ஈரான் அமெரிக்காவுக்கிடையிலான இஸ்லாமாபாத் பேச்சு வார்த்தைகள் தோல்வியடைந்தாலும் யுத்த நிறுத்தம் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப்படுகின்றது.
அதே வேளை ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் கப்பல்களை முற்றுகையிடுவோம் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். போர் நிறுத்த காலத்தில் ஈரானுக்கு எந்த வழியிலாவது உதவும் அல்லது ஆயுதங்களை விநியோகிக்கும் நாடுகளுக்கு 50 வீத வர்த்தக வரி அறவிடப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க இலக்குகளை தாக்குவதற்கு ஈரானுக்கு சீனா தனது செயற்கை கோளை வழங்கி உதவியது என்ற செய்தி பரவியது. இதற்கு ட்ரம்ப் சீனாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அடுத்த மே மாதம் ட்ரம்ப் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவிருப்பதால் சீனாவும் இதை பெரிதுபடுத்தாமல் செயற்கை கோள் விவகாரம் பொய்யானது என்றும் தாம் எப்போதும் ஈரானுக்கு ஆயுதங்களையோ வேறு எந்த உதவிகளையோ செய்யப்போவதில்லையென அமெரிக்காவுக்கு பதில் வழங்கியுள்ளது.
இதை அமெரிக்காவும் வரவேற்றுள்ளது. இந்நிலையில் ஈரான் –அமெரிக்க மோதலில் யார் வெற்றி பெற்றுள்ளனர் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
ஈரான் சார்பு நாடுகள் அமெரிக்கா தோல்வியை சந்தித்துள்ளது என பரப்புரை செய்தாலும் இரும்பு மனிதராக விளங்கிய கொமய்னி கொல்லப்பட்டமை அமெரிக்காவுக்கு கிடைத்த வெற்றி என அமெரிக்க சார்பு ஊடகங்கள் பரப்புரை செய்து வருகின்றன.
சுமார் ஒரு மாத காலம் இடம்பெற்ற இருதரப்பு யுத்தத்தில் யார் வெற்றி பெற்றுள்ளார்கள் என்ற கேள்வியே இப்போது சர்வதேச ஊடகங்களை ஆக்கிரமித்துள்ளது.
நாடுகளுக்கிடையிலான யுத்தத்தின் போது வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப்படுகின்றது ? வெற்றி பெற்ற நாடு தோல்வியுற்ற நாட்டில் தனது கொடியை ஏற்றும். தோல்வியைத் தழுவிய நாட்டின் தலைவர் சிறை பிடிக்கப்படுவார் அல்லது கொல்லப்படுவார்.
சில நேரங்களில் ஈராக்கில் இடம்பெற்றது போன்று சிறை பிடிக்கப்பட்டு தண்டனை என்ற பெயரில் கொல்லப்படுவார். அதன் பிறகு வெற்றி பெற்ற நாட்டின் கண்காணிப்பிலும் கட்டுப்பாட்டிலும் அந்த நாடு இயங்கும்.
ஆனால் ஈரானுக்கு எதிரான போரை ஆரம்பித்த உலகில் வலுமிக்க நாடுகளான அமெரிக்கா மற்றம் இஸ்ரேல் விடயத்தில் எல்லாம் தலைகீழாகவே நடந்து முடிந்து விட்டன.
உலக வல்லரசு என்று இறுமாப்பில் வலம் வந்த அமெரிக்காவுக்கு பல நாடுகள் ‘நாம் உங்களுக்கு பயமில்லை’ என்ற செய்தியை அழுத்தமாகக் கூறியுள்ளன.
ஆசியாவின் வல்லரசுகளாக திகழும் ரஷ்யாவும் , சீனாவும் இதில் இறுக கரம் கோர்த்துள்ள அதே வேளை இந்த போரில் அமெரிக்காவுக்கு ஆதரவாக செயற்படாத நேட்டோ நாடுகளின் முடிவு அமெரிக்கா எதிர்பாராத ஒரு விடயம். மட்டுமன்றி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா –இஸ்ரேல் ஆகிய பலமிக்க இருநாடுகள் போர் தொடுத்திருந்தன. எனினும் இருநாடுகளினாலும் ஒரு முடிவை காணமுடியவில்லை.
இந்நிலையில் ஈரானை ஒரே இரவில் அழிப்பேன் என ட்ரம்ப் சவால் விடுத்து அதற்கான காலக்கெடுவையும் வழங்கியிருந்தார்.
ஆனால் இறுதித் தருணத்தில் பாகிஸ்தான் தலையீட்டால் அவர் போர் நிறுத்தத்துக்கு இணங்கினார். இது அமெரிக்காவில் தோல்வி மனப்பான்மையின் வெளிப்பாடு என்றே நோக்கப்படுகின்றது.
ஈரானுக்கு அமெரிக்கா வழங்கிய காலக்கெடு முடிவடைவதற்கு பத்து நிமிடங்கள் இருக்கையில், போர் நிறுத்தம் உடனடியாக அமலுக்கு வருகிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் அறிவித்தார்.
அதன் பிறகு டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளத்தில், அமெரிக்காவும் ஈரானும் உறுதியான அமைதி ஒப்பந்தத்தை எட்டுவதில் மிக நெருக்கமான நிலையை அடைந்துள்ளதாகவும், பேச்சுவார்த்தைகளைத் தொடர வழிவகுக்கும் வகையில் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்குத் தான் சம்மதித்துள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.

எமது பாரம்பரியத்தை நாம் காப்போம் என ஈரானின் முக்கியமான நகரங்களிலுள்ள பாலங்களில், நாட்டு மக்கள் ஈரான் கொடிகளுடன் மனித சங்கிலிகளாக அணிவகுக்க ஆரம்பித்தனர். இந்த செயற்பாடு முழு உலகத்தையும் ஈர்த்தது. அமெரிக்க மக்களையும் தான்.
டொனால்ட் ட்ரம்ப் என்ற மனிதருக்கே ஈரான் எதிரி அமெரிக்காவுக்கு அல்ல என்பதில் அம்மக்கள் தெளிவாக இருந்தனர்.
அதன் காரணமாகவே ட்ரம்பின் தன்னிச்சையான முடிவுகளுக்கு எதிராக அவர்கள் கடந்த வாரம் ‘இங்கு மன்னர்கள் இல்லை’ என்ற கோஷத்தோடு அவருக்கெதிரான ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
சர்வதேச போர் விதிமுறைகள் மற்றும் ஜெனீவா உடன்படிக்கைகளின் படி யுத்தமொன்றில் நேரடியாக பங்கேற்காத மக்கள் மீது தாக்குதல்களை நடத்த முடியாது.
அதை அமெரிக்கா வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அவ்வாறானதொரு நிலைப்பாட்டை தானும் எடுத்தால் என்ன என ட்ரம்ப் யோசித்திருக்கலாம்.
ஆனால் இத்தனை தொகை மக்கள் தமது நாட்டை காப்பதற்கு ஒன்று திரள்வர் என அவர் ஊகித்திருக்க மாட்டார். தம்மையே கவசமாக்கி தமது நாட்டை பாதுகாக்க அணிவகுத்து நிற்கும் மக்கள் மீது குண்டுகளை போடுவதானது தனக்கு எத்தகையை தாக்கத்தை சர்வதேச அளவில்ஏற்படுத்தும் என்பதை ட்ரம்ப் அறிந்கொண்டார்
ஆனாலும் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாத கதையாக ட்ரம்ப் தனது எக்ஸ் வலை தளத்தில் நாங்கள் எங்கள் இராணுவ இலக்குகளை ஏற்கெனவே அடைந்துள்ளோம். ஈரானுடன் நீண்டகால அமைதி குறித்து ஓர் ஒப்பந்தம் உருவாகும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
எமது நாட்டுக்கு எதிரான தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால் எங்கள்இராணுவப் படைகள் தங்களது பாதுகாப்பு நடவடிக்கைகளை நிறுத்தும் அதே வேளை போர் நிறுத்தம் என்பது போரின் முடிவைக் குறிக்காது,
சமாதான தூதுவர் பாத்திரத்தை வகிக்க ஏன் பாகிஸ்தான் ஆர்வம் காட்டியதற்கு பிரதான காரணமே, அதன் எல்லை தான்.
பாகிஸ்தானும், ஈரானும் கிட்டத்தட்ட 900 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் அருகருகே உள்ள நாடுகள்.
இந்தியா, இலங்கை போன்று பாகிஸ்தானும் எரிபொருளுக்குப் பிற நாடுகளில் தங்கியிருக்கும் நாடு. அதனால், ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால் பாகிஸ்தானுக்கு வளைகுடா நாடுகளில் இருந்து வரும் சுமார் 80 சதவிகிதம் எண்ணெய் இறக்குமதியில் நெருக்கடிகள் ஏற்பட்டன.
இதன் காரணமாக அறிவிக்கப்படாத ஒரு அவசரகால நிலை பாகிஸ்தானில் ஏற்பட்டது. அங்கு பாடசாலைகள் மூடப்பட்டன. அரச அலுவலகங்கள் வாரத்துக்கு நான்கு நாட்கள் மாத்திரமே இயங்கின.
எமது நாடு எந்தளவுக்கு மேற்கு ஆசிய நாடுகளில் பணி புரியும் இலங்கையர்களின் அந்நிய செலாவணியில் தங்கியிருக்கின்றதோ அது போன்று பாகிஸ்தானியர்கள் இலட்சக்கணக்கில் மேற்காசிய நாடுகளில் பணி புரிகின்றனர். அங்கு ஈரான் தாக்குதல் நடத்தியதால் இதற்கும் தடை ஏற்பட்டது.
2025-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியாவுக்குகிடையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஒப்பந்தத்தில் இரு நாடுகளில் எந்த நாட்டுக்கும் ஏதாவதொரு வழியில் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் பரஸ்பரம் இரு நாடுகளும் கை கொடுக்க வேண்டும் என்றுள்ளது.
இப்படி பல காரணங்களுக்காகவே இரு நாடுகளுக்கிடையில் சமாதானம் பேச பாகிஸ்தான் முன் வந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தைகள் கடந்த 10 ஆம் திகதிபாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஆரம்பமானாலும் இறுதியில் இருதரப்பினரிடையே எழுந்த முரண்கள் மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களால் இறுதி முடிவு காணப்படாத பேச்சுவார்த்தையாக அமைந்தன.
போர் நிறுத்தத்துக்கு அமெரிக்கா இணங்கினாலும் தன்னை ஏதாவதொரு வழியில் தயார்ப்படுத்தவதே அதன் திட்டமாக இருக்கலாம் என்பதே அமெரிக்காவை அறிந்தவர்களின் கருத்தாக உள்ளது.
நாம் எல்லாவற்றுக்கும் தயாராகவே இருக்கின்றோம் என்பது ஈரானின் பதில். ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை ஈரான் கையிலெடுக்கும் என ட்ரம்ப் நினைத்தும் பார்க்கவில்லை. மேற்படி நீரிணையை மூடியதால் அமெரிக்காவுக்கு அழுத்தங்கள் எழுந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை.
இப்போது ஈரானில் உள்ள செறிவூட்டிய யுரேனியத்தை விடவும் அமெரிக்காவுக்கு ஹோர்முஸ் நீரிணையே பிரதான பிரச்சினையாக உள்ளது.
போர் நிறுத்தம் முடிவுறும் காலம் நெருங்குகின்றது. எனவே அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்ப்பார்ப்பில் சர்வதேசம் உள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய இருதரப்புமே தாமே வெற்றி பெற்றதாக கூறிக்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் இறுதி முடிவை காண்பதற்காக மீண்டும் இரு நாடுகளுக்கிடையில் போர் மூளுமா என்ற அச்சம் மூன்றாம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டுள்ளன. ஏனென்றால் இந்நாடுகள் இருநாடுகளின் உதவியில் தங்கியிருக்கின்றன.
சி.சி.என்