யாழ்ப்பாணம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள உணவகம் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்ட நிலையில் இருப்பதால், நோயாளர்கள் மற்றும் அவர்களை பராமரிக்கும் உறவினர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையின் உள்ளக உணவகம் செயல்படாததால், அடிப்படை உணவு வசதிகளுக்காக நோயாளர்கள் வெளியிடங்களில் தங்கியிருப்பதோ அல்லது தொலைவிலிருந்து உணவு கொண்டு வர வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

இந்த உணவகம் அதிக வாடகை காரணமாக யாரும் ஏலத்தில் எடுத்துச் செயல்படுத்த முன்வராததால் மூடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு மாதம் ரூ.1,25,000 வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் அதே விலையில் அல்லது பின்னர் ரூ.80,000க்கு குறைக்கப்பட்டும் கூட இதுவரை எந்தவொரு தரப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக வடமராட்சி வடக்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் பிரச்சினை எடுத்துக்கூறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை எந்த தீர்வும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மேலும், புதிய கட்டிட தொகுதிக்கு மருத்துவமனை மாற்றப்பட்டதால் உணவகம் மற்றும் நோயாளர் விடுதிகளுக்கு இடையிலான தூரம் அதிகரித்துள்ளதால், நோயாளர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மேலும் அதிக சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

Share.
Leave A Reply