எனக்கு பொறுப்பும் பதவியும் கிடைத்ததால் அப்போது ஆசீர்வாதம் வாங்குவதற்கு, (சசிகலா) காலில் விழுந்தேன் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசி உள்ளார்.
சென்னை ராயபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், ராயபுரம் அதிமுக வேட்பாளர் ஜெயகுமாரை ஆதரித்து, எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலையில் வாக்கு சேகரித்தார்.
கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்தவர்கள்…
எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, “எனக்கு பொறுப்பும் பதவியும் கிடைத்ததால் அப்போது ஆசீர்வாதம் வாங்குவதற்கு, (சசிகலா) காலில் விழுந்தேன்” என தெரிவித்துள்ளார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார கூட்டங்களில், 2017ஆம் ஆண்டில் முதலமைச்சர் பதவி கிடைத்தபோது,
அப்போதைய அதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவின் காலில் எடப்பாடி பழனிசாமி விழும் புகைப்படத்தை மக்கள் மன்றத்தில் காண்பித்து வாக்கு சேகரித்து வந்தார். இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் உதயநிதி ஸ்டாலின் இடையே தொடர்ந்து வார்த்தை போர் வெடித்தது.
திமுகவும் எடப்பாடி பழனிசாமியின் இந்த செயலை கடந்த காலங்களிலும், தற்போது தேர்தல் காலத்திலும் பலமுறை விமர்சித்து பரப்புரை செய்து வருகிறது.
அந்த வகையில், எடப்பாடி பழனிசாமி இன்று திமுகவின் பரப்புரைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்து உள்ளார்.
எடப்பாடி பழனிசாமி இன்றைய பரப்புரையில் திமுகவை கடுமையாக விமர்சித்து பேசினார். கருணாநிதி குடும்பத்தில் பிறக்கவில்லை என்றால் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கவுன்சிலர் ஆகக் கூட தகுதியில்லாதவர்கள் என விமர்சித்தார்.
நான் ஆளுநராக போகிறேனா…?
தொடர்ந்து பேசிய இபிஎஸ், “பிரச்சாரத்திற்கு கருணாநிதி குடும்பமே கிளம்பிவிட்டது. ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என குடும்பமே தேர்தலில் இறங்கிவிட்டது.
அந்த கட்சியில் குடும்பத்தைத் தவிர்த்து வேறு யாராவது நுழைய முடியுமா? தேர்தல் பிரசாரத்தில் கூட குடும்பம் தான் முன்னிலை வகிக்கிறது. இப்படிப்பட்ட வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல் இது.
கனிமொழி நிறைய பேசியிருக்கிறார். ஓரம்கட்டி வைத்திருக்கும்போதே இந்த குதி குதிக்கிறாங்களே… உங்களை நன்றாக வேலை வாங்குகிறார்கள். ஏற்கெனவே அழகிரிக்கு ஆப்பு வைத்துவிட்டார்.
எப்படியோ தப்பித் தவறி கனிமொழி மட்டும் ஒட்டிக்கொண்டிருக்கிறார், அவரை வைத்து என்னை விமர்சிக்கிறார்கள். உங்கள் அப்பாவையே பார்த்துவிட்டோம்,
உங்களை சமாளிப்பது ஒன்றும் சிரமம் அல்ல. அந்தம்மா கண்டுபிடுச்சுட்டாங்க எடப்பாடி பழனிசாமி தேர்தல் முடிந்ததும் ஆளுநராகப் போவாராம். இதையெல்லாம் நீங்க சொல்லிக்கொடுத்து பேசுறீங்க, அது யார் என எனக்கு தெரியும்.
காலில் விழுந்ததா முக்கியம்?
அதிமுக தொண்டர் கூட பதவிக்கு ஆசைப்பட்டது கிடையாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு தொண்டர்களால் கட்டிக்காப்பாற்றப்படும் கட்சி அதிமுக, எவராலும் எங்களை விலைக்கு வாங்க முடியாது.
பி டீமெல்லாம் தானாக துடைத்தெறியப்பட்டது. எவ்வளவோ முயன்று வழக்கு போட்டு அவப்பெயர் உண்டாக்க பார்த்தீர்கள். அவையெல்லாம் தூள் தூளாக்கப்பட்டது.
எப்போது பார்த்தாலும் காலில் விழுவதைப் பற்றியே பேசுகிறார்கள், நாட்டில் அதுவா முக்கியம்? நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள்,
அதை விட்டுவிட்டு இபிஎஸ் காலை பிடித்தார் என்கிறார். நான் பதவி கிடைத்ததால் ஆசிர்வாதம் வாங்கினேன், பண்புள்ள குடும்பத்தில் பிறந்தால் தானே அது தெரியும். அதிமுக ஆட்சியில் தவறு என்றால் சொல்லுங்கள், பதில் சொல்லத் தயார்.
7 முறை சிறைக்குச் சென்றேன்
நாங்கள் அவரது காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவதில் என்ன தவறு..? உங்க தாத்தா முதல்வர், உங்கள் அப்பா முதல்வர், உங்களுக்கு நல்லா வசதி இருக்கிறது.
அதனால் எதைப் பற்றியும் கவலையில்லை. நான் கீழே இருந்து தலைவர்கள் பேச்சைக் கேட்டு இங்கு வந்தேன்,
அந்த வலி என்ன என்பது எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியாது. செல்வச் செழிப்பில் வாழ்ந்த ஆணவத்தில் பேசுகிறார்கள்.
இந்த ஆணவம் இருக்கக்கூடாது. பதவி வருகின்ற போது பணிவு வர வேண்டும். அது எங்களிடம் உள்ளது. அதனால் தான் மக்கள் எங்களிடம் இருக்கிறார்கள். உங்களிடம் அது இல்லையென்பதால் தான் அப்பா, மகன், அத்தை எல்லோரும் ஊர் ஊராகப் போய் ஒப்பாரி வைக்கிறீர்கள்.
தன்னை வளர்த்த கட்சிக்கு துரோகம் செய்தேனாம், கனிமொழி அவர்களே… நான் 1974ல் கட்சியில் சேர்ந்தேன், கல்லூரியில் படித்தேன்,
20 வயதில் இருந்து பிறழாமல் இந்த கட்சியில் சேர்ந்து உழைத்திருக்கிறேன். கிட்டத்தட்ட 51 ஆண்டுகாலம் அதிமுகவுக்காக பாடுபட்டிருக்கிறேன். கட்சிக்கு விசுவாசமாக இருக்கிறேன்,
தலைமை அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டு 7 முறை சிறைக்குச் சென்றேன். நீங்கள் எதற்காக சிறைக்குப் போனீர்கள்..? ஊழல் செய்து சிறைக்குச் சென்றீர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் அதுதான் வித்தியாசம், நாவடக்கம் தேவை.
அமித்ஷா என்ன பாகிஸ்தான்காரரா?
இன்று அதிமுக அமித்ஷா திமுகவாகி விட்டதாம். ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எல்லோரும் இதையே தான் பேசுகிறார்கள், அமித்ஷா என்ன பாகிஸ்தான்காரரா? அவரை பார்ப்பது தவறா? பார்த்தால் பதறுகிறார்கள்.
ஊழலை போட்டுக்கொடுத்து தனக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் இப்படிப்பட்ட வார்த்தைகள் வருகிறது, கனிமொழி அவர்களே, உங்கள் வழக்கு இன்னமும் நிலுவையில் உள்ளது என்பதை ஞாபகம் வைத்து பேசுங்கள்.
இன்னமும் முடியவில்லை. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, அவர்களை நம்பிப் பேசி மீண்டும் திகாருக்குப் போய்விடாதீர்கள்.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அடிமையா..? விரும்பினால் கூட்டணி வைப்போம். அதிமுகவுடன் இருந்தவர்கள் திமுகவுடன் இருக்கிறார்கள். மாறி மாறி கூட்டணி வைப்பது நடக்கிறது, நாம் கூட்டணி வைத்தால் மட்டும் மதவாதக் கட்சியுடன் கூட்டணி. வேறு என்ன பேச முடியும்?” என்றார்.
தொடர்ந்து ஒரு புகைப்படத்தை மக்களுக்கு காட்டினார், “இந்த படத்தில் கருணாநிதி வாஜ்பாயுடன் இருக்கிறார்,
இப்படியெல்லாம் காக்கா புடிச்சு ஆட்சி செய்த நீங்கள் பேசலாமா? 1999, 2001 தேர்தலில் திமுக கூட்டணி வைத்தார்களா, இல்லையா? அப்போதெல்லாம் மதவாதக் கட்சி என்பது தெரியாது,
உங்க அரசியல் நாடகம் எடுபடாது, மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள். பாஜக கொள்கை அப்போதும், இப்போதும் அப்படியே இருக்கிறது. நாம் கூட்டணி வைத்தால் மட்டும் திட்டமிட்டு மதவாதக் கட்சி என்று சிறுபான்மை மக்களை ஏமாற்றி ஸ்டாலின் நாடகம் போடுகிறார்” என்றார்.

