இப்படித்தான் ரஜினி மோடி சந்திப்பு மகா கேவலமாக மேலே விவரித்தபடி நடந்திருக்கிறது. மேலும் 90-களின் இறுதியில் ரஜினிக்கு பெரிய வாய்ஸ் இருப்பதாக ஊடகங்கள் கொடுத்த பில்டப்பை நம்பிய ரஜினி அப்போதும் அரசியலுக்கு வரும் தைரியத்தையும், உழைப்பையும் பெற்றிருக்கவில்லை.

திரைப்படங்களில் சுறுசுறுப்பாக அதுவும் கிராபிக்ஸ் உதவியுடன் மின்னிய சூப்பர் ஸ்டார், நிஜத்தில் அச்சமும், அறியாமையும் கலந்த ஒரு சோம்பேறித்தனமான காரியவாதி மட்டுமே.

அவருக்கென்று தனியாக செல்வாக்கு ஏதுமில்லை என்பதாலேயே 2004 தேர்தலில் அவர் அதிமுக – பாஜகவிற்கு ஆதரவு கேட்டும் ஒரு சீட்டு கூட தமிழகத்தில் கிடைக்கவில்லை. அத்தோடு ரஜினிக்கு ப்யூஸ் போய்விட்டது. இருப்பினும் அவ்வப்போது ஊடகங்கள் மட்டும் அவருக்கு உயிர் கொடுத்து வந்தன.

ஆக இன்று ரஜினியிடமிருந்து ஒரு கட்சிக்கு வாக்கு கிடைக்க வேண்டுமென்றால் அது ரஜினி, லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா என்று நாலு ஓட்டு மட்டும்தான் கிடைக்கும். பிறகு ரஜினி வீட்டை பாதுகாக்கும் செக்யூரிட்டிகள் கூட அவரது வாய்சுக்காக ஓட்டும் போட மாட்டார்கள், சினிமாவுக்கு  சீட்டும் எடுக்க மாட்டார்கள்.

ஆனாலும் சோ, விகடன், இந்து, குமுதம், தினமலர் முதலான பார்ப்பனிய ஊடகங்கள் சூப்பர் ஸ்டாருக்கு சோப்பு போடுவதோடு அவருக்கென்று செல்வாக்கு இருப்பதாக மாயையை உருவாக்க முயல்கின்றன. அதை பாஜகவிற்கு பயன்படுத்தவும் விரும்பின.அந்த அடிப்படையில்தான் இந்த எச்சக்கலை டீ சந்திப்பு  நடந்திருக்கிறது.

ஆனாலும் ரஜினி அதை மறக்க முடியாத எச்சக்கலையாக மாற்றி விட்டார். வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருந்தால் பலரும் எதிர்ப்பார்கள், குறிப்பாக இசுலாமியர்கள் எதிர்ப்பார்கள், ஆப்கானிலிருந்து அல்கைதா ஏதும் வந்து குண்டு வைத்து விட்டால் என்ன ஆகும் போன்ற பயமெல்லாம் ரஜினிக்கு இருக்காது என்பதல்ல.

ஆனால் அவர் இமயமலை போகிறார், பாபாவைப் பற்றி பேசுகிறார், ஆன்மீகம் படிக்கிறார், துக்ளக் கூட்டத்திற்கு தவறாமல் வருகிறார், இதற்கு முன் அத்வானியை ஆதரித்திருக்கிறார், அவர் இயல்பான இந்துத்துவ ஆதரவாளர் என்று பாஜக வானரங்கள் நம்புவதில் குறையில்லை.

இருப்பினும் அம்மா விருப்பத்திற்கு மாறாக நடந்தால் பிழைக்க முடியாது என்ற பயமும் ரஜினிக்கு உண்டு. வடிவேலு போல இழப்புகளை தாங்கிக் கொள்ளும் உறுதி இவருக்கு கிடையாது.

ஆக இவை அனைத்தும் கூடித்தான் இந்த சந்திப்பை காமடியாக மாற்றியிருக்கிறது. ஆனாலும் பாஜகவும், மோடியும் தங்களது வெற்றிக்காக கேப்டன் பின்னாலும், சூப்பர்ஸ்டார் பின்னாடியும் ஓசிக்கறிக்கு அலையும் ஒரு சொறி நாயைப்ப போல அலைகிறார்கள் என்பது முக்கியம். இவர்தான் வருங்கால பிரதமர் என்று முன்னிறுத்தப்படுகிறார் என்றால் தில்லானா மோகனாம்பாள் வைத்திக்களே பிரதமராக வரலாமே?

எது எப்படியோ இந்த சந்திப்பின் மூலம் பாஜகவையும், மோடியையும் செருப்பால் அடித்த்து போல ஒரு எஃபெக்ட் கொடுத்ததற்கு ரஜினியை நாம் பாராட்டத்தான் வேண்டும்.

மற்ற மாநிலங்களில் விஐபிக்கள் மோடியை தேடி வந்து ஆதரிக்கிறார்கள். இங்கு மோடியே தேடி வந்து ஆதரவு பிச்சை கேட்டாலும் கிடைக்கவில்லை. இதுதாண்டா பெரியார் பிறந்த மண்!

இதற்கு மேல் ரஜினி வீட்டில் ராகுல் காந்தி வந்து பானி பூரி சாப்பிட விரும்பினாலும், மு.க.ஸ்டாலின் வந்து அவிச்ச வேர்க்கடலை சாப்பிட முனைந்தாலும், அவ்வளவு ஏன் நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக்கே மோர் அருந்த வந்தாலும் ரஜினி வரவேற்பார், மோடிக்கு சொன்னது போல அவர்கள் விரும்பியது நிறைவேற ஆண்டவனிடம் பிராத்திப்பதாகவும் சொல்வார்.

சரி எல்லாரது விருப்பங்களிலும் எது நிறைவேறும் என்று கேட்டால் “ அது அவன் கையில், என் கையிலில்லை” என்று மேலே பார்த்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்? இது எப்படி இருக்கு?

-வினவு-