கொழும்பு, இலங்கை.

இலங்கையில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் (இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அனைத்து இனக்கலவரங்களும், மாறி மாறி ஆட்சியை கைப்பற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலங்களில்தான் நடந்தன என்பது உங்களுக்கு தெரியுமா?).

இலங்கை அரசுக்குச் சொந்தமான (பெயரைப் பிரசுரித்தால் சட்டரீதியாக சிக்கல் வரக்கூடிய) கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் ரகசியமான சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மொத்தம் 8 பேர் கலந்து கொண்ட சந்திப்பு அது. 8 பேரில் 3 பேர் அன்றைய இலங்கை அரசின் அமைச்சர்கள் (மூன்று பேரும் இப்போது உயிருடன் இல்லை)

அமச்சர்களைத் தவிர்த்து விட்டால், மிகுதியுள்ள 5 பேரில் இருவர் அங்கிருந்த அமைச்சர் ஒருவரின் அமைச்சில் வேலைசெய்த செல்வாக்கான உயரதிகாரிகள். ஒருவர் கொழும்பிலும், அதன் தெற்கேயுள்ள மாத்தறை என்ற நகரிலும் அலுவலங்கள் வைத்திருந்த பில்டிங் கன்ட்ராக்டர்.

மற்றய இருவரும் சாதாரண ஆட்கள்.

சாதாரண ஆட்கள் என்றால், உங்களையும் எங்களையும் போன்றவர்கள் அல்ல. லோக்கல் ரௌடிகள்.

இரண்டு ரௌடிகளில் ஒருவரின் பெயர் கொணவாலா சுனில். மற்ற நபர், பெயர் சொல்லுமளவுக்கு பிரபலமற்ற, சுனிலின் அடியாள்.

அரசு கெஸ்ட் ஹவுஸில் நடைபெற்ற ரகசியச் சந்திப்பில் அவர்கள் வைத்திருந்த திட்டம் ஒன்று பற்றி அலசப்பட்டது. திட்டத்துக்கு அவர்கள் சூட்டியிருந்நத பெயர் – ஆபரேஷன் ‘பைனல் சொல்யூஷன்’.

இறுதித் தீர்வு.

தெற்கு இலங்கையிலும், தலைநகர் கொழும்புவிலும் இனக்கலவரம் ஒன்றை ஏற்படுத்தி, அங்கு வசிக்கும் தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தி, அவர்களை யாழ்ப்பாணத்துக்கு ஒன்றுமில்லாமல் துரத்தவேண்டும் என்பதுதான் ஆபரேஷன் ‘பைனல் சொல்யூஷன்’ திட்டத்தின் சாராம்சம்.

முதலில், அங்கு இருந்த அமைச்சர்களில் ஒருவர், ஒரு உத்தரவாதம் கொடுத்தார். “இனக்கலவரத்தை ஏற்படுத்தும் திட்டத்துக்காக அரசு எந்திரம் பயன்படுத்தப்படும். தமிழர்கள் இருக்கும் வீடுகளின் முகவரிகள், தமிழர்களுக்கு சொந்தமான வியாபார நிலையங்களின் விபரங்கள் எல்லாம் பட்டியலிட்டு தரப்படும். இதற்கு நான் பொறுப்பு” என்றார் அவர். (பின்னாட்களில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார் இவர்)

லோக்கல் ரௌடி சுனிலும் அவரது பாதாள உலக அடியாட்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை கொலை செய்யவேண்டும் என்றும், சிறைக்கு உள்ளே அடியாட்கள் நுழைவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கலந்து கொண்ட அமைச்சர்களில் ஒருவர், மற்ற அமைச்சரிடம் “இந்த விஷயம் big man-க்கு தெரியுமா?” என்று கேட்டார்.

Big man என்று குறிப்பிடப்பட்டது, அப்போதிருந்த இலங்கையின் ஜனாதிபதியை. அன்றைய ஜனாதிபதி – ஜே.ஆர்.ஜெயவர்த்தனே

“இப்படி ஒரு ஏற்பாடு நடப்பது தெரியும். ஆனால் என்ன திட்டம் என்பது சொல்லப்படவில்லை. எப்போது செயற்படுத்தப்படும் என்பதும் சொல்லப்படவில்லை”

“கடைசி நேரத்தில் அவரால் ஏதாவது இடையூறு ஏற்படுமா?”

“எதுவும் செய்யமாட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஒருவேளை big man நமது திட்டத்துக்கு இடையூறு செய்தால், ராணுவத்தின் ஒரு பிரிவு அவருக்கு எதிராகத் திரும்பும் என்பது அவருக்குப் புரியும்”

“அதற்கான ஏற்பாடுகள்?”

“இதோ இவர்தான் அந்த ஏற்பாடுகளைக் கவனிக்கிறார்” என்று அதுவரை பேசாமல் இருந்த அமைச்சர் கைகாட்டப்பட்டார்.

இப்போது, முதல் தடவையாக வாயைத் திறந்தார் அந்த அமைச்சர். “தேவை ஏற்பட்டால், big man-ன் வீட்டை சூழ்ந்து கொண்டு அவரை அங்கிருந்து நகரமுடியாதபடி செய்துவிட ராணுவத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது” என்றார் அவர். (இவரும் பின்னாட்களில் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார்)

“அதாவது ஹவுஸ் அரஸ்ட் (வீட்டு காவல்) போல?”

“ஆம். ‘ஜனாதிபதிக்கு பாதுகாப்பு’ என்ற பெயரில் ஆளை நகரமுடியாதபடி செய்யலாம். இது, அவசியம் ஏற்பட்டால்தான். எமது திட்டத்தில் big man இடையூறு எதுவும் செய்யாமல் இருந்தால், ஹவுஸ் அரஸ்ட் தேவையே இல்லை.”

“அதாவது இது பேக்கப் பிளான்?”

“ஆம்”

‘ஆபரேஷன் இறுதித் தீர்வு’ இனக் கலவரம் ஏற்படுத்தும் திட்டத்தின் ஏற்பாடுகள் பற்றி டிஸ்கஸ் பண்ணப்பட்டதுடன், அன்றைய ரகசிய சந்திப்பு முடிந்தது.

அன்றைய இரவின்போது, அவர்களது திட்டத்தில் முடிவு செய்யப்படாமல் இருந்த முக்கிய விஷயம்-

கொழும்புவில் தமிழர்களுக்கு எதிராக இனக்கலவரம் தொடங்கப்போகும் தேதி.

அரசு கெஸ்ட் ஹவுஸில் ரகசியமாகச் சந்தித்து கொண்ட எட்டு பேரும் கலைந்து, வெவ்வேறு திசையில் போய்விட்டார்கள். அந்த எட்டு பேரில் ஒருவரை மாத்திரம் பின்தொடரவேண்டிய கட்டாயத்தில் நாங்கள் இருக்கின்றோம். அப்போதுதான் அவர் என்ன செய்தார் என்று தெரியும்.

நாம் பின்தொடரப் போகும் நபர் ஒரு அரசு உயரதிகாரி. இன்னும் கொஞ்சம் ஆழமாகச் சொல்ல வேண்டுமா? சொல்கிறோம்.

நிலம், நில மேம்பாடு மற்றும் மஙாவலி மேம்பாடு அமைச்சில் (Land, Land development & Mahaweli development ministry) பணிபுரிந்த அதிகாரி அவர். (மஹாவலி என்பது, இலங்கையின் பெரிய ஆறு) அந்த அமைச்சில், அமைச்சரின் செயலாளருக்கு அடுத்த கிரேட் பதவியில் இருந்தவர். ஐ.தே.கட்சியின் அனுதாபியாக தன்னைக் காட்டிக்கொண்டவர் (இப்பொது ஓய்வு பெற்றுவிட்டார்).

கெஸ்ட் ஹவுஸில் இருந்து கிளம்பிய அவர், நேரே தனது வீட்டுக்குப் போகவில்லை.

அந்த நாட்களில் அவர் ஒரு ஸ்கூட்டர் வைத்திருந்தார். அதில் ஏறி கொழும்பு, கொள்ளுபிட்டிய என்ற இடத்தில் இருந்த உணவு விடுதி ஒன்றுக்குச் சென்றார்.

இந்த உணவு விடுதி, இந்தியர் ஒருவருக்குச் சொந்தமானது.

பெரும்பாலான கொழும்புவாசிகளுக்கு அது கொழும்பு சராசரியைவிட விலை அதிகமான, வட இந்திய உணவுகளுக்கு பிரபலமான உணவகம் என்று தெரியும். அவர்களில் பலருக்கு தெரியாத விஷயமும் ஒன்று இருந்தது. அது என்னவென்றால், அந்த வட இந்திய உணவகம்தான்-

இந்திய உளவுத்துறை ‘ரா’வின் கொழும்பு மீட்டிங் பாயின்ட்!

அந்த நாட்களில் (1980களின் ஆரம்பத்தில்) அந்த உணவகத்தில் அடிக்கடி காணப்படும் ஒரு நபர் திலக். இவரது முழுப்பெயர் என்னவென்று தெரியாது. உணவகத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருடனும் பரிச்சயமானவர். எல்லோரும் அவரை ‘திலக்ஜீ’ என்று அழைப்பார்கள். அவர் வட இந்தியர் என்று சொல்வார்கள். ஆனால் அட்டகாசமாக கோவை பக்கத்து தமிழ் பேசுவார்.

இந்த ‘திலக்ஜீ’ தெரிந்த முகமாக உள்ளதே… இவரை நாம் வேறு எங்கோ பார்த்திருக்கிறோம் அல்லவா? ஆம். பகல் நேரங்களில் கொழும்புவில் உள்ள இந்திய தூதரகத்தில், சபாரியுடன் தென்படும் அதே திலக்தான் இவர்.

திலக் ஒரு ‘ரா’ அதிகாரி.

அரசு கெஸ்ட் ஹவுஸில் இருந்து வந்த உயரதிகாரி இந்த வட இந்திய உணவகத்துக்கு வந்து திலக்கை சந்தித்தார்.

இருவரும் உணவு அருந்தியபடி பேசிக்கொண்டார்கள். அப்போது திலக்குக்கு ‘ஆபரேஷன் இறுதித் தீர்வு’ திட்டம் பற்றி, தெரிவிக்கப்பட்டது.

திட்டத்தை முழுமையாக கேட்ட திலக், “சீரியசாக இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட போகிறதா? அல்லது சும்மா ஒரு திட்டம்தானா இது?” என்று கேட்டார்.

“அது தெரியாது. ஆனால் அமைச்சர்கள் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள் என்பதால் திட்டம் செயல்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது.”

“இருந்தாலும் ஒரு அரசு, இப்படியான இனக்கலவரம் ஒன்றை திட்டமிட்டு நடத்தும் என்று நான் நம்பவில்லை. இவர்கள் சும்மா பேசிக்கொள்வார்கள். எதுவும் நடக்காது. எனிவே, உங்கள் தகவலுக்கு நன்றி” என்றார் திலக்.

அன்றிரவு திலக் இப்படி தமது அவநம்பிக்கையை காட்டிக் கொண்டாரே தவிர, கிடைத்த தகவலை அலட்சியமாக விட்டுவிடவில்லை.

இதை எப்படிச் சொல்கிறோம் என்றால், மறுநாள் மதியம் கொழும்புவில் இருந்து சென்னை சென்ற இந்தியன் ஏர்லைன்ஸின் IC574 இலக்க விமானத்தில் திலக் பயணம் செய்தார். சென்னையை அடைந்த அவர், உடனே மற்றொரு இந்தியன் ஏர்லைன்ஸின் விமானம் மூலம் அவசரமாக டில்லி புறப்பட்டு சென்றார். (தொடரும்

Share.
Leave A Reply

Exit mobile version