வழிகளிலும் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் பணியாற்றுகிறார்கள்.
இலங்கையின் தேயிலை உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் பெருமளவில் சந்தைப்படுத்தப்படுகின்றன.
இவற்றின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கின்ற அந்நிய செலாவணி வருவாய் மிகப்பெரியது. இவற்றுக்கு அப்பால், மத்திய கிழக்கில் இருந்து இலங்கைக்கான எரிபொருள் தேவைகள் நிறைவேற்ற வேண்டிய நிலையும் உள்ளது.
எரிபொருளை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், நாட்டை முழு இயல்பு நிலையில் பேண முடியாத நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த சிக்கல்கள், நெருக்கடிகள் எப்போது முடிவுக்கு வரும் என யாராலும் கணிக்க முடியாத நிலையே காணப்படுகிறது. ஏனென்றால் மத்திய கிழக்குப் போர், எவ்வளவு நாள் நீடிக்கும் என யாருக்கும் தெரியாது. இந்தப் போரை தொடங்கிய ட்ரம்ப் அல்லது நெத்தன்யாஹுவுக்கோ கூட அது தெரியாது. அவர்கள் இந்த போர் சில நாட்களில் முடிந்து விடும் என்றே எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால், இப்பொழுது வாரங்கள் அல்ல, மாதக்கணக்கில் நீடிக்கும் என்பது போல அவர்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு நீண்ட நாட்கள் போர் நீடிக்குமேயானால் இலங்கையின் பொருளாதார நிலையில் பெரும் குழப்பங்கள் ஏற்படும்.
நான்கு வாரங்களுக்குள்ளேயே இலங்கையின் பொருளாதாரம் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கிறது. அவ்வப்போது வரிசைகள், தோன்றி மறைகின்றன.
பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்து கொண்டிருக்கின்றன.
பொருட்கள் பதுக்கப்படுவதும், தட்டுப்பாடுகள் ஏற்படுவதும் வழக்கமாகியிருக்கிறது.
இவ்வாறான நிலையில், இந்த போர் இன்னும் சில வாரங்களுக்கோ மாதங்களுக்கோ நீடிக்குமேயானால், அதன் பொருளாதார பாதிப்புகளில் இருந்து இலகுவாக தப்பிக்க முடியாது. இந்தச் சூழலில் நாடு இன்னொரு தேர்தலை எதிர்கொள்வது என்பது சாத்தியமற்றது.
கடந்த ஆண்டு இறுதியில் மாகாண சபை தேர்தல்களுக்கு அரசாங்கம் தயாராவது போன்ற ஒரு சூழல் காணப்பட்டது.
ஆனால், சூறாவளி ஏற்படுத்திய பாதிப்புகளை தொடர்ந்த, மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படுவது சாத்தியம் இல்லை என்ற நிலை ஏற்பட்டது.
ஏனென்றால் சூறாவளியினால் இலங்கைக்கு கிட்டத்தட்ட 4.1 பில்லியன் டொலர்கள் வரை நேரடி இழப்பு ஏற்பட்டதாக உலக வங்கியின் மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
அந்த நெருக்கடியில் இருந்து மீளுவதற்கான வழியே இன்னமும் கண்டறியப்படவில்லை.
இந்தச் சூழலில் இப்போது மத்திய கிழக்குப் போர் நிலைமை பொருளாதாரத்தை மேலும் சீரழிக்கத் தொடங்கியிருக்கிறது.
இந்த சீரழிவு நிலையில் இருந்து மீண்டெழாமல் கிட்டத்தட்ட 11 பில்லியன் ரூபாவை செலவு செய்து ஒரு தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருக்காது.
அரசாங்கம், தேர்தலை நடத்தாமல் இழுத்தடிப்பதற்கு தனியே பொருளாதார ரீதியான காரணங்கள் மாத்திரம் இல்லை.
ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்றத் தேர்தலிலும் பெரும் வெற்றியை பெற்றுவிட்ட தேசிய மக்கள் சக்திக்கு, அடுத்து வந்த உள்ளூராட்சி தேர்தலில் 1.8 மில்லியன் வாக்குகள் வீழ்ச்சி ஏற்பட்டது.
அந்த வீழ்ச்சி தொடர்கிறதா என்பதை வெளிப்படுத்துகின்ற தேர்தலாக மாகாண சபை தேர்தல்கள் இருக்கும்.
ஜனாதிபதி தேர்தலிலும் பின்னர் பாராளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி மீது ஏற்பட்ட நம்பிக்கையும் ஈர்ப்பும் உள்ளூராட்சி தேர்தலில் விலகத் தொடங்கி இருந்தது.
உள்ளூராட்சி தேர்தல் முடிந்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப் போகின்ற நிலையில், அரசாங்கத்தின் செல்வாக்கு மேலும் வீழ்ச்சி கண்டிருப்பதாக ஒரு கருத்து நிலவுகிறது.
அதனை நிரூபிக்கின்ற வகையிலான, அதிகாரபூர்வ புள்ளிவிவரம் ஒன்று வெளியாவதை அரசாங்கம் விரும்பாது.
ஏனென்றால் இன்னும் மூன்றரை ஆண்டுகளுக்கு ஆட்சியில் இருக்க வேண்டிய அரசாங்கம், தான் பலவீனப்பட்டு கொண்டிருக்கின்றேன் என்பதை வெளிப்படுத்துவதற்கு தயாராக இல்லை.
அது அடுத்த மூன்றரை ஆண்டுகளிலும் எதிர்க்கட்சிகளின் தொடர் குடைச்சல்களுக்கும் விமர்சனங்களுக்கும் இரையாகின்ற நிலையை ஏற்படுத்தும்.
அதனால் ஒன்றில் வெல்லக் கூடிய ஒரு தேர்தலை நடத்த வேண்டும் அல்லது தேர்தலை நடத்தாமல் இழுத்தடிக்க வேண்டும்.
இதனால் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி அரசாங்கம் மாகாண சபை தேர்தலை இழுத்தடித்து வருகிறது.
அதேவேளை, இந்திய தரப்பு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுத்திருந்தாலும் கொடுக்காவிட்டாலும் – ஒரு கட்டத்தில் ஜே.வி.பி. இந்த சவாலை ஏற்றுக்கொள்ள தயாராகியது.
ஏனென்றால் இன்னும் மூன்றரை ஆண்டுகள் காத்திருந்து ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னர், மாகாண சபை தேர்தல்களை நடத்தினால் அதில் ஏற்படக் கூடிய, பலவீனங்கள் அடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும் ஆபத்தும் உள்ளது.
அதற்கிடையில், கட்சியைப் பலப்படுத்திக் கொள்வதற்கும், அதன் இப்போதைய நிலையை அறிந்து கொள்வதற்கும், மாகாண சபைத் தேர்தல்களை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு நடத்துவது பற்றியும் ஜே.வி.பி. தலைமை ஆராய்ந்திருந்தது.
ஆனால், நாட்டின் பொருளாதாரச் சூழல் அதற்கான வாய்ப்புகளை இப்போது கொடுக்கும் போலத் தெரியவில்லை.
இது ஒரு பக்கத்தில் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் தேர்தல் இழுத்தடிக்கப்படுவது அதற்கு பாதகமானதாகவே அமையும்.
தேர்தல் இன்னும் ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்டு விட்டால், அடுத்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஜே.வி.பி. அரசாங்கம் பலவீனப்பட்டு விட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும்.
விரைவில் தோல்வி காணப் போகும் அரசாங்கம் என்ற அடையாளத்தையும் உருவாக்கும்.
அது அந்த தேர்தல்களில் வெல்ல முடியாத சூழலை ஏற்படுத்தலாம்.
அதனால் தான் அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு முற்பட்டது.
ஆனால், இயற்கை பேரிடரும், போரும் உலக மாற்றங்களும் அரசாங்கத்தின் கனவுகளைத் தொடர்ந்தும் கலைத்துக் கொண்டேயிருப்பது தான் அதன் துரதிஷ்டம்.
-சத்திரியன்-

