ஜே.வி.பியின் பொதுச்­செ­ய­லாளர் ரில்வின் சில்வா இந்­தி­யா­வுக்கு பயணம் மேற்­கொண்­டி­ருந்த போதும், அங்­கி­ருந்த திரும்­பிய பின்­னரும், ஊட­கங்­க­ளுக்கு வழங்­கிய செவ்­வி­களில், மாகாண சபை தேர்­தல்கள் தொடர்­பாக, இந்­தியத் தரப்பில் அழுத்­தங்கள் எதுவும் கொடுக்­கப்­ப­ட­வில்லை எனக் கூறி­யி­ருந்தார்.

இது­போன்ற அர­சியல் விட­யங்கள் தொடர்­பாக இந்­தியத் தரப்பில் யாருமே தங்­க­ளுடன் பேசவே இல்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

ஆனால், அவர் நாடு திரும்­பிய ஓரிரு வாரங்­க­ளுக்குப் பின்னர், மாகாண சபைத் தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டுகள் குறித்து ஜே.வி.பி. தலை­மை­ய­கத்தில் கலந்­து­ரை­யா­டல்கள் நடத்­தப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

மாகாண சபை தேர்­தல்­க­ளுக்கு தயா­ரா­கு­மாறு கட்­சியின் முக்­கிய தலை­வர்­க­ளுக்கு ரில்வின் சில்வா அறி­வித்­தி­ருந்தார். ஆனால், அர­சாங்கம் மாகாண சபைத் தேர்­தலை நடத்­து­வ­தற்­கான புறச் சூழல் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

தேர்­தலை நடத்­து­வ­தானால் முதலில், பழைய முறையில் தேர்­தலை நடத்­து­வ­தற்­கேற்ற வகையில், சட்­டத்தில் திருத்தம் செய்­யப்­பட வேண்டும்.

அதற்­கான வாய்ப்­புகள் இருந்தும் அதனைப் பயன்­ப­டுத்த அர­சாங்கம் இன்­னமும் தயா­ரா­க­வில்லை.

அதே­வேளை, மாகா­ண­சபைத் தேர்­தலை எந்த முறையில் நடத்­து­வது என்­பது தொடர்­பாக ஆராய்­வ­தற்­காக, அமைக்­கப்­பட்ட தெரிவு குழு பல மாதங்­க­ளுக்குப் பின்னர் அண்­மையில் முதல்­முறை­யாக கூடி­யி­ருந்­தது.

அதன் இரண்­டா­வது அமர்வு வரும் 7ஆம் திகதி இடம்­பெ­ற­வுள்­ளது.

இந்த குழு மூன்று மாதங்­க­ளுக்குள் அறிக்கை சமர்ப்­பிக்கும் என எதிர்­பார்க்­கப்­பட்­டாலும், அது மாகாண சபை தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான சூழலை உரு­வாக்­குமா என்­பது சந்­தேகம்.

எவ்­வா­றா­யினும், இந்த ஆண்டின் பிற்­ப­கு­தியில் மாகாண சபை­க­ளுக்கு தேர்தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புகள் இருப்­ப­தா­கவும், ஆளும்­கட்சி அதற்கு தயா­ராகி வரு­வ­தா­கவும் நம்­பப்­பட்­டது.

ஆனால், அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் மீதான போரை ஆரம்­பித்த பின்னர், எல்­லாமே குழம்பிப் போயி­ருக்­கி­றது.

எரி­பொருள் நெருக்­கடி தொடக்கம் விலை­வாசி அதி­க­ரிப்பு என மீண்டும் பழை­ய­படி வேதாளம் முருங்கை மரத்தில் ஏறி­யி­ருக்­கி­றது. மக்கள் நெருக்­க­டி­க­ளுக்கு மேல் நெருக்­க­டியை சந்­திக்க தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள்.

இந்தச் சூழலில் அர­சாங்கம் மாகாண சபை தேர்­தல்­களை நடத்­து­வ­தற்­கான சாத்­தி­யங்கள் உள்­ளதா என்­பது சந்­தேகம்.

ஏற்­கெ­னவே, இந்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் நடத்­தப்­படும் என அர­சாங்கம் வாக்­கு­றுதி கொடுத்­தி­ருந்­தது.

ஆனால், கடந்த ஆண்டு இறு­தியில் தித்வா புயலை அடுத்து ஏற்­பட்ட பேரிடர் நாட்டை புரட்டிப் போட்­டது.

அந்த பேரி­டரின் பாதிப்பில் இருந்து மீளு­வ­தற்­கான வழி வகைகள் இன்­னமும் அடை­யாளம் காணப்­ப­ட­வில்லை.

பேரிடர் ஒன்றில் இருந்து மீண்­டெ­ழு­வது என்­பது மிக­மிக கடி­ன­மா­னது.

ஒன்றில், உள்­நாட்டுப் பொரு­ளா­தார பலம் இருக்க வேண்டும். அல்­லது வெளி­நாட்டு உதவி இருக்க வேண்டும்.

இந்த இரண்டும் இல்­லாமல் பேரிடர் ஒன்றில் இருந்து மீண்­டெ­ழு­வ­தற்கு ஒரு நாடு கடி­ன­மான விலை கொடுக்க வேண்டி இருக்கும்.

நீண்­ட­கா­லத்­துக்கு போராட வேண்டி இருக்கும். இலங்கை கிட்­டத்­தட்ட அந்த நிலை­யி­லேயே இருக்­கி­றது.

உள்­நாட்டு பொரு­ளா­தாரம் வலு­வாக இல்லை. நான்கு ஆண்­டு­க­ளுக்கு முன்னர் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டியின் தாக்­கத்தில் இருந்து, மெல்ல மெல்ல விடு­படத் தொடங்­கி­யி­ருந்த சூழலில், அடுத்த இடி­யாகத் தாக்­கி­யி­ருக்­கி­றது ஈரான் போர்.

இந்தப் போர் எல்லா வழி­க­ளிலும் இலங்­கைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மத்­திய கிழக்கில் ஒரு மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான இலங்­கை­யர்கள் பணி­யாற்­று­கி­றார்கள்.

இலங்­கையின் தேயிலை உள்­ளிட்ட உற்­பத்திப் பொருட்கள் பெரு­ம­ளவில் சந்­தைப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன.

இவற்றின் ஊடாக இலங்­கைக்கு கிடைக்­கின்ற அந்­நிய செலா­வணி வருவாய் மிகப்­பெ­ரி­யது. இவற்­றுக்கு அப்பால், மத்­திய கிழக்கில் இருந்து இலங்­கைக்­கான எரி­பொருள் தேவைகள் நிறை­வேற்ற வேண்­டிய நிலையும் உள்­ளது.

எரி­பொ­ருளை பெற்றுக் கொள்­வதில் ஏற்­பட்­டுள்ள தடங்­கல்கள், நாட்டை முழு இயல்பு நிலையில் பேண முடி­யாத நிலையை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்த சிக்­கல்கள், நெருக்­க­டிகள் எப்­போது முடி­வுக்கு வரும் என யாராலும் கணிக்க முடி­யாத நிலையே காணப்­ப­டு­கி­றது. ஏனென்றால் மத்­திய கிழக்குப் போர், எவ்­வ­ளவு நாள் நீடிக்கும் என யாருக்கும் தெரி­யாது. இந்தப் போரை தொடங்­கிய ட்ரம்ப் அல்­லது நெத்­தன்­யா­ஹு­வுக்கோ கூட அது தெரி­யாது. அவர்கள் இந்த போர் சில நாட்­களில் முடிந்து விடும் என்றே எதிர்­பார்த்­தி­ருந்­தார்கள்.

ஆனால், இப்­பொ­ழுது வாரங்கள் அல்ல, மாதக்­க­ணக்கில் நீடிக்கும் என்­பது போல அவர்கள் கூறு­கி­றார்கள்.

இவ்­வாறு நீண்ட நாட்கள் போர் நீடிக்­கு­மே­யானால் இலங்­கையின் பொரு­ளா­தார நிலையில் பெரும் குழப்­பங்கள் ஏற்­படும்.

நான்கு வாரங்­க­ளுக்­குள்­ளேயே இலங்­கையின் பொரு­ளா­தாரம் பெரும் நெருக்­க­டிக்­குள்­ளா­கி­யி­ருக்­கி­றது. அவ்­வப்­போது வரி­சைகள், தோன்றி மறை­கின்­றன.

பொருட்­களின் விலைகள் சடு­தி­யாக உயர்ந்து கொண்­டி­ருக்­கின்­றன.

பொருட்கள் பதுக்­கப்­ப­டு­வதும், தட்­டுப்­பா­டுகள் ஏற்­ப­டு­வதும் வழக்­க­மா­கி­யி­ருக்­கி­றது.

இவ்­வா­றான நிலையில், இந்த போர் இன்னும் சில வாரங்­க­ளுக்கோ மாதங்­க­ளுக்கோ நீடிக்­கு­மே­யானால், அதன் பொரு­ளா­தார பாதிப்­பு­களில் இருந்து இல­கு­வாக தப்­பிக்க முடி­யாது. இந்தச் சூழலில் நாடு இன்­னொரு தேர்­தலை எதிர்­கொள்­வது என்­பது சாத்­தி­ய­மற்­றது.

கடந்த ஆண்டு இறு­தியில் மாகாண சபை தேர்­தல்­க­ளுக்கு அர­சாங்கம் தயா­ரா­வது போன்ற ஒரு சூழல் காணப்­பட்­டது.

ஆனால், சூறா­வளி ஏற்­ப­டுத்­திய பாதிப்­பு­களை தொடர்ந்த, மாகாண சபை தேர்­தல்கள் நடத்­தப்­ப­டு­வது சாத்­தியம் இல்லை என்ற நிலை ஏற்­பட்­டது.

ஏனென்றால் சூறா­வ­ளி­யினால் இலங்­கைக்கு கிட்­டத்­தட்ட 4.1 பில்­லியன் டொலர்கள் வரை நேரடி இழப்பு ஏற்­பட்­ட­தாக உலக வங்­கியின் மதிப்­பீட்டு அறிக்­கையில் கூறப்­பட்­டி­ருந்­தது.

அந்த நெருக்­க­டியில் இருந்து மீளு­வ­தற்­கான வழியே இன்­னமும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

இந்தச் சூழலில் இப்­போது மத்­திய கிழக்குப் போர் நிலைமை பொரு­ளா­தா­ரத்தை மேலும் சீர­ழிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

இந்த சீர­ழிவு நிலையில் இருந்து மீண்­டெ­ழாமல் கிட்­டத்­தட்ட 11 பில்­லியன் ரூபாவை செலவு செய்து ஒரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு அர­சாங்கம் தயா­ராக இருக்­காது.

அர­சாங்கம், தேர்­தலை நடத்­தாமல் இழுத்­த­டிப்­ப­தற்கு தனியே பொரு­ளா­தார ரீதி­யான கார­ணங்கள் மாத்­திரம் இல்லை.

ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் பெரும் வெற்­றியை பெற்­று­விட்ட தேசிய மக்கள் சக்­திக்கு, அடுத்து வந்த உள்­ளூ­ராட்சி தேர்­தலில் 1.8 மில்­லியன் வாக்­குகள் வீழ்ச்சி ஏற்­பட்­டது.

அந்த வீழ்ச்சி தொடர்­கி­றதா என்­பதை வெளிப்­ப­டுத்­து­கின்ற தேர்­த­லாக மாகாண சபை தேர்­தல்கள் இருக்கும்.

ஜனா­தி­பதி தேர்­த­லிலும் பின்னர் பாரா­ளு­மன்றத் தேர்­த­லிலும் தேசிய மக்கள் சக்தி மீது ஏற்­பட்ட நம்­பிக்­கையும் ஈர்ப்பும் உள்­ளூ­ராட்சி தேர்­தலில் விலகத் தொடங்கி இருந்­தது.

உள்­ளூ­ராட்சி தேர்தல் முடிந்து கிட்­டத்­தட்ட ஒரு வருடம் ஆகப் போகின்ற நிலையில், அர­சாங்­கத்தின் செல்­வாக்கு மேலும் வீழ்ச்சி கண்­டி­ருப்­ப­தாக ஒரு கருத்து நில­வு­கி­றது.

அதனை நிரூ­பிக்­கின்ற வகை­யி­லான, அதி­கா­ர­பூர்வ புள்­ளி­வி­வரம் ஒன்று வெளி­யா­வதை அர­சாங்கம் விரும்­பாது.

ஏனென்றால் இன்னும் மூன்­றரை ஆண்­டு­க­ளுக்கு ஆட்­சியில் இருக்க வேண்­டிய அர­சாங்கம், தான் பல­வீ­னப்­பட்டு கொண்­டி­ருக்­கின்றேன் என்­பதை வெளிப்­ப­டுத்­து­வ­தற்கு தயா­ராக இல்லை.

அது அடுத்த மூன்­றரை ஆண்­டு­க­ளிலும் எதிர்க்­கட்­சி­களின் தொடர் குடைச்­சல்­க­ளுக்கும் விமர்­ச­னங்­க­ளுக்கும் இரை­யா­கின்ற நிலையை ஏற்­ப­டுத்தும்.

அதனால் ஒன்றில் வெல்லக் கூடிய ஒரு தேர்­தலை நடத்த வேண்டும் அல்­லது தேர்­தலை நடத்­தாமல் இழுத்­த­டிக்க வேண்டும்.

இதனால் ஏதோ ஒரு கார­ணத்தைக் காட்டி அர­சாங்கம் மாகாண சபை தேர்­தலை இழுத்­த­டித்து வரு­கி­றது.

அதே­வேளை, இந்­திய தரப்பு இந்த விட­யத்தில் அழுத்தம் கொடுத்­தி­ருந்­தாலும் கொடுக்­கா­விட்­டாலும் – ஒரு கட்­டத்தில் ஜே.வி.பி. இந்த சவாலை ஏற்­றுக்­கொள்ள தயா­ரா­கி­யது.

ஏனென்றால் இன்னும் மூன்­றரை ஆண்­டுகள் காத்­தி­ருந்து ஜனா­தி­பதி தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்கு முன்னர், மாகாண சபை தேர்­தல்­களை நடத்­தினால் அதில் ஏற்­படக் கூடிய, பல­வீ­னங்கள் அடுத்த தேர்­தல்­க­ளிலும் எதி­ரொ­லிக்கும் ஆபத்தும் உள்­ளது.

அதற்­கி­டையில், கட்­சியைப் பலப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கும், அதன் இப்­போ­தைய நிலையை அறிந்து கொள்­வ­தற்கும், மாகாண சபைத் தேர்­தல்­களை ஒரு சவா­லாக எடுத்துக் கொண்டு நடத்­து­வது பற்­றியும் ஜே.வி.பி. தலைமை ஆராய்ந்­தி­ருந்­தது.

ஆனால், நாட்டின் பொருளாதாரச் சூழல் அதற்கான வாய்ப்புகளை இப்போது கொடுக்கும் போலத் தெரியவில்லை.

இது ஒரு பக்கத்தில் ஆளும் கட்சிக்கு சாதகமாக இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் தேர்தல் இழுத்தடிக்கப்படுவது அதற்கு பாதகமானதாகவே அமையும்.

தேர்தல் இன்னும் ஓர் ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்டு விட்டால், அடுத்த ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் ஜே.வி.பி. அரசாங்கம் பலவீனப்பட்டு விட்டது என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்தும்.

விரைவில் தோல்வி காணப் போகும் அரசாங்கம் என்ற அடையாளத்தையும் உருவாக்கும்.

அது அந்த தேர்தல்களில் வெல்ல முடியாத சூழலை ஏற்படுத்தலாம்.

அதனால் தான் அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதற்கு முற்பட்டது.

ஆனால், இயற்கை பேரிடரும், போரும் உலக மாற்றங்களும் அரசாங்கத்தின் கனவுகளைத் தொடர்ந்தும் கலைத்துக் கொண்டேயிருப்பது தான் அதன் துரதிஷ்டம்.

-சத்திரியன்-

Share.
Leave A Reply

Exit mobile version