திமுகவில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் ஒரு முடிவோடுதான் இருக்கிறார்கள் போல.. அடுத்த கூட இருக்கும் கட்சி பொதுக்குழுவில் ஸ்டாலினுக்காக உரத்து குரல் கொடுப்பதற்கான வியூகங்களை இப்போதே தொடங்கிவிட்டார்களாம்..

திமுகவில் இருந்து அழகிரி டிஸ்மிஸ் செய்யப்பட்டதைத் தொடர்ந்து இனி எல்லாமே ‘தளபதி’ ஸ்டாலின்தான் என்ற நிலை உருவானது. லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்த பின்னர் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அப்போதும்கூட ஸ்டாலினின் தலைமைக்கு எதிராக கலகக் குரல் எதுவும் வந்துவிடக் கூடாது என்றே கவனம் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் மு.க. அழகிரி திமுகவில் சேருவதற்கான முனைப்புகளைக் காட்டி வருகிறார்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளையும் மு.க. அழகிரி வெற்றிகரமாக நடத்தி விட்டார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் ஸ்டாலின் ஆதரவாளரான பெ.வீ. கலியாணசுந்தரம் புதிய கலகக் குரலை எழுப்பினார்.

பரபரப்பு கோரிக்கைகள் தமது அமைப்புச் செயலர் பதவியை ராஜினாமா செய்த கலியாணசுந்தரம், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்; கனிமொழி, தயாநிதி, ஆ.ராசாவை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் கட்சி தலைமையிடம் வலியுறுத்தி இருந்தார்.

ஆனால் இதை ஏற்க மறுத்த கருணாநிதி, உடனே கலியாணசுந்தரத்தை சஸ்பென்ட் செய்து அந்த இடத்துக்கு தமது ஆதரவாளரான ஆர்.எஸ். பாரதியை நியமித்துவிட்டார். ஆனால் இந்த விவகாரத்தை இத்துடன் விட்டுவிடுவதாக இல்லை ஸ்டாலின் ஆதரவாளர்கள்.

விரைவில் திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.. இந்த பொதுக் குழுவில் பெரும்பான்மையோர் ஸ்டாலின் ஆதரவாளர்கள்தான்.. அதனால் ‘ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்; கனிமொழி, தயாநிதி, ராசாவை ஒதுக்க வேண்டும்’ என்ற கருத்தை ஒட்டுமொத்தமாக வலியுறுத்த வேண்டும் என்று ஸ்டாலின் வீட்டில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாம்.

இந்த உத்தரவை தலைமேல் ஏற்று சிரமம்பாராது எப்படி செய்து முடிப்பது என்று விடிய விடிய ஸ்டாலினின் வடமாவட்ட வலது, இடதுகரங்கள் ஆலோசனை நடத்தி உள்ளன. தற்போது ஸ்டாலின் ஆதரவு முகாமில் பொதுக்குழுவில் இப்படித்தான் பேச வேண்டும் என்று கட்டளைகள் பறந்து கொண்டிருக்கிறதாம்.

பொதுக்குழு தேதியே இன்னும் அறிவிக்கலையேப்பா!

Share.
Leave A Reply

Exit mobile version