மட்டக்களப்பு, செட்டிபாளையம் கடற்கரையில் கடற்றொழிலாளர் ஒருவரைச் சித்திரவதை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கல்லடி கடற்படை முகாமின் புலனாய்வுப் பிரிவு பொறுப்பதிகாரிக்குக் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. கடந்த 5-ஆம் திகதி ‘சுருக்கு வலை’ பயன்படுத்தியதாகக் கூறி நந்தீசன் என்ற கடற்றொழிலாளரைக் கைது செய்த கடற்படை குழுவினர், அவரைச் சட்டப்படி ஒப்படைக்காமல் சுமார் 2 மணிநேரம் முழங்காலில் நிற்க வைத்துத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்துப் பாதிக்கப்பட்டவர் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து குறித்த அதிகாரி கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது, பொலிஸார் சாதாரண தாக்குதல் பிரிவின் கீழ் (குற்றவியல் கோவை 314) வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், இது ஒரு திட்டமிட்ட சித்திரவதை என்பதால், 1994-ஆம் ஆண்டு 22-ஆம் இலக்கச் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர் தரப்பு சட்டத்தரணி கடும் வாதத்தை முன்வைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவித்ததுடன், முறையான சாட்சிகள் மற்றும் சான்றுப் பொருட்களுடன் சித்திரவதை தடுப்புச் சட்டத்தின் கீழ் எதிர்வரும் 22-ஆம் திகதி மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யுமாறு களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்குக் கட்டளையிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version