2026-2027 கல்வியாண்டிற்கான ஆயுஷ் (AYUSH) புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், இளங்கலை (UG), முதுகலை (PG) மற்றும் கலாநிதி (PhD) பட்டப்படிப்புகளைத் தொடர விரும்பும் இலங்கை பிரஜைகளிடமிருந்து கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. இத்திட்டமானது கல்விக் கட்டணம், மாதாந்தச் செலவினக் கொடுப்பனவு, தங்குமிட வசதி மற்றும் வருடாந்த உதவித்தொகை என அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான புலமைப்பரிசிலாகும்.
விண்ணப்பதாரிகள் தாங்கள் தெரிவு செய்யும் பாடநெறிக்கு ஏற்ப கல்வித் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக மருத்துவப் படிப்புகளுக்கு உயர்தரத்தில் விஞ்ஞானப் பிரிவில் சித்தி பெற்றிருக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை 2026 மே மாதம் 15-ஆம் திகதிக்கு முன்னதாக இணைய வழியாகச் சமர்ப்பிக்க வேண்டும்.
கற்கைநெறிகளும் கல்வித் தகுதிகளும்:
| கற்கைநெறி | கல்வித் தகுதி |
| இளங்கலை (ஆயுர்வேதம், யுனானி, சித்தா, ஹோமியோபதி) | க.பொ.த (உயர்தரம்) – பௌதீகவியல், இரசாயனவியல், உயிரியல் ஆகிய பாடங்களில் சித்தி. |
| இளங்கலை (யோகா – B.Sc / B.A) | க.பொ.த (உயர்தரம்) – ஏதாவது ஒரு துறையில் சித்தி. |
| முதுகலை (MD/MS – ஆயுர்வேதம், சித்தா, யுனானி, ஹோமியோபதி) | இந்திய மருத்துவ மத்திய பேரவையினால் அங்கீகரிக்கப்பட்ட இளமாணிப் பட்டம். |
| கலாநிதி (PhD – ஆயுர்வேதம், யுனானி, யோகா) | குறித்த துறைகளில் அங்கீகரிக்கப்பட்ட இளமாணி மற்றும் முதுமாணிப் பட்டங்கள். |
| முதுகலை & கலாநிதி (யோகா – M.Sc / PhD) | முறையே ஏதேனும் ஒரு இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றிருத்தல் அவசியம். |

