யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி தெற்கு, களுவத்துறை பகுதியில் வசித்து வந்த கைலாயப்பிள்ளை கமலேஸ்வரி (79) என்பவர் நேற்று (30.04.2026) அவரது வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது பிள்ளைகள் இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், இவர் ஒரு பணிப்பெண்ணின் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார்.
நேற்றைய தினம் வெளிநாட்டிலிருந்து பிள்ளைகள் மேற்கொண்ட தொலைபேசி அழைப்புகளை அவர் ஏற்காததால், சந்தேகமடைந்த பிள்ளைகள் அயலவர்களுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். அயலவர்கள் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது, கமலேஸ்வரி தீயில் கருகிய நிலையில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கினர். சம்பவ இடத்தில் தடயவியல் பொலிஸார் மேற்கொண்ட முதற்கட்ட சோதனையில், சடலத்திற்கு அருகில் இரண்டு மண்ணெண்ணெய் கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், வீட்டின் மின்விசிறியில் கயிறு ஒன்று கட்டப்பட்டு, அது அறுக்கப்பட்ட நிலையில் காணப்பட்டமை பலத்த மர்மத்தை ஏற்படுத்தியுள்ளது.
சடலம் தற்போது உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் வட்டுக்கோட்டை பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

