கொழும்பு புறக்கோட்டை செட்டியார் தெருவில் அமைந்துள்ள ஆடை விற்பனை நிலையத்தில் நடந்த பெரும் திருட்டு சம்பவம் தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடையின் முகாமையாளர் மற்றும் மூன்று விற்பனை உதவியாளர்கள் உள்ளிட்ட நான்கு ஊழியர்கள் இணைந்து இந்த திருட்டில் ஈடுபட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில், கடந்த 1ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் கடையிலிருந்து சுமார் 32 இலட்சம் ரூபா பணமும், 30 இலட்சம் ரூபா பெறுமதியான ஆடைகளும் என மொத்தம் 62 இலட்சம் ரூபா மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட பணம் முகாமையாளரின் மட்டக்குளிய பகுதியில் உள்ள வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடை உரிமையாளரின் முறைப்பாட்டின் அடிப்படையில் வெளிச்சத்துக்கு வந்தது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் நால்வரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர். மேலும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிற நபர்கள் இருக்கக்கூடும் என சந்தேகித்து பொலிஸார் விசாரணைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

Share.
Leave A Reply