இலங்கையில் கடந்த காலத்தில் நடைபெற்ற எக்கச்சக்க ராணுவ நடவடிக்கைகளை அவற்றிக்கு சூட்டப்பட்ட ஆபரேஷன் பெயர்களை வைத்தே பலரும் அடையாளம் கண்டுகொள்வார்கள். பெயர்களை சொன்னாலே அது எப்போது நடைபெற்றது, எங்கே நடைபெற்றது, என்று பலர் அறிந்திருப்பார்கள். அந்த ஆபரேஷன்கள் பற்றி மீடியாக்களிலும் விபரங்கள் விலாவாரியாக வெளிவந்திருக்கும். இவை அநேகமாக பெரிய ராணுவ ஆபரேஷன்கள்.

ஆனால், கடந்த 1996-ம் ஆண்டு ஆரம்ப மாதங்களில் ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் (Operation Balanced Style) என்ற பெயரை இலங்கையில் விரல்விட்டு எண்ணும் எண்ணிக்கையில் உள்ளவர்களைத் தவிர வேறு யாரும் கேள்விப்பட்டதேயில்லை.

இந்த ஆபரேஷன் பற்றி இலங்கையில் அப்போது நடைபெற்ற எந்தவொரு செய்தியாளர் மாநாட்டிலும் பிரஸ்தாபிக்கப்பட்டதில்லை; எந்தவொரு ராணுவ செய்திக் குறிப்பிலும் இடம் பெற்றதுமில்லை.

அமெரிக்கா இலங்கை விவகாரங்களில் ராணுவ ரீதியாக நேரடியாக தலையிடுவதில்லை என்பது போன்ற ஒரு தோற்றம் அப்போதும் இருந்தது. இப்போதும் உள்ளது. அதாவது, 1996-ல் இலங்கையில் அமெரிக்க ராணுவத்தால் திட்டமிடப்பட்ட ஆபரேஷனுக்கு அமெரிக்க ராணுவத்தால் வைக்கப்பட்ட பெயர்தான் ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல்.

இதை 1996ம் ஆண்டின் ஆரம்பத்தில் யாராவது சொல்லியிருந்தால் பலர் சிரித்திருப்பீர்கள். இலங்கையின் ஊடகங்களில் இதுபற்றி எதுவும் வெளிவரவில்லை என்று கூறியதையாவது ஓரளவுக்கு நியாயப்படுத்தலாம். காரணம், அப்போது இலங்கையில் செய்தி தணிக்கை முறை கொஞ்சம் அப்படி இப்படியாக இருந்தது.

ஆனால், இதில் சம்பந்தப்பட்ட அமெரிக்காவில் கூட ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் பற்றி யாருக்கும் தெரிந்திருக்கவில்லை! அதிலிருந்து, இது எந்த அளவுக்கு ரகசியமான ராணுவ ஆபரேஷன் என்பதை புரிந்து கொள்ளலாம்.

அமெரிக்கர்கள் திட்டமிட்டதை விடுங்கள். இலங்கை மண்ணில் காலடி எடுத்து வைத்த பின்னர்கூட அமெரிக்க ராணுவ செய்திக் குறிப்புகள் எதிலுமே இலங்கையில் இவர்கள் ஒரு ஆபரேஷனை நடத்தப் போகிறார்கள் என்பதாக எந்தவித பிரஸ்தாபமும் இருக்கவில்லை.

ஒரு வேளை ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைலில் ஈடுபடுத்தப்பட்ட அமெரிக்க ராணுவத்தினரில் யாராவது ஒருவர் இலங்கை மண்ணில் இறந்திருந்தால் அப்போது நிலைமை சங்கடமாகப் போயிருக்கும்! இறந்தவரின் குடும்பத்தினருக்கே கூட “Killed in unspecified operation in an overseas nation” என்றுதான் சொல்லவேண்டிய நிலை வந்திருக்கும்.

இந்த இடத்தில் ஆஃப்-தி-ரிக்கார்ட் ஆக ஒரு விஷயம்.

நாங்கள் சொன்னதுபோல இக்கட்டான சூழ்நிலை அமெரிக்காவுக்கு இலங்கை மண்ணில் ஏற்பட இருந்தது. அது நடந்திருந்தால் கதை கந்தலாகி போயிருக்கும். அந்த ஆபத்திலிருந்த அமெரிக்கா மயிரிழையில் தப்பிக்கொண்டது என்பதைத் தவிர வேறு விபரங்கள் எதையும் பகிரங்கமாக கூறமுயாமல் உள்ளது சூழ்நிலை.

அமெரிக்காவின் ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல், இலங்கை ராணுவத்திற்கு, இலங்கையில் வைத்து சில பயிற்சிகள் கொடுப்பது.

அமெரிக்கா கொள்கை அடிப்படையில் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்த பின்னர் பயிற்சியை இலங்கைக்கு உள்ளேயா, அல்லது இலங்கைக்கு வெளியே உள்ள ஆசிய நாடு ஒன்றிலுள்ள அமெரிக்க ராணுவத் தளத்தில் வைத்து கொடுப்பதா என்பதில் கொஞ்சம் இழுபறி இருந்ததாக சொல்லப்படுகிறது. இறுதியில் இலங்கையில் வைத்து கொடுப்பது என முடிவு செய்யப்பட்டதாம்.

காரணம், ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் பயிற்சியில் திட்டமிடப்பட்டிருந்த Mapping techniques, Radio work, Firing Demonstration ஆகியவற்றுடன் Military Field Engineering tacticsம் இருந்ததால், பயிற்சியை இலங்கைக்கு உள்ளேயே வைத்து கொடுப்பதாக முடிவாகியது.

என்ன காரணமென்றால் Military Field Engineering tactics பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர்கள் தொடர்பான Helipad construction, Proper helicopter landing and makeup precise pickup போன்ற பயிற்சிகளும் இருந்ததால், இலங்கையின் புவியியல் மண்தன்மை (Geographical & Soil Condition)யில் அவற்றைச் செய்வதுதான் முறையான பயிற்சியாக இருக்கும்.

மற்றொரு ஆசிய நாட்டு அமெரிக்க ராணுவ தளத்தில் இருக்கும் புவியியல் மண் அமைப்பு, மண் செறிவு போன்றவை இலங்கையில் இருந்து வேறுபட்டவை என்பதால் அங்கே வைத்து பயிற்சியை கொடுத்துவிட்டு, இலங்கையில் செயல்படுத்துவது சரியாகப் பொருந்திவராது.

ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல் பயிற்சி இலங்கையில் வைத்து கொடுப்பது என்று முடிவாகியவுடன், அதை இலங்கை விமானப்படைத் தளம் ஒன்றில் வைத்துக் கொடுப்பதாக முடிவு செய்தார்கள். இலங்கை விமானப்படையின் விமானத்தளங்களின் பட்டியலில் இருந்து அமெரிக்கா தேர்ந்தெடுத்த விமானத்தளம், தெற்கு இலங்கையில் உள்ள வீரவில என்ற இடம்.

இடம் முடிவாகியதும் Operation Balanced Style-க்காக முதலில் அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த சிறப்பு ஏர்போர்ன் படைப்பிரிவை (Green Beret) சேர்ந்த 12 சிறப்பு பயிற்சியாளர்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவர்கள் வழமையான ராணுவ பாணியில் இல்லாமல், சாதாரண உல்லாசப் பயணிகள் போல, பயணிகள் விமானத்தில் கொழும்பு போய் இறங்கினார்கள்.

இலங்கை ராணுவத்துக்கு அமெரிக்கா கொடுத்த பரிசாக அந்த ஆபரேஷன், இலங்கை அரசு அமெரிக்க ராணுவ செயல்பாடுகளுக்கு ஆசியாவில் பகிரங்கமாக ஆதரவுக்கரம் நீட்டி சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கைவரை வந்து சேர்ந்தது.

அப்படி இலங்கை அரசு அமெரிக்காவுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய சந்தர்ப்பம் எது?

ஆகஸ்ட் 1990-ல் தொடங்கிய வளைகுடா யுத்தத்தின்போது அமெரிக்க விமானப்படை விமானங்களுக்கு ஆசியாவில் எரிபொருள் நிரப்ப (refueling) தயங்காமல் அனுமதித்த முதலாவது ஆசிய நாடு இலங்கைதான் என்பதே இலங்கை நீட்டிய ஆதரவுக்கரம்.

அதற்கு கைமாறாக 6 ஆண்டுகளின் பின்னர் அமெரிக்கா கொடுத்ததுதான், இந்த ஆபரேஷன் பேலன்ஸ் ஸ்டைல்!

(தொடரும்)

Share.
Leave A Reply

Exit mobile version