மார்ச் 1 அன்று, குவைத்தின் ஷுவைபா  ( Shuaiba,) துறைமுகத்தில் ஈரான் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஆறு அமெரிக்க ராணுவ ரிசர்வ் வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவம், இந்தப் போரில் அமெரிக்காவின் முதல் போர்க்கால உயிரிழப்பாக அமைந்தது. அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத், ஈரானின் ‘ஸ்க்விர்ட்டர்’ ( “squirter” drone) ஆளில்லா விமானம் ஒன்று வான் பாதுகாப்பு அரண்களைத் தாண்டி உள்ளே நுழைந்ததாகக் கூறியிருந்தார்.

அந்த ஆளில்லா விமானம் தாக்கிய தந்திரோபாய செயல்பாட்டு மையம் ‘பலப்படுத்தப்பட்டிருந்தது’ என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், ராணுவத்தின் 103வது நிலைத்தன்மை கட்டளையகத்தின் வீரர்கள், குறிப்பிட்ட தகவல்களின் படி, இந்தத் தாக்குதல் குறைந்த பாதுகாப்பு கொண்ட ஒரு தளத்தின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறி, ஹெக்ஸெத்தின் கருத்துக்களé பொய் என கூறுகின்றனர்

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் Pete Hegseth முன்பு வெளியிட்ட அறிக்கையில், “ஒரு ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி வந்து தாக்கியது” என்றும், தாக்கப்பட்ட தளமானது “பாதுகாப்பாக கட்டப்பட்ட மையம்” என்றும் கூறினார். ஆனால், சம்பவத்தில் உயிர் தப்பிய வீரர்கள் இந்தக் கருத்துகளை மறுத்துள்ளனர்.

வீரர்கள் கூறியதாவது, தாக்கப்பட்ட இடம் மிகவும் குறைந்த பாதுகாப்புடன் இருந்தது. “ஒரு ட்ரோன் மட்டும் தப்பித்து வந்தது” என்ற விளக்கம் உண்மையல்ல என்றும், அவர்கள் இருந்த அலகு தங்களை பாதுகாக்க தேவையான ஏற்பாடுகள் இல்லாமல் இருந்ததாகவும் தெரிவித்தனர்.

மேலும், அந்த லாஜிஸ்டிக்ஸ் அணி ஆபத்தான பகுதிக்கு அருகில் மாற்றப்பட்டதாகவும், அது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைகளின் தாக்கத்திற்கு எளிதான இடமாக இருந்ததாகவும் கூறினர்.

தாக்குதல் நடந்த நேரத்தில், காலை நேரத்தில் ஏவுகணை எச்சரிக்கை வழங்கப்பட்டதால் வீரர்கள் மறைவில் இருந்தனர்.

பின்னர் “அபாயம் இல்லை” என்ற அறிவிப்பு வழங்கப்பட்டது. ஆனால், அந்த அறிவிப்புக்கு 30 நிமிடங்கள் கழித்து ட்ரோன் தாக்குதல் நடந்தது. இந்த திடீர் தாக்குதல் வீரர்களுக்கு பெரிய அதிர்ச்சியையும் சேதத்தையும் ஏற்படுத்தியது.

ஒரு வீரர் தனது அனுபவத்தை விவரிக்கையில், “அனைத்தும் குலுங்கியது; காதுகளில் ஓசை கேட்டது; தூசி மற்றும் புகை எங்கும் பரவியது” என்று கூறினார்.

தாக்குதலின் பின்னர், தலைக்காயங்கள், அதிக ரத்தக்கசிவு மற்றும் உடலில் சிதறிய உலோக துண்டுகள் போன்ற கடுமையான காயங்கள் ஏற்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், தாக்குதலுக்குப் பிறகு மீட்பு நடவடிக்கைகளும் போதுமானதாக இல்லை என்று வீரர்கள் குற்றம் சாட்டினர். காயமடைந்தவர்கள் தாங்களே முதலுதவி செய்ததுடன், பொதுமக்களின் வாகனங்களை பயன்படுத்தி மருத்துவமனைக்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உதவி செயலாளர் Sean Parnell “எங்கள் வீரர்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், ஒரு அதிகாரி கூறுகையில், அந்த இடத்தில் பாதுகாப்பு அமைப்புகள் இருந்ததா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும், ட்ரோன் வந்தபோது எச்சரிக்கை அலாரம் ஒலிக்கவில்லை என்றும் கூறினார்.

மொத்தத்தில், இந்த சம்பவம் ராணுவத்தின் பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் தயாராமை பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.

 

Share.
Leave A Reply