2000 ம் ஆண்டு யூன் மாதம் சரத் பொன்சேகா வட பகுதி ராணுவத் தலைமையகத்திற்குத் திரும்பியதும் ஆனையிறவிலிருந்து பின்வாங்கிய படைகளை மீண்டும் பலப்படுத்தி யாழ்ப்பாணத்தின் தென் பகுதி, சாவகச்சேரி ஆகிய பகுதிகளையும் பலப்படுத்தி முகமாலையிலும் பலமான தடுப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தார்.
சரத் பொன்சேகா தலைமையில் ராணுவம் மீண்டும் போரிடும் ஆற்றலைப் பெற்றமைக்கான பின்னணியை விளக்கும்போது ஆனையிறவு முகாம் தாக்குதல்கள் சுமார் இரண்டு வார காலம் தொடர்ந்த போது கிழக்கு நோக்கிய அரண்கள் முற்றாக அழிந்தன.
பல மூத்த அதிகாரிகள் போரிடுவதற்கான ஆற்றலை இழந்திருந்தனர். பிராந்திய மற்றும் பிரிகேட் அதிகாரிகள் பின்வாங்கிச் செல்ல வேண்டும் என்றே வற்புறுத்தியிருந்தனர். விசேட அதிரடிப்படையினர் கூட அவ்வாறான மன நிலையிலிருந்தனர்.
போர்க் களத்தில் எதிரியின் அழுத்தங்கள் ஒரு புறமும், மறு புறத்தில் ராணுவத்தினர் மத்தியில் போரிடும் உற்சாகம் குறைந்த நிலையிலும் ஒரு பின்புலமே காணப்பட்டது.
அவ்வாறு ராணுவத்திற்குள் தலைமைத்துவ வெற்றிடம் காணப்பட்ட நிலையில் அரசு மிகவும் குழப்ப நிலையில் இருந்ததால் இந்தியாவிடம் உதவி கேட்டு விரைந்தார்கள்.
இந்தியா ராணுவ உதவிகளை வழங்க மறுத்த போதிலும், நிலமை மோசமானால் அவர்களை கடற்படை மூலம் வெளியேற்ற உதவுவதாக தெரிவித்தனர்.

எதிர்பாராதது மட்டுமல்ல, அரசுக்கு ஒரு வகையில் நிம்மதியைக் கொடுத்தது.
போர் மூன்று முனைகளில் ஆரம்பமாகியது. மேலதிக ஆயுதங்களை வழங்குமாறு அரசுக்கு ராணுவம் கோரிக்கை விடுத்தது.
பாகிஸ்தான் இலங்கையின் கோரிக்கைக்கு உடனடியாக உடன்பட்டு பல்குழல் ஏவுகணைகள்,
122மிமீ றொக்கற் ஏவுகணைகள் போன்றவற்றை வழங்கியது. இவற்றின் வருகை ராணுவத்தின் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
இவ்வளவு நம்பிக்கை வளர்ந்த போதிலும், யாழ்ப்பாணத்தின் தென் பகுதி, சாவகச்சேரி
ஆகிய பகுதிகளைக் கைப்பற்றுவதே ராணுவத்தின் பிரதான இலக்காக இருந்தது.
இதற்கான தந்திரோபாயங்கள், திட்டங்கள் யாவும் இழந்ததை மீட்டெடுக்க தயாராகின.
2000ம் ஆண்டு யூலை மாதமளவில் வட பகுதி ஓரளவு ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
இவ் வேளையில் சரத் பொன்சேகா பாதுகாப்பு கல்வியைப் பெறும் நோக்கில் பிரித்தானியா செல்லத் தயாரானார்.
அவரின் பதவியை நிரப்பிய புதிய அதிகாரி ஏற்கெனவே தீட்டிய திட்டங்களின் பிரகாரம்
செயற்பட்டு ஈற்றில் இழந்த யாழ். நகரத்தின் தென் பகுதி, சாவகச்சேரி ஆகியவற்றை மீண்டும்
கைப்பற்றினர்.
யாழ்ப்பாணக் குடாநாடும், முகமாலையின் வடக்குப் பகுதியும் ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்தன.
போர்ப் பகுதிகளின் முன்னிலை அரண்கள் பலமாக இருந்த போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பரந்த நிலை தந்திரோபாய அடிப்படையில் மிகவும் மோசமாகவே இருந்தது.
அடுத்த கட்ட நகர்வு எவ்வாறு அமைய வேண்டும்? என்ற திட்டம் அரசுக்கோ, ராணுவத்திற்கோ இருக்கவில்லை.
பாரிய தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பயங்கரவாத தாக்குதல்கள் அதாவது தற்கொலைத் தாக்குதல்கள், எங்கேயாவது படுகொலைகள் நடைபெற்றனவே தவிர பாரிய தாக்குதல்கள் எதுவும் இடம்பெறவில்லை.
உளவுத் தகவல்களும் உரிய பலனைத் தரவில்லை. இதனால் மறுபடியும் சோர்வு
காணப்பட்டது.
படைத் தலைவர்களின் ஆளுமை மிகவும் இறுகிய நிலைக்குச் சென்றது. மூத்த அதிகாரிகள் மத்தியில் ராணுவத் தீர்வை விட அரசியல் தீர்வை நோக்கிச் செல்லுங்கள் என்ற அழுத்தம் படிப்படியாக எழுந்தது.
இம் மாதிரியான சிந்தனைகள் நம்பிக்கையை மிக மோசமான விதத்தில் பாதிக்கத்
தொடங்கியது. இதனால் அரசியல்வாதிகளும், பொது மக்களும் ராணுவ வெற்றி சாத்தியமில்லை என்ற முடிவை நோக்கிச் சென்றனர்.
இவ்வாறான எண்ணம் அரசாங்கத்தின் மத்தியில் ஆழமாகச் சென்ற போதிலும் சிங்கள மக்களில் சுமார் 70 சதவீதமானோர் சுயநிர்ணய உரிமையை நோக்கிச் செல்லும் பிரிவினைவாதிகளின் கோரிக்கைக்குத் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்து வந்தனர்.
அரசாங்கம் வெளி நாடுகளினதும், புலம்பெயர் ஆதரவாளர்களினதும் அழுத்தங்களால் திசை தெரியாமல் தத்தளித்தது.
இந்த இறுக்கமான நிலமைகளை வெளிச் சக்திகள் நன்கு பயன்படுத்தத் தொடங்கின. இவை ஒரு புறத்தில் உள்நாட்டு அரசியல் நலன்களுக்காகவும், மறுபுறத்தில் புலம்பெயர் தேசங்களில் அவர்களின் ஒட்டு மொத்த வாக்குகளுக்காகவும் செயற்பட்டனர்.
குறிப்பாக, விடுதலைப்பலிகளின் கோரிக்கைகளும், சர்வதேச அழுத்தங்களும் ஒரே புள்ளியை அதாவது வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கான சுயநிர்ணய உரிமையை நோக்கியதாக அமைந்திருந்தன.
தென் பகுதியிலுள்ள பெரும்பாலோரால் இக் கோரிக்கையை ஏற்க முடியவில்லை.
இம் மாதிரியான வெற்றிடத்தில் விடுதலைப்புலிகள் தனிநாட்டுக் கோரிக்கையை மட்டுமல்ல, தமது ராணுவ வலிமையையும் அதிகரித்து சுமார் 12,000 பேரைக் கொண்ட சக்தியாகவும் இருந்தனர்.
பதிலாக இலங்கை ராணுவம் 115,000 பேரைக் கொண்டதாகவும், விமானப்படை, கடற்படை என்பவற்றில் சுமார் தலா 30,000 அங்கத்தவர்களையும் கொண்டிருந்தது.
ஈழப் போர் 3 முடிவடையும் தறுவாயில் சரத் பொன்சேகா 2001ம் ஆண்டு இலங்கை திரும்பினார். அதன் பின்னர் என்ன நடந்தது?
தொடரும்……
(இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்
ஆனையிறவு முகாமை கைவிட்டு பின்வாங்கிய12,000 இராணுவத்தினர்!! – இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்: சரத் பொன்சேகா-(பகுதி -8)