திராவிட கட்சிகளைப் பின்னுக்குத் தள்ளி விஜய் வரலாறு படைத்தது எப்படி? களத்தில் என்ன நடந்தது?
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக இரு பிரதான திராவிட கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் அவரைப் பின்னுக்குத் தள்ளி தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு முன்னிலை வகித்து வருகிறார். அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த பலரும் தத்தமது தொகுதிகளில் பின்தங்கியுள்ளனர்.
தற்போதைய நிலவரம் தமிழ்நாட்டில் மக்கள் மாற்றத்தை விரும்பினார்கள் என்பதையே காட்டுவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தமிழ்நாட்டில், 76 ஆண்டுகள் வரலாறு கொண்ட திமுகவையும் 54 ஆண்டுகள் பழமையான அதிமுகவையும் பின்னுக்குத் தள்ளி மூன்று ஆண்டுகளுக்கும் குறைவாகவே வயதான ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட முடிவுகளை இந்த தேர்தல் வழங்கும் அளவுக்கு தமிழக அரசியல் களத்தில் என்ன நடந்தது? விஜய் இதைச் சாத்தியமாக்கியது எப்படி?

சமீபத்திய நிலவரங்களைப் பார்க்கையில், தமிழக மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்து உள்ளனர் என்பதைப் பார்க்க முடிவதாகக் கூறுகிறார் அரசியல் விமர்சகர் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
“இந்தத் தேர்தலில் மக்கள் சித்தாந்த அடிப்படையிலோ பிரச்னைகளை மையமாகக் கொண்டோ வாக்களித்ததாகக் கூற முடியாது. திராவிட ஆதிக்கத்தில் இருந்த தமிழக அரசியலில் புதுமை தேவை என்பதை அடிப்படை நோக்கமாகக் கொண்டே வாக்களித்து இருப்பதாகத் தோன்றுகிறது.
குறிப்பாக, வெளியில் பெரிதாகத் தென்படாத ஆட்சி எதிர்ப்பு மனநிலை இருந்திருப்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. இது வெறுமனே திராவிட அரசியலுக்கு எதிரான மனநிலை என்றும் கூறிவிட முடியாது.
ஏனெனில், அதிமுக கணிசமான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம், திமுக மீது குறிப்பாக இருந்த எதிர்ப்புணர்வை மக்கள் இந்தத் தேர்தலில் வெளிப்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது,” என்று அவர் விளக்கினார்.
தமிழ்நாட்டின் சமீப கால சட்டப்பேரவைத் தேர்தல் வரலாற்றில் எதிர்பார்க்கப்படாத முடிவுகள் இந்தத் தேர்தலில் வெளிப்பட்டு வருவதாகவும் அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
விஜய் மற்றும் அவரது கட்சி இந்த முறை முடிவுகளைத் தீர்மானிப்பதில் முக்கியக் காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இருந்தாலும், இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாகக் கூறுகிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.
இளைஞர்கள் மற்றும் பெண்களின் ஆதரவு தவெக-வுக்கு கணிசமாக இருப்பதும், திமுக, அதிமுகவின் வாக்குகளில் ஒரு பகுதி அவர் பக்கமாகத் திரும்பும் எனவும் அரசியல் நிபுணர்கள் பலரால் ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், இவ்வளவு பெரிய வெற்றியைத் தரும் அளவிலான ஆதரவு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை என்கிறார் பத்திரிகையாளர் திவ்யா.
மேலும், “திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்குக் கிடைக்கும் வாக்குகளைப் பார்த்தோமானால், ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஆதரிக்கும் மக்கள், இரு திராவிட கட்சிகளையும் காலங்காலமாக ஆதரித்து வருவோரின் வாக்குகள், ஆட்சி நிர்வாகத்தில் ஒரு சீரான தொடர்ச்சி வேண்டுமெனக் கருதுவோரின் வாக்குகள் எனப் பல தரப்பில் இருந்து கிடைக்கும் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டது.
ஆனால், தமிழக வெற்றிக் கழகத்தைப் பொறுத்தவரை பெரும்பாலும் விஜயின் ஆளுமையை மட்டுமே வைத்து இவ்வளவு பெரிய ஆதரவைப் பெற்றுள்ளது. மக்களிடையே இருந்த திமுக எதிர்ப்பு மனநிலையின் விளைவுகளை விஜய் அறுவடை செய்திருக்கிறார் என்றாலும், அதைத் தாண்டி, எவ்வித அரசியல் பின்னணியும் இல்லாத, முற்றிலும் புதிய கட்சியைக் கொண்டு, தவெக பெற்றுள்ள இந்த வெற்றி முற்றிலும் ஒரு நட்சத்திர ஆளுமைக்குக் கிடைத்திருப்பதாகவே பார்க்க வேண்டியுள்ளது,” என்று கூறுகிறார் பத்திரிகையாளர் திவ்யா.
திமுக சுமார் 60 தொகுதிகளில் புதுமுகங்களை வேட்பாளர்களாக நிறுத்தியது மற்றும் செந்தில் பாலாஜி போல 24 இடங்களில் அரசியல் தலைவர்கள் தொகுதி மாறிப் போட்டியிட்டனர். இது, தனது ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடையே நிலவுகிறது என்பதை திமுக முன்பே அறிந்திருந்தது என்பதைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
“ஏற்கெனவே இருந்த சட்டமன்ற உறுப்பினர்களுடைய செயல்பாடுகள் மீது அதிருப்தி நிலவியதை அவர்கள் உணர்ந்து இருந்ததையும் அதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதையும் புரிந்துகொள்ள முடிகிறது,” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் மாலன்.
விஜய் தனது கடைசி பரப்புரையில் பேசும்போது, “உங்களிடம் கைகூப்பிக் கேட்டுக் கொள்கிறேன். வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து, ஸ்டாலினிடம் இருந்து தமிழகத்தையும் ஜனநாயகத்தையும் காப்பாற்றுங்கள்” என்று உணர்ச்சிமயமாகப் பேசியிருந்தார்.
அதன் தாக்கம் வாக்குப்பதிவில் எதிரொலித்து இருப்பதாகக் கூறும் மாலன், 1967, 1977, 1991 ஆகிய தேர்தல்களில் மக்கள் வாக்களித்ததைப் போலவே இந்த முறையும் புதிய தலைமையை எதிர்பார்த்து புத்துணர்ச்சியுடன் வாக்களித்து இருப்பதைக் காண முடிவதாகக் கூறுகிறார்.
தவெக-வை பொறுத்தவரை, விஜய் குறைந்த இடங்களில் மட்டுமே பிரசாரம் மேற்கொண்டார். அதிலும், காரைக்குடி போன்ற பகுதிகளில் சிறிது நேரம் மக்கள் முன்பு வந்துவிட்டு, எதுவும் பேசாமல் சென்றிருந்தார்.
அப்படியிருந்தும்கூட அவருக்கு இவ்வளவு பெரிய ஆதரவு கிடைத்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டியுள்ளது. இது மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகக் காட்டுவதாக மாலன் கூறுகிறார்.
குறிப்பாக, விஜய் தனது பிரசாரங்களில் தொடக்கத்தில் இருந்தே ஒரு விஷயத்தை தெளிவாகக் குறிப்பிட்டு வந்தார். தனது கொள்கை எதிரி பாஜக எனவும் அரசியல் எதிரி திமுக எனவும் கூறிய விஜய், “இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் தவெகவுக்கும்தான் போட்டியே இருக்கப் போகிறது,” என்பதை அழுத்தமாகக் குறிப்பிட்டு வந்தார்.
களத்தில் செயலாற்றியதை விடவும் துடிப்புடன் இளைய தலைமுறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூக ஊடகங்களில் தவெக முழு வீச்சில் இயங்கி வந்ததாகவும் அதில் இளைஞர்களின் ஆதரவைப் பெருமளவில் பெற்றதாகவும் மூத்த பத்திரிகையாளர் மாலன் குறிப்பிடுகிறார்.
அவரது கருத்தை ஆமோதிக்கும் வகையில் பேசிய ராமு மணிவண்ணன், “இந்தத் தேர்தலில் இளம் தலைமுறையினர் மற்றும் பெண்களின் வாக்கு வங்கி, முடிவுகளை நிர்ணயிப்பதில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. விஜய் நேரடியான பிரசாரத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தினார் என்று கூறுவதைவிட, அவரது தாக்கம் சமூக ஊடகங்களின் வாயிலாக இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரிதாக இருந்தது எனக் கூறுவதே சரியாக இருக்கும்.
மகளிர் உரிமைத் திட்டம், புதுமைப்பெண் திட்டம் எனப் பல்வேறு வகையில் திமுக பெண்களின் ஆதரவைப் பெறுவதற்கு முயன்றது. ஆனால், விஜய் அதை முறியடித்து மகளிர் ஆதரவைத் தன் பக்கமாக ஈர்த்துள்ளார். முதல் தலைமுறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தவல்ல பிரிவுகளாகப் பார்க்கப்பட்டன. அந்த வாக்குகளை விஜய் முழுமையாகத் தன் பக்கம் ஈர்த்திருப்பதை இது காட்டுகிறது,” என்று கூறுகிறார் ராமு மணிவண்ணன்.
இந்தத் தேர்தலில், விஜயின் வருகை திமுகவுக்கு அப்படிக் கிடைத்து வந்த பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை வாக்குகளைப் பிரித்து இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
விஜய் சென்னையின் நந்தனத்தில் தேர்தல் பரப்புரையில் பேசியபோது, மதச்சார்பற்ற சமூக நீதியே தனது கொள்கை எனவும் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான நபராகவே தான் எப்போதும் இருக்கப் போவதாகவும் கூறினார்.
அந்த வகையில் அவர் திமுக-வுக்கு பலமாக இருந்த சிறுபான்மை வாக்குகளைப் பிரித்து, தவெக பக்கம் ஈர்த்துவிட்டதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.