;கடற்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காதலர்களை மிரட்டி பணம் பறித்ததுடன், அந்த இளம்பெண்ணிடம் அத்துமீறிய கடலோர பாதுகாப்புப் பிரிவு காவலரை அதிரடியாக பணிநீக்கம் செய்திருக்கிறது புதுச்சேரி காவல்துறை.

 

யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்குட் பட்ட காரைக்கால் பகுதியும் சுற்றுலா சார்ந்த இடமாக இருப்பதால், பெரும்பாலும் அதன் தெருக்கள் அயல்நாட்டு சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும்.

வார இறுதி நாள்களில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அயல் மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இங்கு படையெடுப்பார்கள்.

இப்படி வரும் அயல் மாநில வாகன எண்களைப் பார்த்ததும் உற்சாகமாகிவிடும் சில காவலர்கள், எதையாவது சொல்லி அவர்களை மிரட்டிப் பணம் பறிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறும்.

ஒருவேளை உள்ளூர்காரர்கள் என்று தெரிய வந்துவிட்டால், `உங்க நல்லதுக்கு தான் சொல்றேன்’ என்று தடாலடியாக சரண்டராகி விடுவார்கள்.

அப்படி இருட்டில் நடந்த ஒரு சம்பவம்தான், பாதிக்கப்பட்டவர் களின் உறுதியான போராட்டத்தால் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

‘நீங்க புருஷன், பொண்டாட்டியா?

கடந்த 2024 செப்டம்பர் 20-ம் தேதி காலை காரைக்கால் கடற்கரையில் காதலர்கள் இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அவர்களிடம் சென்ற கடலோர பாதுகாப்புப் பிரிவு காவலர் ராஜ்குமார், ‘`நீங்க ரெண்டு பேரும் யாரு… புருஷன் பொண்டாட்டியா? உங்களுக்குக் கல்யாணம் ஆயிடுச்சா..?’’ என்று அடுக்கடுக்காகக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

மிரண்டு போன இருவரையும் அருகில் இருந்த கடலோரப் புறக்காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்ற காவலர் ராஜ்குமார், மீண்டும் அதேபோல மிரட்டியிருக்கிறார்.

தொடர்ந்து, அந்த இளைஞரை மட்டும் தண்ணீர் பாட்டில் வாங்கி வருமாறு கடைக்கு அனுப்பியுள்ளார். அதன்பிறகு, தனியறையில் பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம், அத்துமீறிய செயலில் ஈடுபட்டிருக் கிறார்.

அதற்குள் தண்ணீர் பாட்டிலுடன் இளைஞர் வந்துவிட, `போனால் போகுதுனு உங்கள இப்போ விடறேன். கையில் இருக்கற பணத்தை கொடுத்துட்டுப் போங்க’ என்று மிரட்டி பணத்தை வாங்கிக் கொண்டு, இருவரையும் அனுப்பியிருக்கிறார்.

அதற்கடுத்து சில மணி நேரங்களில் அங்கு அரங்கேறிய ‘ட்விஸ்ட்’ தான், அந்தக் காவலர் நினைத்துக்கூடப் பார்க்காதது.

கடுமையான வாக்குவாதம்… பதிவான வீடியோ!

இளைஞர் ஒருவர், காதலர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு காவல் நிலையத்தில் இருந்த காவலர் ராஜ்குமாரிடம் சென்று, “இவங்க ரெண்டு பேரையும் எதுக்கு மிரட்டுனீங்க?’’ என்று கேட்க, ராஜ்குமார்,

‘`நீங்க யாரு..?’’ என்கிறார் அதிகாரத்துடன். “நான் அந்தப் பொண்ணோட அண்ணன். என்கிட்ட சொல்லுங்க’’ என்று அவர் கூற, வெலவெலத்துப் போனார் ராஜ்குமார்.

“உள்ளே வந்து உட்காருங்க’’ என்று அவரிடம் சரண்டராக முயற்சி செய்தார்.

அதையடுத்து அங்கு வந்த அந்த இளைஞரின் அப்பாவும், அம்மாவும், `எங்க பசங்க உக்காந்து பேசிக்கிட்டுதானே இருந் தாங்க? ஒருவேளை அவங்க மேல அக்கறை இருந்துச்சினா அவங்களை கண்டிச்சு அனுப்பி இருக்கணுமே தவிர, மிரட்டிப் பணம் வாங்கியிருக்கக் கூடாது.

எங்க பொண்ணுகிட்ட நீங்க எப்படி இப்படி யெல்லாம் நடந்துக்கலாம்..?’ என்று கோபத் துடன் கடுமையாக வாக்குவாதம் செய்தனர். இவை அனைத்தையும் அவர்கள் வீடியோ எடுப்பதைப் பார்த்து மிரண்டு போன காவலர் ராஜ்குமார், அந்தக் காதலர் களை அங்கிருந்து போகுமாறு மீண்டும் மிரட்டுவதும் வீடியோவில் பதிவாகின.

வைரலான வீடியோ, தலைமறைவான காவலர்!

இந்தக் காட்சிகள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரலாக, தலைமறைவானார் காவலர் ராஜ்குமார். அதன் தொடர்ச்சியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அவர், தற்போது மொத்தமாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

இது தொடர்பாக நம்மிடம் பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர், “காதலர்கள் என்று தெரிந்தாலே ராஜ்குமார் அத்துமீறலில் ஈடுபட்டு விடுவார்.

கடந்த 2017-ம் ஆண்டு ஒரு காதல் ஜோடியை மிரட்டி பணம் பறித்திருக்கிறார். அதன்பிறகு அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்து ஆபாசமாகப் பேசியிருக்கிறார்.

அதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படை யில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேபோல 2018-ம் ஆண்டு ஒரு காதல் ஜோடியை மிரட்டிப் பணத்தையும், செல்போனையும் பிடுங்கிக் கொண்டார்.

அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது மேலும் ஒரு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகுதான் கடலோரக் காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், அங்கும் அவர் தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்தார். அன்றைய தினம் அந்த இளைஞரை தண்ணீர் பாட்டில் வாங்க அனுப்பிவிட்டு,

அந்தப் பெண்ணில் கழுத்தில் கை வைத்து `தாலி இருக்குதா’ என்று அத்துமீறியிருக்கிறார். அதையடுத்து எங்கள் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், `அவர்களிடம் பணம் வாங்கவில்லை’ என்று சொன்னார்.

ஆனால், அன்றைய தினம் அந்த இளைஞரிடம் இருந்து அவர் பணம் பறித்ததை `கூகுள் பே’ காட்டிக் கொடுத்துவிட்டது.

அந்த விசாரணை மற்றும் ஆதாரங்களின் அடிப் படையில்தான் அவர் டிஸ்மிஸ் செய்யப் பட்டிருக்கிறார்” என்றார் விரிவாக.

முன்னுதாரணமாக… முதல்முறையாக!

பொதுவாக, காவல்துறையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பணியிடை நீக்க நடவடிக்கைகள் இருக்குமே தவிர, பணி நீக்கம் என்பது அரிதினும் அரிதாகவே நிகழும்.

பணியிடை நீக்கக் காலத்தில் விசாரணை நடக்கும் போதும்கூட சம்பளத்தில் 50% பிழைப் பூதியமாகப் பெறுவது, விசாரணையில் பெரும்பாலும் காக்கிகள் காப்பாற்றப் பட்டு மீண்டும் பணிக்குத் திரும்புவது, பதவி உயர்வு பெறுவது என… இந்தக் காட்சிகளே இங்கு வாடிக்கை.

ஆனால், முன்னுதாரணமாக முதல்முறையாக இந்த வழக்கில் விரைவாக துறைரீதியான விசாரணை முடிக்கப்பட்டு,

அதிரடியாக பணிநீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்கள் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.</

குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டன!

புதுச்சேரி காவல்துறை டி.ஐ.ஜி சத்திய சுந்தரத்திடம் இதுகுறித்துக் கேட்டபோது, “இந்த சம்பவத்தில் ராஜ்குமார் மீது வைக்கப் பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும், எங்கள் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

அதனடிப்படையில்தான் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நீதி மன்றத்திலும் தனியாக வழக்கு நடைபெறும்” என்றார்.

காவல்துறை எடுத்திருக்கும் நடவடிக்கையை, நீதிமன்றமும் உறுதிப்படுத்துமா?!

Share.
Leave A Reply

Exit mobile version