தெஹ்ரான்: அமெரிக்கா – ஈரான் மத்தியில் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நாளை பாகிஸ்தான் நடக்க இருக்கும் நிலையில் இரு நாட்டு பிரதிநிதிகளும் பாகிஸ்தானுக்கு படையெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் அமெரிக்காவின் முப்படையும் ஈரான் பகுதியில் தயார் நிலையில் இருக்க உத்தரவிட்டு உள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஈரான் ராணுவம் ஹார்முஸ் பாதையை கடக்க வந்த ஒரு சரக்கு கப்பலை எவ்விதமான காரணமும் இல்லாமல் திருப்பி அனுப்பியது.
இது பலருக்கும் மீண்டும் போர் துவங்குகிறதா என்ற அச்சத்தை உருவாக்கிய நிலையில், இன்று ஈரான் தரப்பில் இருந்து முக்கியமான அறிவிப்பு அடுத்தடுத்து வெளியாகியுள்ளது.
இதன் மூலம் நாளைய பேச்சுவார்த்தை காரசாரமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கண்ணிவெடி வச்சிருக்கோம்
ஈரான் அரசு வியாழக்கிழமை ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களுக்கு புதிய மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் தற்காலிகமாக கப்பல் போக்குவரத்தை அனுமதித்திருந்தாலும், முக்கிய கப்பல் போக்குவரத்து பாதையில் சீ மைன்கள் அதாவது கடல் வைக்கப்படும் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த அபாயத்தின் காரணமாக பாதுகாப்பு கருதி மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு ஈரான் அறிவித்துள்ளது.
முக்கிய போக்குவரத்து பாதை தவிர்க்க உத்தரவு
ஈரான் புரட்சிக் காவல் படை (IRGC) வெளியிட்ட அறிக்கையில், “ஹார்முஸ் நீரிணை வழியாக செல்லும் அனைத்து கப்பல்களும் கடல் கண்ணிவெடி மோதும் அபாயத்தைத் தவிர்க்க முக்கிய போக்குவரத்து பாதையை தவிர்த்து மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடல் போக்குவரத்து அமைப்பும் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பாரசீக வளைகுடாவில் போர் சூழல் மற்றும் முக்கிய போக்குவரத்து பாதையில் கண்ணிவெடி வைக்கப்பட்டு உள்ளதன் காரணமாக, கப்பல்கள் IRGC கடற்படையுடன் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்ட மாற்று வழிகளைப் பயன்படுத்த வேண்டும்” என்று அறிவித்துள்ளது.
புதிய மாற்றுப் பாதைகள் என்ன?
ஈரான் அறிவித்துள்ள புதிய வழிகளின் விபரம், – உள்நோக்கி (Inbound): ஓமன் வளைகுடாவில் இருந்து வடக்கு நோக்கி லாரக் தீவு வழியாக பாரசீக வளைகுடாவுக்குச் செல்ல வேண்டும். – வெளிநோக்கி (Outbound): பாரசீக வளைகுடாவில் இருந்து லாரக் தீவுக்கு தெற்கே சென்று ஓமன் வளைகுடாவை அடைய வேண்டும்.
இந்தப் பாதைகளைப் பயன்படுத்தும் முன் கப்பல்கள் IRGC கடற்படையுடன் ஒருங்கிணைந்து அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபரத்தை மும்பையிலுள்ள ஈரானிய இஸ்லாமியக் குடியரசின் துணைத் தூதரகம் ட்வீட் வாயிலாக தெரிவித்துள்ளது.
மேலும் IRGC படையிடம் அனுமதி பெற வேண்டும் என்றால் ஈரானுக்கு ஒவ்வொரு கப்பலும் டோல் கட்டணம் செலுத்த வேண்டும். இந்த டோல் கட்டணத்தை வசூலிப்பது குறித்து ஏற்கனவே ஈரான் நாட்டின் 10 அம்ச அமைதி திட்டத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.
புதிய கட்டுப்பாடுகள்
ஈரான், போர் நிறுத்த ஒப்பந்தம் கீழ் ஹார்முஸ் நீரிணையில் தினமும் 12 கப்பல்கள் மட்டுமே கடக்க அனுமதிக்கும் என்றும், அதற்கு கட்டணம் (டோல்) விதிக்கும் என்றும் ஈரான் அரசு சார்பில் பாகிஸ்தானிடம் தெரிவித்துள்ளது என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை அறிவித்த போர் நிறுத்தம் தொடர்ந்து, கடந்த 24 மணிநேரத்தில் ஹார்முஸ் வழியாக வெறும் 4 கப்பல்கள் மட்டுமே கடந்துள்ளன.
இந்த இடைவெளியை பயன்படுத்தி தான ஈரான் ஹார்முஸ் வழித்தடத்தில் கண்ணிவெடி வைத்துள்ளது.
ஹார்முஸ் நீரிணை
ஹார்முஸ் நீரிணை உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றாகும். இது பாரசீக வளைகுடாவை ஓமன் வளைகுடாவுடன் இணைக்கிறது. இந்த நீரிணை வெறும் 33 கிலோமீட்டர் மட்டுமே அகலம் கொண்டுள்ளது.
உலகின் மொத்த எண்ணெய் வர்த்தகத்தில் சுமார் 20 சதவீதம் இந்த நீரிணை வழியாகத்தான் செல்கிறது. ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் இந்த நீரிணையின் சில பகுதிகளை கட்டுப்படுத்தினாலும், இது பொதுவாக அனைத்து நாடுகளின் கப்பல்களுக்கும் திறந்த பாதையாகக் கருதப்படுகிறது.
போர் நிறுத்தம் இருந்தும் ஏன் இந்த அறிவிப்பு?
ஈரான்-அமெரிக்கா இடையேயான இரண்டு வார போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகும், நாளை பேச்சுவார்த்தை துவங்க உள்ளது. இந்த பேச்சு வார்த்தை எதிராக திருப்பினால் ஈரானுக்கான பலத்தை காட்ட இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிகிறது.