யாழ்ப்பாணம் நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி ஒருவரிடம் விகாரைப் பிக்கு பாலியல் துஷ்பிரயோக முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் வழக்கு, தற்போது புதிய திருப்பத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கில் சாவகச்சேரி நீதிமன்றம் தந்திரோபாயமாகச் செயல்பட்டுச் சதி செய்துள்ளதாகப் பலாங்கொடை கஸ்ஸப தேரர் ஊடக சந்திப்பு ஒன்றில் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். நீதிமன்றின் கௌரவத்தைச் சீர்குலைக்கும் இத்தகைய கருத்துக்களுக்காக அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு விசாரணை நடத்தப்பட வேண்டும் எனச் சாவகச்சேரி சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாகச் சட்டத்தரணி கேசவன் சயந்தன் உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை அடுத்து, ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நேற்று (24.04.2026) சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகி நீண்ட சமர்ப்பணங்களை முன்வைத்தார். “சட்டபூர்வமற்ற செயலில் ஈடுபட்ட காரணத்தினாலேயே சம்பந்தப்பட்ட பிக்குவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. ஆனால், அதனை மறைத்து நீதிமன்றின் மீது உள்நோக்கத்துடன் பலாங்கொடை கஸ்ஸப தேரர் அவதூறு பரப்பியுள்ளார்” என சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இந்தச் சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான் எம்.ஐ.எவ்.றிஸ்மினா, தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்த தீர்மானத்தை அடுத்த வாரம் அறிவிப்பதாகத் தெரிவித்தார்.

