மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், அமெரிக்காவின் மூன்றாவது விமானம் தாங்கி போர்க்கப்பலான ‘யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்’ குறித்த பகுதிக்கு வந்தடைந்துள்ளது.
இதன் மூலம் ஆயிரக்கணக்கான மேலதிக அமெரிக்க துருப்புக்களும், அதிநவீன போர் விமானங்களும் குறித்த கப்பலில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.
ஹோர்மூஸ் நீரிணையில் அண்மமைக்காலமாக நீடித்து வரும் குழப்பமான நிலையைத் தொடர்ந்து, ஈரான் கடல் எல்லைக்கு அருகில் இக்கப்பல் நுழைந்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தென்படாத நிலையில் இந்த நகர்வு முக்கியத்துவம் பெறுகிறது.
தற்போது இப்பகுதியில் ‘யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்’ (USS Gerald R Ford) மற்றும் ‘யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்’ (USS Abraham Lincoln) ஆகிய கப்பல்களுடன் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே பிராந்தியத்தில் மூன்று விமானம் தாங்கி கப்பல்கள் நிறுத்தப்படுவது “மிகவும் அசாதாரணமானது” என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போதைய படை பலம்:
யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்: 5,000 மாலுமிகள், 9 விமான படைப்பிரிவுகள் மற்றும் மூன்று டிஸ்ட்ராயர் (Destroyer) போர்க்கப்பல்கள் இதனுடன் இணைந்துள்ளன.
யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்ட்: உலகின் மிகப்பெரிய போர்க்கப்பலான இது, 90 போர் விமானங்களை தாங்கும் திறன் கொண்டது. இது தற்போது செங்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.
ஒட்டுமொத்த நிலை: அமெரிக்க கடற்படையின் மொத்த கொள்ளளவில் சுமார் 40 சதவீதம் தற்போது மேற்காசியாவில் குவிக்கப்பட்டுள்ளன.
ஈரானிய துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதற்குப் பதிலடியாக, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹோர்மூஸ் நீரிணையை ஈரான் கடந்த இரண்டு மாதங்களாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இதனால் உலக சந்தையில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
அட்லாண்டிக் கவுன்சில் கூட்டத்தில் பேசிய அட்மிரல் டேரில் காடில், “இந்த மூன்றாவது விமானம் தாங்கி கப்பலின் வருகை, ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பான பாதையை உறுதி செய்ய உதவும்” எனத் தெரிவித்தார். மேலும், ஈரானிய கடல் கண்ணிவெடிகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைச் சமாளிக்கவும் இது பயன்படுத்தப்படும்.
ட்ரோன் தாக்குதல்களை எதிர்கொள்ள, ‘லோக்கஸ்ட்’ (LOCUST) எனப்படும் 20kW திறன் கொண்ட லேசர் ஆயுத அமைப்பை யுஎஸ்எஸ் ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ் கப்பலில் அமெரிக்க கடற்படை வெற்றிகரமாகச் சோதித்துள்ளது. ட்ரோன் தாக்குதல்களைச் செலவு குறைந்த முறையில் முறியடிக்க இந்த அதிநவீன லேசர் தொழில்நுட்பம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்காவின் இந்த அதிரடி படை நகர்வு பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

