தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சுமார் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் அரசாங்கத்திலிருந்து விலகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் அதிகளவில் பரவி வருகின்றன.

திசைகாட்டி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், தற்போது சமூக ஊடகங்கள் இந்தச் செய்தியைப் பெரிதாகப் பேசி வந்தாலும், திசைகாட்டியின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கம் அமைத்து இரண்டு மூன்று வாரங்கள் கடந்த போதே இது குறித்து கிசு கிசுக்கள் எழுந்தன. திசைகாட்டி அரசாங்கத்திற்குள் பல்வேறு வடிவங்களில் ஜே.வி.பி மற்றும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கு இடையே மோதல்கள் நிலவியமையே இதற்கு காரணம்.

கலாநிதி – பேராசிரியர் பதவிகள், கொள்கை ரீதியான பிரச்சினைகள் போன்ற பல்வேறு விடயங்களை மையமாகக் கொண்டு இந்த மோதல்கள் உருவெடுத்து வருவதாகவும், சில சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி.யின் அரசியல் குழுக்கூட்டங்கள் இதனால் மிகவும் சூடுபிடித்திருந்துள்ளன.

எவ்வாறாயினும், தேசிய மக்கள் சக்தியிலிருந்து சுமார் 15 உறுப்பினர்கள் விலகத் தயாராகி வரும் செய்தி குறித்து பல தரப்பினரும் தகவல்களை தேடியுள்ளனர்.

159 தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் 107 பேர் திசைகாட்டி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்களில் ஜே.வி.பி.யை அடிப்படையாக கொண்ட உறுப்பினர்கள் 52 பேர் மட்டுமே உள்ளனர்.

இவர்கள் 52 பேரும் ஜே.வி.பி.யின் முழுநேர உறுப்பினர்களாவர். ஆனால், 107 தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கலாநிதிகள், பேராசிரியர்கள், மற்றும் முன்னணி நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர்கள்.

அவர்கள் அதிக சலுகைகளையும், அதிக சம்பளத்தையும் பெற்று வந்த உயர் மட்டத் தொழில் வல்லுநர்கள். அவர்கள் அந்த அனைத்துச் சலுகைகளையும் சம்பளத்தையும் துறந்தே தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகினர்.

அதேபோல், இவர்கள் ஆட்சியைப் பிடிப்பதற்காகத் தேர்தல் மேடைகளில் பேசும்போது, தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், சலுகைகள், வாகனங்கள், எரிபொருள் அல்லது ஊழியர் குழாம்களைப் பெறப்போவதில்லை என்று கூறியிருந்தனர். மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த வாக்குறுதியின் காரணமாக, இப்போது அவற்றை அவர்கள் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான சலுகைகள் எதுவுமின்றி கஷ்டப்படுவதற்கான மனப்பக்குவம் ஜே.வி.பி.யின் முழுநேர உறுப்பினர்களுக்கு இருந்தாலும், உயர் மட்டச் சம்பளம், தொழில் மற்றும் சலுகைகளைத் துறந்துவிட்டு பாராளுமன்றம் வந்த திசைகாட்டியின் ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு இது தற்போது ஒரு பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இதன்படி, அவர்கள் இப்போது ஒரு மதிப்பீட்டைச் செய்து வருகின்றனர். அதாவது, எவ்வித சலுகைகளும், சம்பளமும், வாகனமும், எரிபொருளும் இன்றி ஐந்து வருடங்கள் தொடர்ந்து கஷ்டப்பட்டுக்கொண்டு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதா?

அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி, பழைய தொழில்களுக்குத் திரும்பி தாம் முன்னதாக வாழ்ந்த வசதியான வாழ்க்கையை வாழ்வதா? என்பதே அதுவாகும்.

கிடைத்துள்ள தகவல்களின்படி, திசைகாட்டி உறுப்பினர்களிடையே நிலவும் இந்த உரையாடல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இதன் காரணமாக, எந்த நேரத்திலும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் திசைகாட்டியிலிருந்து விலகுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன.

விலகினால் நல்லது

இதன்படி, திசைகாட்டி பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று அவ்வாறு பதவி விலகினால், அதன் பிறகு என்ன நடக்கும்? உருவாகி வரும் இந்தச் சூழலை ஜே.வி.பி அறியாமல் இல்லை.

சொல்லப்போனால், இந்தத் திசைகாட்டி உறுப்பினர்கள் எப்போது தமது பதவிகளிலிருந்து விலகுவார்கள் என்றுதான் ஜே.வி.பி காத்துக்கொண்டிருக்கிறது. ஏனெனில், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகும்போது ஏற்படும் வெற்றிடங்களுக்கு, ஜே.வி.பி.யின் முழுநேர உறுப்பினர்களை நியமித்துக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கும். அவ்வாறு நடக்கும் பட்சத்தில், தற்போது 52 ஆக இருக்கும் ஜே.வி.பி.யின் முழுநேர உறுப்பினர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்துக் கொள்ள முடியும். இது ஜே.வி.பி தரப்பிற்கு ஒரு மிகப்பெரிய சாதகமாகும்.

இதன் காரணமாகவே, ஜே.வி.பி.யின் தீவிர கொள்கையுடையவர்கள் கட்சிக்குத் தெரிவித்துள்ளதாவது, இந்தத் திசைகாட்டி உறுப்பினர்கள் விலகுவது ஜே.வி.பி.க்கு நன்மையானது. தற்போது சமூக ஊடகங்களில் பல்வேறு கோணங்களில் பேசப்பட்டு வரும் ‘அரசாங்கத்தில் 15 உறுப்பினர்கள் பதவி விலகத் தயார்’ என்ற செய்தியின் பின்னணியில் உள்ள அசல் கதை இதுதான்.

பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள்

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைத்த அரசாங்கம், தனது முதல் இரண்டு ஆண்டுகளை ‘தேனிலவு காலம்’ போலவே கழிக்கின்றது. அந்த காலப்பகுதிக்குள் அரசாங்கத்திற்கு பெரிய அளவில் பிரச்சினைகள் உருவாவதில்லை. அப்படியே சில பிரச்சினைகள் வந்தாலும், அரசாங்கத்தின் மீதான மக்கள் செல்வாக்கின் காரணமாக அவை பெரியதாகத் தெரிவதில்லை. ஒரு புதுமணத் தம்பதியினரைப் போலவே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் முதல் சில ஆண்டுகளை சுதந்திரமான, ஒரு தேனிலவு காலமாகக் கடக்கின்றது.

இருப்பினும், மூன்றில் இரண்டு பங்கு பலத்துடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் பதவிக்கு வந்து இன்னும் ஒன்றரை ஆண்டுகளே கடந்துள்ளன.

வேறு எந்த அரசாங்கமும் எதிர்கொள்ளாத வகையிலான பல கடுமையான நெருக்கடிகள் காரணமாக, ஒரு புதிய அரசியல் கலாசாரத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளதைக் காண முடிகிறது. இதன்படி பார்க்கையில், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தற்போது ஒன்று முடியுமுன் மற்றொன்று எனத் தொடர்ச்சியான பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது.

பல மாதங்களாக இழுபறியில் இருந்த ‘தரமற்ற நிலக்கரி’ பிரச்சினையை, ஜனாதிபதியின் மிக நெருங்கிய நண்பரான முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியை அந்தப் பதவியிலிருந்து நீக்கியதன் மூலம் அரசாங்கம் ஒருவாறு முடிவுக்குக் கொண்டு வந்தது.

அதனைத் தொடர்ந்து, அமைச்சர் கே.டி. லால்காந்த கடுவெல – வெலிவிட்ட பகுதியில் அமைத்த பிரம்மாண்டமான மூன்று மாடி வீட்டை மையப்படுத்தி அரசாங்கம் பாரிய சர்ச்சையை எதிர்கொண்டது.

அதேபோல், கடந்த காலங்களில் இலங்கை அரசாங்கம் ஒரு டீசல் பீப்பாயை 286 டொலர் என்ற மிக அதிக விலைக்கு கொள்வனவு செய்துள்ளதாக சர்வதேச நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வெளியிட்ட கருத்தினால் அரசாங்கம் மேலும் இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டது.

இவை அனைத்தும் இவ்வாறு இருக்க, கடந்த புதன்கிழமை அரசாங்கம் மற்றுமொரு புதிய நெருக்கடியைச் சந்தித்தது. அதாவது, இலங்கை திறைசேரி அவுஸ்திரேலிய நிறுவனமொன்றுக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் கடன் தொகையைத் தவறுதலாக ஒரு போலி வங்கிக் கணக்கில் வைப்பிலிட்ட சம்பவமாகும்.

இதுவரை அரசாங்கம் எதிர்கொண்ட தரமற்ற நிலக்கரி இறக்குமதி, லால்காந்தவின் சொகுசு வீட்டு விவகாரம் மற்றும் 286 டொலருக்கு எண்ணெய் கொள்வனவு செய்த விடயங்களை விடவும், இது மிகவும் பாரதூரமான ஒன்றாகவே பலராலும் பார்க்கப்படுகிறது. ‘

நல்லாட்சி’ அரசாங்க காலத்தில் நடந்த மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் ஒப்பிடும்போது, தற்போது திறைசேரியிலிருந்து காணாமல் போன தொகை மிகச் சிறியதாக இருந்தாலும், சம்பவத்தின் தீவிரத்தைப் பார்க்கும்போது இதுவொரு பாரிய அரசியல் நெருக்கடியின் ஆரம்பம் என்பதே பலருடைய கருத்தாகும்.

குற்றப்புலனாய்வு பிரிவுக்கு செல்லாதது ஏன்?

இந்த விவகாரத்தில் அரசாங்கத்தால் பதிலளிக்க முடியாத சில கேள்விகளை எதிர்க்கட்சி முன்வைத்துள்ளதைக் காண முடிகிறது. அதில் முதலாவது கேள்வி என்னவென்றால், இவ்வளவு பாரதூரமான ஒரு சம்பவத்தை அரசாங்கம் ஏன் 5 மாதங்களாக மூடிமறைக்க முயன்றது என்பதுதான்.

இரண்டாவது கேள்வி, கடந்த காலங்களில் மிகச்சிறிய சம்பவங்களுக்குக் கூட (கலாநிதி, பேராசிரியர் பதவிகள் தொடர்பான சர்ச்சைகள் உட்பட) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு செல்லும் வழமையைக் கொண்டிருந்த அரசாங்கம், இவ்வளவு பெரிய நிதி மோசடி நடந்து 5 மாதங்கள் கடந்தும் ஏன் இதுவரை சி.ஐ.டி.யிடம் முறையிடவில்லை என்பதாகும்.

அடுத்ததாக எழுப்பப்பட்டுள்ள கேள்வி என்னவென்றால், இதற்கு முன்னர் இவ்வாறான பணப்பரிமாற்றங்கள் மத்திய வங்கியின் கீழ் உள்ள, அந்தத் துறையில் சிறந்த அனுபவமும் தேர்ச்சியும் கொண்ட நிபுணர்களால் கையாளப்பட்டு வந்த நிலையில், திடீரென அனுபவமில்லாத திறைசேரி அதிகாரிகளிடம் இப்பொறுப்பு ஏன் ஒப்படைக்கப்பட்டது என்பதாகும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனையின் பேரிலேயே கடன் மறுசெலுத்துகை நடவடிக்கைகள் மத்திய வங்கியிடமிருந்து திறைசேரிக்கு மாற்றப்பட்டதாகச் சிலர் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இவ்வாறானதொரு பணப்பரிமாற்றம் நடக்கப்போகும் தகவல் கிடைத்தவுடன், மத்திய வங்கி அதிகாரி ஒருவர் அந்தப் பரிமாற்றம் சந்தேகத்திற்குரியது எனக் கூறி, வங்கி கணக்கு இலக்கத்தை மீண்டும் சரிபார்க்குமாறு திறைசேரி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்ததாகப் பல்வேறு தரப்பிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன. இதன்படி, இச்சம்பவம் வரும் நாட்களில் ஒரு மிகப்பெரிய அரசியல் விவாதமாக உருவெடுப்பதற்கான அறிகுறிகள் இப்போதே தென்படுகின்றன.

இந்தத் தகவல் வெளியான போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தென்பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். தகவல் கிடைத்தவுடன், உடனடியாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஐந்து பொருளாதார நிபுணர்களுடன் நிகழ் நிலை தொழில்நுட்பம் வாயிலாக அவர் கலந்துரையாடினார்.

‘இப்படியொரு சம்பவம் எப்படி நடக்க முடியும்?’, ‘யாரால் இது நிகழ்ந்தது?’, ‘இதனால் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் என்ன?’, ‘இவற்றைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?’ என்பது போன்ற தகவல்களை அவர் கேட்டறிந்தார்.

அந்த பொருளாதார நிபுணர்களுக்கும் இச்சம்பவம் குறித்து ஏற்கனவே பல தகவல்கள் கிடைத்திருந்தன. சில உணர்வுப்பூர்வமான தகவல்களைச் சஜித்திடம் பகிர்ந்துகொண்ட அவர்கள், ‘இவற்றை இப்போதே பகிரங்கப்படுத்த வேண்டாம்’ எனக் கேட்டுக்கொண்டனர். சஜித் அந்தத் தகவல்களைக் கவனமாகச் செவிமடுத்ததோடு, குறிப்பாக இந்தச் சிக்கலின் தொழில்நுட்பக் காரணிகள் குறித்து அவர்களிடம் விரிவாக வினவினார்.

அதனைத் தொடர்ந்து, சஜித் பிரேமதாச முன்னாள் மத்திய வங்கி ஆளுநராகப் பணியாற்றிய ஒரு புகழ்பெற்ற அதிகாரியுடன் உரையாடினார். சுமார் 20 நிமிடங்கள் நீடித்த அந்த உரையாடலில், இவ்வாறான பணப்பரிமாற்றங்கள் மத்திய வங்கியின் கீழ் இருந்தபோது எவ்வளவு பாதுகாப்பாகக் கையாளப்பட்டன என்பது குறித்தும், மத்திய வங்கி பின்பற்றிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.

இந்தக் கலந்துரையாடல்களுக்குப் பிறகு, ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாகக் குழுவுடன் ஆலோசனையில் ஈடுபட்ட சஜித், இச்சம்பவம் குறித்து பாளுமன்றத்திற்குள்ளும், அதற்கு வெளியிலும் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்துத் தீவிரமாக கலந்துரையாடினார்.

நெருக்கடிகளை திசை திருப்பும் அரசின் முயற்சி

தரமற்ற நிலக்கரி விவகாரத்தைத் தொடர்ந்து, லால்காந்தவின் வீட்டுப் பிரச்சினை, 286 டொலருக்கு டீசல் பீப்பாய் கொள்வனவு மற்றும் 2.5 மில்லியன் டொலர் பணம் வேறொரு கணக்கிற்கு மாற்றப்பட்டமை என அடுத்தடுத்து உருவான சிக்கல்களால், நாட்டில் அரசாங்கத்திற்கு இருந்த செல்வாக்கு பெருமளவில் சரிந்து வருவதை அரசாங்கம் உணர்ந்திருந்தது. இதனால், கடந்த வாரம் அரசாங்கத்திற்குள் நடந்த ஒரு கலந்துரையாடலில், இந்த நிலைமையைக் கட்டுப்படுத்த உடனடியாக சில முடிவுகளை எடுக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த வாரம் ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியான ஒரு முக்கிய செய்தியில், கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்தப் பதவியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. பொதுவாக, கிரிக்கெட் என்பது நாட்டில் கட்சி பேதமின்றி அனைவரும் நேசிக்கும் ஒரு விளையாட்டு என்பதால், கடந்த காலங்களில் இலங்கை அணி சந்தித்த தோல்விகளை முன்வைத்து, ஷம்மி சில்வாவை நீக்க வேண்டும் எனப் பல தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் இருந்தன.

அதேவேளை, சில வாரங்களாக அரசாங்கத்திற்கு மிகவும் சார்பான நிலையில் ஊடகப் பணிகளை முன்னெடுக்கும் தனியார் ஊடக வலையமைப்பு, தனது பிரதான செய்திகளில் அதிக நேரத்தை ஒதுக்கி கிரிக்கெட் நிறுவனத்திற்கு எதிராகக் கடுமையான தாக்குதல்களைத் தொடுத்து வந்தது.

அரசாங்கத்தின் மேலிடத்திலிருந்து வந்த அறிவுறுத்தலின் பேரில், ஷம்மி சில்வாவுக்கு எதிராக நாட்டில் ஒரு மக்கள் கருத்தை உருவாக்கி, இறுதியில் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதை அரசாங்கத்தின் ஒரு வெற்றியாகக் காட்ட குறித்த தனியார் ஊடகம் முயற்சிப்பதாகப் பலரும் சந்தேகித்தனர்.

இருப்பினும், பல வாரங்களாக இந்தப் பரப்புரையைச் செய்தாலும், நிலக்கரி விவகாரம், லால்காந்தவின் வீடு மற்றும் டீசல் கொள்வனவு போன்ற பிரச்சினைகள் மக்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியிருந்ததால், கிரிக்கெட் தொடர்பான செய்திகளுக்கு மக்கள் போதிய ஆர்வம் காட்டவில்லை.

எப்படியிருப்பினும், நிலக்கரி விவகாரம் தொடங்குவதற்கு முன்பே, கிரிக்கெட் நிர்வாகத்தில் மாற்றம் தேவை என்றும், அவ்வாறு மாற்றம் ஏற்படும் பட்சத்தில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முன்னாள் வீரர் ரொஷான் மானாம போன்ற தூய்மையான ஆளுமை கொண்ட ஒருவரிடம் அந்தப் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்றும் மக்கள் மத்தியில் ஒரு கருத்து இருந்தது.

ஜனாதிபதியும் இது குறித்துக் கவனம் செலுத்தியிருந்தார். ஒரு இடைக்காலக் குழுவை நியமித்து, ஒரு சுயாதீனமான நபரை அதன் தலைவராக்க வேண்டும் என்பதே ஜனாதிபதியின் முயற்சியாக இருந்தது. இதன்படி, ஒரு மூன்றாம் தரப்பினர் ஊடாக ஷம்மி சில்வாவுக்குத் தகவல் அனுப்பிய ஜனாதிபதி, கிரிக்கெட் நிறுவனத்தில் மாற்றங்களைச் செய்ய இதுவே சரியான தருணம் எனத் தெரிவித்ததாகத் தெரியவருகிறது.

ஆனால், அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், அரசாங்கம் நியமிக்கவுள்ளதாகக் கூறப்படும் புதிய இடைக்காலக் குழுவின் தலைவராக ஊடகங்களில் வெளியான பெயர் ரொஷான் மானாமவுடையது

அல்ல. மாறாக, ஐக்கிய மக்கள் சக்தியின் மொரட்டுவ தொகுதி அமைப்பாளராகச் செயல்படும், கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த, பின்னர் கொழும்பு மேயர் வேட்பாளர் பதவியைக் கேட்டும் அது கிடைக்காத, தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதாரக் குழுவில் இருக்கும் எரான் விக்கிரமரத்னவின் பெயரே அடிபட்டது. ஒரு ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினரின் பெயர், அரசாங்கத்தின் தரப்பிலிருந்து எப்படி வெளியே வந்தது என்பது பலருக்குப் புதிராக அமைந்தது.

இதற்கு முன்னரும் நாம் ஒரு விசேட தகவலை வெளியிட்டிருந்தோம். அதாவது, ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சில பொருளாதார ஆலோசகர்கள் இரகசியமான முறையில் அரசாங்கத்திற்கு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர் என்பதே அதுவாகும். இந்தக் குழுவினர் கடந்த காலத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கும் ஆலோசனைகளை வழங்கியிருந்தனர். மேலும், ஜனாதிபதி வரவு செலவுத் திட்டத்தைத் தயாரிக்கும் போது, அநுர குமார திசாநாயக்கவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார ஆலோசகர்கள் உதவி செய்துள்ளனர்.

சஜித்தின் அழைப்பை நிராகரிக்க காரணம்

அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு இன்னும் மருத்துவ ஆலோசனையின் பேரில் வீட்டில் தங்கியிருக்கும் ரணிலுக்கு, கடந்த வாரம் மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. ஏனெனில், அவரது வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் காரணமாக, சட்டத்தரணிகளுடன் பல சுற்று சந்திப்புகள் நடைபெற்றன. இருப்பினும், ரணில் அரசியல் ஆலோசனைகளை வழங்கும் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார். கூட்டு எதிர்க்கட்சியின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், வஜிர, தலதா மற்றும் சாகல ஆகியோரை அழைத்து ஆலோசனை வழங்கியதோடு மட்டுமன்றி, அவ்வப்போது தொலைபேசி வாயிலாக ருவான் மற்றும் ஹரீன் ஆகியோரைத் தொடர்பு கொண்டும் அரசியல் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைகளை வழங்கினார்.

இந்தச் சந்திப்புகளின் போது நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது. முக்கியமாக, மே தினக் கூட்டத்திற்காக ஐக்கிய மக்கள் சக்தி விடுத்த அழைப்பு குறித்து விரிவாக ஆராயப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் அதன் பொதுச்செயலாளர் விடுத்த அந்த அழைப்பானது, கட்சி உறுப்பினர்களுக்கு மாத்திரமே அமைந்திருந்தது. அதில் எந்த இடத்திலும் கட்சியின் தலைவர் ஒருவருக்கோ அல்லது பிரதிநிதி ஒருவருக்கோ முறைப்படியான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

அந்த அழைப்பு கிடைக்கும் போதே, ஐக்கிய தேசியக் கட்சி மே தினத்தில் மாத்திரமன்றி, அதற்கு முந்தைய நாளிலும் செய்ய வேண்டிய திட்டங்களை ஒருங்கமைத்து முடித்திருந்தது. அவை அனைத்தும் சமய ரீதியான திட்டங்களாகும்.

ஜே.ஆர். ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில், அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச முன்வைத்த முன்மொழிவுக்கு இணங்கவே கட்சி இத்தகைய முடிவை எடுத்திருந்தது. அதாவது, மே மாதம் முதலாம் திகதி பௌர்ணமி தினமாக அமைந்தால், அன்றைய தினம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதே அந்த முன்மொழிவாகும்.

அந்த நிலைப்பாட்டிற்கு அமையவே கட்சி இந்த முடிவை எடுத்திருந்தது. இதன்படி, ஏப்ரல் 30-ஆம் திகதி இரவு முதல் விசேட வழிபாடுகள் உள்ளிட்ட புண்ணிய காரியங்களும், பௌர்ணமி தினமான மே முதலாம் திகதி முழுவதும் சமய ரீதியான நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

பதில் கடிதம்

இதன்படி, மத்தும பண்டாரவின் கடிதத்திற்குப் பதிலனுப்பும் பொறுப்பு தலதாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அரசாங்கத்தில் இருந்தாலும் அல்லது எதிர்க்கட்சியில் இருந்தாலும் கட்சியின் கொள்கைகளை மாற்றக்கூடாது என்பதையும், அதற்கமைய அன்று பிரதமர் பிரேமதாசவின் முன்மொழிவின்படி எடுக்கப்பட்ட கொள்கையைப் பின்பற்றி, எந்தவொரு மே தினப் பேரணிகளிலும் கலந்துகொள்ளப் போவதில்லை என்பதையும் அந்த கடிதத்தின் ஊடாக அவர் வலியுறுத்தினார்.

இந்த அறிவிப்பு ஐக்கிய மக்கள் சக்திக்கு மாத்திரம் விடுக்கப்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்து கடிதங்களை அனுப்பியிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகளுக்கும், தமது கட்சியின் இந்த நிலைப்பாட்டைக் குறிப்பிட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதிலும், அதில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ள பங்கு என்ன என்பது குறித்து எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.

அதேபோல், கட்சியின் உயர்மட்டத் தலைவர்களை அங்கு அனுப்ப முடியாமைக்கு மற்றுமொரு காரணம், அவர்களுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதாகும். அந்த அழைப்பில் ‘ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்’ என்று மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கமைய, பதில் கடிதம் தயாரித்து அனுப்பப்பட்ட பின்னர், அது ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளேயே ஒரு சிக்கலைத் தோற்றுவித்துள்ளதாக அறியமுடிகிறது.

ஏனெனில், அங்குள்ள ஒரு சாரார் மே தினப் பேரணியை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று கூறியிருந்தனர். ஆனால், சில இளம் பாராளுமன்ற உறுப்பினர்களோ, மே தினப் பேரணியை நடத்தி ஐக்கிய தேசியக் கட்சியை நெருக்கடிக்குள் தள்ள வேண்டும் என்று கூறியிருந்தனர். இறுதியில் அவர்களின் தீர்மானம் அவர்களுக்கே நெருக்கடியை கொடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் விரிசல்

ரணில் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் புதன்கிழமை சந்தித்தபோது, சமாதான பாதயாத்திரை குறித்தும் சில உரையாடல்கள் இடம்பெற்றன. ‘ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் இருந்திருந்தால், ஊர்வலத்தில் ஒரு யானையையும் அழைத்துச் சென்றிருக்கலாம்’ என்று ஒரு தலைவர் நகைச்சுவையாகக் கூறினார்.

எவ்வாறாயினும், பாதயாத்திரையின் இறுதி நிகழ்வின் போது அங்கு வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையைக் கூட பாதுகாக்க முடியாமல் போனது. இது போன்ற சமாதான பாதயாத்திரைகள் சென்றாலும், வெசாக் பண்டிகையை கூட உரிய தினத்தில் நடத்த முடியாமல் போனது. மே தினத்தை நடத்துவது தொடர்பாக ஒரு உடன்பாட்டுக்கு வந்ததாலேயே இது நிகழ்ந்தது என அங்கிருந்த தலைவர்கள் குறிப்பிட்டனர்.

ஷம்மி சில்வா கிரிக்கெட் சபையின் உயர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, முழு நிர்வாக சபையும் விலகியது. பின்னர் அந்தப் பதவிக்கு எரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஐக்கிய மக்கள் சக்திக்குள் பெரும் விரிசல் ஏற்பட்டது. கூட்டு எதிர்க்கட்சியினரும் அந்தப் பதவிக்கு எரானை நியமிக்கும் வரைதான் காத்திருக்கிறார்கள் என்று ரணில் ஏனைய தலைவர்களிடம் கூறினார்.

இந்த விவகாரங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ரணில், ஷம்மியை நீக்கிவிட்டு எரானை நியமித்த பின்னர் இறுதியில் ஒரு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறினார். ‘தேர்தல் என்று வந்தால் எரானால் அதில் வெற்றி பெற முடியுமா? அரசியலமைப்பின்படி தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே ஐ.சி.சி இன் நிலைப்பாடாகும். அனைத்து விளையாட்டுக் கழகங்களின் அதிகாரமும் ஷம்மியிடமே இருப்பதால், வேறொருவர் வெற்றி பெறுவது பற்றிச் சிந்திக்க முடியாது என்பதே கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாகும். இதன்படி கிரிக்கெட் விளையாட்டும் மேன்மேலும் குழப்பமடைந்து செல்கிறது. இது வெறுமனே தவறான முடிவு அல்ல, முழுமையாகச் சேற்றில் விழுந்ததற்குச் சமமானது. தமது ஊழல்களைத் தீர்க்காமல் மற்றவர்களின் ஊழல்களைத் தேடிச் சென்று இப்போது எல்லாவற்றையும் குழப்பிக் கொண்டுள்ளனர் என கூறினார்.

அரசாங்கத் தரப்பினர் சமாதான பாதயாத்திரைகளைப் பாராட்டினாலும், மறுபுறம் திறைசேரியை கொள்ளையடித்த செயலாளரின் வீட்டுக்கு ஊர்வலமாகச் சென்ற சுபீஷ;வர பண்டாரவை தாக்கும் முரணான கொள்கையையே கடைப்பிடிக்கின்றனர். இதற்காக பெலவத்தையிலிருந்து குண்டர் குழுக்களைக் கொண்டு வந்து தாக்காமல் இருந்திருந்தால், இந்த விடயங்கள் மக்களுக்கு இரண்டு மூன்று நாட்களில் மறந்திருக்கும். இதன்படி, திருட்டுக்களுக்கு மேலதிகமாக இப்போது குண்டர் கலாசாரமும் வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது என பீரிஸ் குறிப்பிட்டார்.

ஒருபுறம் மொட்டு கட்சியும் நாமல் ராஜபக்ஷவும் முன்னுக்கு வருகின்றனர். மறுபுறம் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் கூட்டு எதிர்க்கட்சியை பலப்படுத்தி வருகிறார். எதிர்க்கட்சியில் உள்ள எந்தவொரு தனிப்பட்ட கட்சிக்கும் தனியாக அரசாங்கம் அமைக்கும் ஆற்றல் இல்லை. அதற்காக அனைவரும் ஒரு பொதுவான உடன்பாட்டுக்கு வர வேண்டியுள்ளது. அந்தப் பணிக்காகவே கூட்டு எதிர்க்கட்சியானது ஏனைய கட்சிகளை ஒன்றிணைத்து வருகிறது. கொழும்புக்கு மேலதிகமாக மாத்தறையிலும் ஒரு பாரிய பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. கம்பஹா ஜா-எல பகுதியிலும் மற்றுமொரு பெரிய கூட்டம் நடைபெறவுள்ளது. இது தவிர, தற்போது கூட்டு எதிர்க்கட்சியினர் நாடளாவிய ரீதியில் பயணிக்கத் தொடங்கியுள்ளனர் வஜிர கூறினார்.

சஜித் விரும்ப வில்லை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற சஜித் பிரேமதாச உடன்பட்டாலும், பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்படும் போது, அவற்றை நிறுத்திவிட்டுத் தானே இதனை வழிநடத்தப் போவதாக சஜித் கூறியுள்ளார். இது குறித்து முடிவெடுக்க ஐக்கிய தேசியக் கட்சி ஒரு குழுவை அமைத்தது.

ஆனால், சஜித் குறைந்தபட்சம் அந்தக்குழுவுடன் கூடப் பேசவில்லை. இதிலிருந்து தெரிவது என்னவென்றால், ஒன்றிணைவதற்குச் சஜித் தெளிவான பங்களிப்பை வழங்கவில்லை என்பதாகும். கட்சியின் ஓரிருவருடன் பேசினால் முழுக் கட்சியையும் கைப்பற்றி விடலாம் என்று சஜித் நினைக்கிறார். இத்தகைய முதிர்ச்சியற்ற நடத்தைகளால் இரு கட்சிகளுக்கும் இடையே தற்போது நிலவும் ஒத்துழைப்பும் இல்லாமல் போகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் ஒத்துழைத்தே பயணிக்கிறது என்பது தற்போது முற்போக்கு மக்களுக்கு நிரூபணமாகி வருகிறது. திறைசேரி திருட்டு குறித்து ஒருநாள் விவாதத்தை எதிர்க்கட்சிகள் கோரிய போது, அரசாங்கம் அதனை நிராகரித்தது. பிரதான எதிர்க்கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி அந்த விவாதத்தை வலியுறுத்திப் போராடியிருக்க வேண்டும்.

ஆனால், அவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர். முக்கிய மதகுருமார்களுக்கு எதிராகவும் தற்போது அரசாங்கம் ஒரு வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர்கள் ரணிலிடம் தெரிவித்தனர்.

பீரிஸ் யாழுக்கு சென்றது ஏன்?

ரணில் சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்ற நாள் முதல் கூட்டு எதிர்க்கட்சியின் பணிகளைத் தன் தோளில் சுமந்து செயற்பட்டவர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ். அவர் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

அதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இதன்போது தனது இல்லத்திற்கு வருமாறு சுமந்திரனிடமிருந்து ஜி.எல். பீரிஸுக்கு அழைப்பு கிடைத்தது. அவரது கட்சியின் தலைவர்களைச் சந்திப்பதே அதன் முக்கிய நோக்கமாக இருந்தது. இதில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

மாகாண சபைத் தேர்தலைத் தாமதமின்றி நடத்துவதே அந்தச் சந்திப்பின் முக்கிய சாராம்சமாக இருந்தது. இது வடக்கு மக்களின் மிக முக்கியமான கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்ற வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கின் அனைத்துப் பகுதிகளும் இணைந்து செயற்பட அங்கு தீர்மானிக்கப்பட்டது.

‘மாகாண சபை நடவடிக்கைகளுக்காகப் பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியை எப்படிச் செலவிடுவது என்பதை இன்று ஆளுநர் தனிப்பட்ட ரீதியில் தீர்மானிக்கிறார். ஆளுநர் என்பவர் ஜனாதிபதியின் பிரதிநிதி. எனவே அங்கே ஜனநாயகம் இல்லை.’

இதேவேளை, ‘ஜப்னா மொனிட்டர்’ (துயககயெ ஆழnவைழச) ஆசிரியர் அருநிலியன் மகாலிங்கம் இந்த விஜயத்தின் போது ஜி.எல்.க்கு இரவு விருந்து அளித்தார். இதில் யாழ் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் கலந்துகொண்டனர்.

தெற்கின் சிவில் அமைப்புகளுடன் தொடர்பு கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அங்கு சுட்டிக்காட்டினர். வடக்கு மற்றும் தெற்கு இளைஞர்களை ஒன்றிணைக்க ஒரு வேலைத்திட்டம் அவசியம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது. கொழும்பிலுள்ள சிவில் அமைப்புகளுடன் ஆலோசித்து இந்தப் பணிகளை முன்னெடுப்பதாக ஜி.எல். தெரிவித்தார்.

யாழ் விஜயத்தின் போது ஜி.எல். மற்றுமொரு விசேட சந்திப்பிலும் கலந்துகொண்டார். அது யாழ் ஆயர் கலாநிதி பேர்னார்ட் ஞானப்பிரகாசம் உடனான சந்திப்பாகும். யாழ் ஆயர் இல்லத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. ஜி.எல். எழுதிய ‘இலங்கையின் சமாதானச் செயல்முறை’ என்ற நூல் இதன்போது ஆயரிடம் வழங்கப்பட்டது.

 

Share.
Leave A Reply