வெலிஓயாவில் தகாத உறவு தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், கணவன் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளதோடு, இக்கொலை தொடர்பில் கணவனும் குறித்த பெண்ணுடன் முறைதவறிய உறவு கொண்டதாகக் கருதப்படும் இளைஞரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை (17) குறித்த பெண் உறங்கிக்கொண்டிருந்த படுக்கையிலேயே இந்தக் கொலை நடந்ததாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வெலிஓயா UDK பகுதியில் வசிக்கும் 27 வயதுடைய, ஒரு குழந்தையின் தாயே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பான முதற்கட்ட விசாரணையின் ஊடாக தெரியவருவதாவது,
அந்தப் பெண், வெளிநாடு சென்றிருந்த நிலையில், 3 மாதங்களுக்கு முன்னர் கண்டி, கலஹா – புபுரெஸ்ஸ பகுதியில் உள்ள தன் கணவனின் வீட்டுக்குத் திரும்பியிருந்தார்.
அதனையடுத்து, இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் தன் குழந்தையுடன் வெலிஓயா தோட்டத்தில் உள்ள தன் தாயின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அதன் பின்னர், மனைவி நீண்ட நாட்களாக கணவனின் வீட்டுக்குத் திரும்பாததால், கணவன் மனைவியை திரும்ப அழைத்துவர நேற்று (16) சென்றுள்ளார்.
அங்கு, தன் மனைவி அப்பகுதியில் உள்ள ஓர் இளைஞனுடன் தகாத உறவில் இருப்பதாக அப்பகுதி மக்கள் கணவனிடம் கூறியுள்ளனர்.
இதனால் கோபமடைந்த கணவன், தன் மனைவியை அந்த முறைதவறிய உறவை நிறுத்துமாறு திட்டியதோடு, நேற்று பகல் முதல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இச்சந்தர்ப்பத்தில் இன்று (17) அதிகாலை மனைவி, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுக்கையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவருக்கும் இடையிலான முரண்பாடே கொலைக்கு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
கொலையுடன் தொடர்புடையதாக கருதப்படும் சந்தேக நபரான 30 வயதுடைய கணவனும் கொலைக்கு காரணமானவர் என்றும் பெண்ணுடன் தகாத உறவு கொண்டவர் என்றும் கூறப்படும் இளைஞனையும் வட்டவளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் கூறுகின்றனர்.
இந்தக் கொலை தொடர்பாக வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

